Friday, November 1, 2013

தங்கையின் தம்பி


தங்கையின் தம்பி

சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் தங்கள் முகங்களை காட்டுவதில்லை. ஒரு சில இந்திய பெண்களும் கூட.. ஏன்... ஏனைய நாட்டுப் பெண்களும் கூட . இப்படித்தான் ஃபேஸ்புக்கில் தயாளனுக்கு அறிமுகமானாள் யவனிகா.

இது ஒரு சமூக வலைத்தளம் என்பதால் யார் வேண்டுமானாலும் அவர்களது படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு விடலாம் . அப்படி பதிவிறக்கம் செய்பவர்கள் அயோக்கியவர்களாகவும், வக்கிர புத்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களேயானால் அந்தப் படத்தை கணினியின் மூலம் ஒருசில மென் பொருட்களை பயன்படுத்தி எப்படி அலங்கோலமாகவும் அவர்களை காட்டிவிடமுடியும் . இப்படியான பாதிப்புகள் ஆண்களை பெருமளவில் பாதிப்படைய செய்வதில்லை. இந்த பாதுகாப்புக் கருதியே பெரும்பாலான பெண்கள் பிரபலமான நடிகர், நடிகையர் மற்றும் பிரபலமான நபர்களது படங்களை அல்லது தனக்குப் பிடித்த படங்களை அடையாளப் படமாக வைத்திருப்பார்கள்.

இப்படித்தான் இரண்டு கண்களை மட்டும் விழித்தவாறு இருந்த ஒரு கலர் படத்தை அடையாளப்படமாக வைத்திருந்தாள் யவனிகா.. அந்த கண்களுக்கு ஏதோ ஒரு காவியனோ, காவினியோ தன் கரங்களாலோ, கணினியாலோ உயிர் கொடுத்திருந்தார்கள். அந்த கண்கள் படத்தின் இமைக்கு மை தீட்டப்பட்டு இருந்தது . புருவத்திற்கு அடர்த்தியாக அதிக முடி சேர்க்கப்பட்டிருந்தது. கண்டிப்பாக அது யவனிகாவின் காதல் கணவன் மஹீதரனால் வரையப்பட்ட கண்கள் இல்லை . அப்பொழுது மஹீதரனுக்கும் ,யாவனிக்கவிற்கும் பார்வைகள் இருந்திருக்கவில்லை. அந்த கண்கள் யாவனிகாவின் உயிர் அண்ணன் தயாளனின் காதல் மனைவி கண்ணம்மா வின் கண்களாக கூட இருந்திருக்கலாம். 

தயாளனுக்கும் யவனிகாவிற்குமான நட்பு மலர்ந்த அன்றே , தயாளன், யவனிகாவிடம் “இன்றுமுதல் நீ என் தங்கையாகிறாய்” என்று சொல்லியதும், அருவியிலிருந்து விழும் நீர் போல குதூகலித்து வார்த்தைகளால் “ஐ..........” எனக் கத்தினாள். அவளுடைய அந்த குதூகளிப்பு எனக்கும் அண்ணன் இருக்கிறான் என்றது போலிருந்தது. பின்நாட்களில் இந்த நட்பு அலைபேசியில் பேசிக்கொள்ளும் வகையில் நம்பிக்கை வேர் பரப்பியது. 

யவனிகா தயாளனிடம் பேசும்போதெல்லாம் தன் அப்பாவைப் பற்றியும் , தம்பியைப் பற்றியுமே சொல்லிக்கொண்டிருந்தாள். அவளது அம்மாவைப்பற்றி சொல்லவில்லையே என்று தயாளனுக்கு தோன்றியது . அவள் அம்மாவைப்பற்றி கேட்பதா ? வேண்டாமா? என்ற தயக்கத்தில் ஒரு நாள் அம்மாவைப் பற்றி சொல்லவே இல்லையே யவனிகா நீ ? என்று கேட்ட தயாளனுக்கு அவளிடமிருந்து வந்திருந்த பதில் என்னவாக இருந்திருக்கும்...?

பின்பனிக்காலத்தில் ஆதவனின் ஆளுகைக் குள்ளிருந்த அண்டவெளியை, ஆலங்கட்டி மழை உடைத்து சிதற்றியது போல இவன் எதிர் பார்த்திராத பதிலை எந்தத் தயக்கமுமின்றி போலியான துணிச்சலை போர்த்திக்கொண்டு சொன்னாள் , “இப்போதான் ஒரு வாரம் ஆகுது போய் சேர்ந்துட்டாங்க” என்று. நம்ப முடியாதவனாய் அதிர்ச்சியில் உடைந்து போன தயாளன் தன்னுடைய அம்மா இறந்து போனதை யாராவது இப்படிச் சொல்வார்களா ? இவ்வளவு துணிச்சலாக... அதுவும் ஒரு வாரத்திற்குள் !?. இந்த சிறிய வயதில் தன் தாயைப் பறிகொடுத்த செய்தியை யாரும் இவ்வளவு துணிச்சலாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கவில்லை தயாளன். அவள் சொன்ன சிறிது நேரத்திற்கு பேசும் திறனவற்றவனாய் மாறி இருந்தான் . யவனிகா ஏதோ விளையாட்டிற்கு சொல்கிறாள் என்று அவனால் எண்ணிக்கொள்ள முடியவில்லை . என்ன யவனிகா உண்மையாகத்தான் சொல்றியா ? என்று அவளிடம் மறுபடியும் வலியுறுத்திக் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்க்கும் செய்தியாகவும் இல்லை . இறப்புச்செய்தியில் பொய் இருக்காது என்று நம்பினான் . அன்றிரவு அவனது உறக்கம் அவனிடம் வந்து சேராமல் சதுப்புநில காடுகளுக்குள்ளும், செங்கடல் கரையில் நின்று அது உமிழும் அலைகளை மிதித்தபடியும் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது .

தயாளன் இப்படித்தான் மற்றவர்கள் துன்பத்திற்காக தன்னுடைய உறக்கத்தை தேசம் கடந்தும், கண்டங்கள் தாண்டியும் அலைய விட்டுக் கொண்டிருப்பான் . மற்றவர்களது துயரங்களை செவி நுழைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவனது உறக்கம் கடவுச்சீட்டு இல்லாமல் எட்டிய தேசங்கள் எல்லாவற்றிற்கும் சென்று திரும்பியிருக்கிறது. 

அன்று வரை யவனிகாவை தன் உடன்பிறவா தங்கை என்று அழைத்து வந்தவன். தங்கை மட்டுமல்ல மகளென்றும் நினைத்துக் கொண்டான் .

ரஞ்சித் எப்போதும் நண்பர்களையும் , விளையாட்டுகளையும் கட்டிக்கொண்டு திரிவது... பார்ப்பவர்களில் சிலரையாவது வெறுப்படையச் செய்திருக்கும். அவனது வீட்டினருக்கோ அல்லது அவன் கூட்டிக்கொண்டு திரியும் அவனது நண்பர்களின் வீட்டினருக்கோ இவன் மீது எரிச்சல் உண்டாகியிருக்கும். அப்படி பொறுப்பற்றவனாய் எப்போதும் ஊர் சுற்றித் திரிபவன். படிப்பைப்போலவே சாப்பாடும் அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அந்தியில் கூடடையும் பறவைகளைப் போல் இரவு படுக்கைக்குமட்டும் வீட்டிற்கு வந்தால் போதும் என்று நினைப்பவன். ஒரு முறை பின் வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய நண்பனான சைமனின் அம்மா, “என்ன ரஞ்சித் உங்க வீட்ல உன்ன கண்டிக்கவே மாட்டாங்களா ? பொழுதனைக்கும் இவனையும் கூட்டி கூட்டிக்கிட்டு விளையாட போயிடுற ? இவனோட படிப்பயும்ல சேத்து கெடுக்குற நீ ?” என்று சொன்ன வார்த்தைகள் ரஞ்சித்தின் அப்பா காதில் ஈட்டியாய் பாய்ந்தது.

எருமை மாட்டின் மீது மழை பெய்தால் பொருட்படுத்தாமல் போகுமே.... அதைப்போல விளையாட்டாக எடுத்துக்கொண்டு ஏதோ பதில் சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறான். தன் மகனைப் பற்றிய குத்தீட்டி சொற்கள் தன் காதுகளில் செருகியிருந்ததால் வார்த்தைகளின் வலியை குறைய விடாமல் “பேரக் கெடுக்கிரியேடா படுபாவி பயலே” ன்னு அவருடைய முழு கோபத்தையும் பூவரச மரப்பிரம்பால் காட்டிக்கொண்டிருக்கையில் ரஞ்சித்தின் அக்கா, கோழிக்குஞ்சினை கொத்திப்போக தாழப் பறந்து வட்டமிடும் வல்லூறு  விடமிருந்து காப்பாற்றும் கோழியைப் போல குறுக்கே விழுந்து ரஞ்சித்தை அனைத்துச் செல்கிறாள். 

அப்பாவின் சட்டைப் பையில் அவ்வப்போது காசு எடுத்தும், அம்மாவின் சேமிப்பை லவட்டியும் விட்டதில் அவ்வப்போது மாட்டிக்கொண்டு அடிவாங்குவதும் பழகிப்போயிருந்தது ரஞ்சித்துக்கு . எழுதப்படாத புதிய அன்ரூல்டு நோட்டு தாள்களை கிழித்து ராக்கெட் செய்து விட்டு விளையாடியும், அப்பாவிடம் அடிவாங்கியிருக்கிறான். ஒரு முறை தான் வைத்திருந்த பட்டத்தின் ஜக்கிரி நூலுக்கு மாஞ்சா போட மற்றொரு நண்பன் கோயிந்துவிடம் யோசனை கேட்கிறான்.

கோயிந்து : டேய் கழிச்சா கொட்ட , மயில் துத்தம், வஜ்ஜிரம் இதெல்லாம் நாட்டு மருந்து கடையில வாங்கிடலாம். ஆனா ஒரே ஒரு மேட்டர் மிஸ்ஸிங் .

ரஞ்சித் : என்னடா அது .

கோயிந்து : கண்ணாடி மட்டும் வேணும், சவுண்ட் சர்வீஸ் காரான் டியூப்லைட்ட தொடவுட மாட்டேங்கிறான். ஃபீசா போனத வச்சி என்ன பண்ண போறான்டா அவன் ? படித்துறை சத்திரத்து சாமியார் கோயில் பிரசாதம் வாங்கப் போறப்போ வெரட்டுவாங்களே... அப்புடி வெரட்டி அடிக்கிறான்.

ரஞ்சித் : ஏண்டா டியூப் லைட் தான் வேணுமா ? பாட்டிலா இருந்தா குப்பையில பொறுக்கிடலாம்.

கோயிந்து : ஹே..... போடா வெண்ண.... எங்களுக்கு தெரியாதா குப்பையில பொறுக்க ....? வந்துட்டாரு டீடெயில் சொல்ல.... டியூப் லைட்ட அரச்சி மாஞ்சா போட்டு பாரு..... எத்தன பட்டம் பறந்தாலும், எவன் எப்புடி மாஞ்சா போட்டுருந்தாலும் சும்மா கத்தி மாதிரி அறுத்து வுட்டுட்டு நம்ம பட்டம் மட்டும் கும்.....முன்னு பறக்கும்.

ரஞ்சித்: ட்ரை பண்ணுவோம்டா கோயிந்து. இது ஒரு மேட்டரா ? விடு விடு.... நாளைக்கு தான மாஞ்சா போட போறோம். அதுக்குள்ளே கிடைக்காமலா போய்டும். என்று சொல்லிக்கொண்டே இருவரும் அவரவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுகின்றனர்.

மறுநாள் பள்ளிக்கூடம் சென்ற ரஞ்சித்தின் முழுக் கவனமும் பட்டத்தின் நூலுக்கு மாஞ்சா போட டியூப் லைட் எப்படி, எங்கிருந்து எடுப்பது என்பது பற்றியதாகவே இருந்தது. ஒன்பது ஐம்பதுக்கு பள்ளியின் மணி அடிக்கப்பட்டு அனைவரும் இறைவணக்கத்திற்காக கூடியிருந்தனர். விளையாட்டு ஆசிரியர் அன்றைய தினம் விடுப்பில் இருந்ததால் வரவில்லை. அதன் பொறுப்பை உதவித்தலைமை ஆசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார். இறைவணக்கம் முடிந்து அனைவரும் களைந்து செல்கையில் திடீரென ஏற்ப்பட்ட மாரடைப்பில் உதவித்தலைமை ஆசிரியர் சரிந்து விழவே, மருத்துவமனை கொண்டு சென்று பலனில்லாமல் மரணித்ததின் பொருட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டு விடுகிறது.

மரணச்செய்தியை பள்ளியின் பால்ய பருவம் கொண்டாடும் அளவிற்கு எப்பருவமும் கொண்டாடிவிட முடியாது. சற்று நேரத்தில் நண்பர்கள் புடை சூழ வீடு திரும்பிக்கொண்டிருக்கிறான் ரஞ்சித். பட்டத்தின் நூலுக்கு மாஞ்சா போட டியூப் லைட் கிடைக்கவில்லை. வெகுநேரம் யோசித்த ரஞ்சித், தன் வீட்டிலுருந்த ஒரு ஸ்டூலை தூக்கி அடுப்படியில் எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டை கழற்றி விட்டான் . அவளது அக்கா எதற்கு என்னவென்று கேட்டும் “நீ சும்மாரு எங்களுக்கு தெரியும்” என்று சொலிவிட்டு எடுத்து சென்று விட்டான்.  

டியூப் லைட் கண்ணாடியை குளத்தங்கரை படிக்கட்டில் வைத்து ஒரு குழவியால் அரைத்து முடிப்பதற்குள் இரண்டு காதுகளுக்குள்ளும் இரண்டு உலகப்போர்கள் நடந்து முடிந்திருந்தது அவனுக்கும் கூட இருந்த நண்பர்களுக்கும். அந்த அசதி அடங்குவதற்குள் ரஞ்சித்தின் அப்பா அவர் பங்குக்கு அவனது முதுகில் ஒரு வழித்தாக்குதளுக்கான ஒரு குட்டி போரை நிகழ்த்தி இருந்தார். திமிரி எதிர்க்க திராணியும் துணிச்சலும் இல்லாது வாங்கிக்கொண்டான். “ மாஞ்சா போட வூட்ல எரிஞ்சிக்கிட்டு இருந்த டியூப் லைட் கேட்க்குதா உனக்கு” ன்னு . அவர் திட்டிய வார்த்தைகள் எல்லாம் அவன் காதில் நுழையவே இல்லாமல் இருந்தது.

தன் வீட்டிற்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா இப்படி வந்து கொண்டிருந்த அந்த மாலைப் பொழுதில் ரஞ்சித் யாரையும் கண்டுகொள்ளாமல் மெல்ல நழுவி நண்பர்களுடன் விளையாட வந்திருந்தான் . அவனது நண்பர்களில் ஒருவனான சைமன் , டேய் ரஞ்சித்து என்னடா இன்னிக்கும் விளையாட வந்துருக்க ? 

ரஞ்சித் : நாந்தான் டெய்லி வருவனே. இன்னிக்கு மட்டும் என்ன புதுசா கேட்கிற ?

ராமன் : டேய் உனக்கு தெரியாதா ? உங்க வீட்டுக்கு விருந்தாளி எல்லாம் வந்திருக்காங்க தானே ?

ரஞ்சித்: ஆமா .... விருந்தாளின்னாலே நான் வெளில வந்துடுவேன்னு உனக்கு தெரியாதா ? என்ன மார்க் வாங்குன ? எத்தனையாவது ரேங்க் எடுத்தன்னு ஆளாளுக்கு கேட்டு உயிர எடுத்துடுவாங்க . பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும். ஆனா அப்புடி சொல்ல எனக்கு தெரியாது. கன்னாபின்னான்னு பயத்துல ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு மாதிரி சொல்லிபுடுவேன். அதுக்கு இப்புடி எஸ்கே.........ப். நு ஓடி வந்துருவேன்.

ரஞ்சித்துடன் 2 வயது இளையவனான சைமன், கூட்டத்திலிருந்த ரஞ்சித்தை தனியாக அழைத்து சென்று அவனது காதில், “டேய்..... உங்க அக்கா வயசுக்கு வந்துட்டாங்களாம் . அதான் உங்க வீட்டுக்கு விருந்தாளி நிறைய பேர் வந்துருக்காங்க உனக்கு தெரியாதா ? எங்கப்பாட்ட எங்கம்மா சொல்லிட்டு இருந்தாங்க . நான் அப்பாகிட்ட என்னம்மா சொல்லிட்டு இருந்தேன்னு கேட்டேன் அம்மா என்னைய திட்டி அனுப்பிட்டாங்க”. என்றதும் ரஞ்சித்தின் முகம் மாறியது... நம்மைவிட 2 வயது சிறியவனுக்கு... அதுவும் நம்ம வீட்டு விஷயம் தெரிஞ்சிருக்கு... நமக்கு தெரியலயேன்னு யோசித்தவன், இலைகளற்ற பட்டமரத்தில் சிக்கிக்கொண்ட பட்டம் போல காற்றில் சிதிலப்படுவதாக தன்னை உணர்ந்தான். 

குற்ற உணர்வுடன் வெளிப்படுத்த இயலாத விம்மலுடன் கால்கள் பின்ன நடந்து வீடு வந்து சேர்ந்திருந்தான் ரஞ்சித். அவனது வீட்டில் கவலைக்கும் கலகலப்புக்கும் இடையிலான சதுரங்கப் போட்டியில் ஒன்றுக்கொன்று வெட்டியும் வெட்டிக்கொள்ள முடியாமலும் நீண்டு கொண்டிருந்தது. அங்கு ரஞ்சித்தின் அப்பா அவரது தங்கையிடம் தனியாக அழுதுகொண்டிருந்தார். “ஒரு மாசத்துக்கும் முன்னாடியே எம்மக பெரிய மனுசியாகியிருந்தா உங்க அண்ணியாவது பாத்துருப்பா . இன்னிக்கு இருந்தா எவ்வளவு சந்தோச பட்ருப்பா . எவ்வளவு சிறப்பா செஞ்சிருப்பா விழாவ.” அப்டின்னு .

பெரும் புயலும், ஆழிப் பேரலையும் கொடுத்துச்சென்ற பாதிப்பை தன் மண்டையோட்டுக்குள் உணர்ந்தவனாய். சலனமற்ற அலையில் தத்தளிக்கும் ஒற்றைப் படகைப் போல அமைதி கொண்டிருந்தான்.

பின்னொரு நாளில் ஏதோ ஒரு அலைபேசியிலிருந்து மற்றொரு அலைபேசிக்கு ஒரு அழைப்பு செல்கிறது. அழைப்பை பெற்றுக்கொண்டவரது காதில் , “அண்ணா ... அப்பா ஆஃபீஸ் போயிட்டு வரும்போது வண்டி சறுக்கி கீழ விழுந்துட்டாங்கன்னா...வலது கால் மணிக்கட்டு லேசா நழுவிடுச்சாம். இப்போ தான் கட்டு போட்டுட்டு வந்துருக்காங்க. கொஞ்ச நாள் நடக்காம ரெஸ்ட்ல இருக்கனுமாம் . தம்பி தான் ஆஸ்பிடல் அழைச்சுட்டு போயிட்டு வந்தான். அப்பா ரூமா சுத்தம் பண்ணி , கட்டில தூக்கி அப்பா சவுகர்யத்துக்கு போட்டுக் கொடுத்து , டிவி எந்த வியூவ்ல வைக்கனும்னு கேட்டு வச்சிக்கொடுத்து, அப்பாவுக்கு தேவையான பொருள பக்கத்துல கொண்டாந்து வச்சிக்கொடுத்து . அடிக்கடி அவர பொறுப்பா கவனிச்சிக்கிரான்னா .......” என்று மகிழ்ச்சி பொங்கிய குரல் கேட்க்கிறது.

அலைபேசியில் அழைப்பு விடுத்தவள் யவனிகா....

அழைப்பை பெற்றுக்கொண்டவர் தயாளன்....

அலைபேசியில் தம்பி பொறுப்புடன் நடந்து கொள்கிறான் என்று பெருமையுடன் யவனிகா சொன்னது ரஞ்சித்தைப் பற்றி .

2 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்த மாதிரி நிகழ்வு பெரும்பாலான வீடுகளில் நடப்பது தான். அழகா விவரிச்சிருக்கீங்க சிவா

    ReplyDelete