Saturday, November 23, 2013

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே...

விஸ்வநாதன் ஆனந்த்... இந்திய சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ராஜீவ் காந்தி கேல்ரத்னா, மற்றும் அர்ஜுனா விருது. மற்றும் உலகின் ஆஸ்கார் போன்ற பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

சதுரங்க விளையாட்டில் ரஷ்யர்களின் ஆதிக்கத்தை உடைத்து, சதுரங்க உலகின் ராஜாவாக ஐந்துமுறை முடிசூடிக்கொண்டவர், ஆறாவது முறையாக அந்த பட்டத்தை தனது சொந்த மண்ணிலேயே, நார்வே நாட்டை சார்ந்த மேக்னஸ் கார்ல்சனிடம் 6.5 புள்ளிகளுடன் தவறவிட்டுள்ளார்.

உலகளவில் சதுரங்க விளையாட்டில் நகர்த்தமுடியாத ராஜாவாக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.

கடந்த காலங்களில் விஸ்வநாதன் ஆனந்திடமே உதவியாளராக இருந்த கார்ல்சன், அவரது விளையாட்டு நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து இன்று அந்த சிங்கத்தின் குகைக்குள்ளேயே அந்த சிங்கத்தை சாய்த்திருப்பது விஸ்வநாதன் ஆனந்துக்குமே கூட அதிர்ச்சியாக இருக்கலாம்.

விளையாட்டுகளில் வெற்றியும் தோல்வியும் இரு முனைகள் தான். இருப்பினும் எந்த ஒரு வீரனும் தான் தோல்வியுறுவதை விரும்புவதே இல்லை. தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்த விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்த தோல்வி சற்றே மன உளைச்சலை கொடுத்திருக்கும்.

அதுவும் தனது சொந்த மண்ணில் தனது ரசிகர்களையும், மக்களையும் தனது தோல்வி  சோர்வடைய செய்துவிட்டதாக கூட அவர் உணரலாம். வயதுமூப்பின் காரணமாக தன்னால் சிந்திக்க முடியவில்லை என்று கூட உணரலாம். இதெல்லாம் சரி என்பது போலவே ஆனந்தின் ஆட்ட நகர்த்தலும் இருந்திருக்கிறது.

இப்போட்டியில் 7 சுற்றுகள் டிராவில் முடிந்திருக்கிறது. 3 சுற்றுகளில் ஆனந்த் தோல்வியை தழுவியிருக்கிறார். இத்தொடர் முழுவதும் கார்ல்சன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருப்பதாக நிபுணர்கள் சொன்ன கருத்தை ஆனந்தும் ஆமோதித்திருக்கிறார்.

மேலும் இதற்க்கு முன்னரான உலக சாம்பியன் போட்டிகளில் ஆனந்த்துடன் மோதிய வீரர்கள், "இந்த போட்டிகள் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. அவ்வளது எளிதாக என்னால் காய்கள் நகர்த்தலை கையாள முடியவில்லை. ஆனந்த் உடனான இந்த போட்டி ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது .” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவுமே மேக்னஸ் கார்ல்சன் சொல்லவில்லை.

ஆனந்திடம் விளையாடியது சற்று சிரமமாகவே இருந்தது என்று பெயரளவில் மட்டுமே கார்ல்சன் சொல்லியிருந்தாலும். ஆனந்த் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். சதுரங்க விளயாட்டில் இது நிகழ்வது தான். என்றாலும், ஐந்து உலக சாம்பியன் பட்டங்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருக்கும் ஆனந்த் என்ன தவறு செய்தார் என்பதை பின்னாளில் வரும் போட்டிகளில் திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஐந்து உலக சாம்பியன் பட்டம் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க விளையாட்டு அனுபவங்களை கூட வயதாக அடையாத மேக்னஸ் கார்ல்சன் , விளையாட்டின் போது எந்த வித பதர்ஷ்டமுமே இல்லாமல் மிக சாதாரணமாகவே காணப்பட்டார்.  அவரது இந்த வெற்றி அவரது வாழ்வில் மிகமுக்கியமான வெற்றியாகவே இருக்கும். இன்னும் 20 வருடங்களுக்கு  யாரும் அசைத்துவிட முடியாத சதுரங்க ஆட்டக்காரராக திகழ்வார் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறது.

திறமையும் உழைப்பும் எங்கிருந்து வெற்றியடைகிறதோ அதை நாம் தூரநின்று ஊக்கப்படுத்தவும்,
உற்சாகப் படுத்தவும் வேண்டும். இது நாம் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. அந்த வகையில்
மேக்னஸ் கார்ல்சனுக்கு நமது வாழ்த்துக்கள்.

பல பட்டங்களை வென்று அனுபவங்களாக குவித்து வைத்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்த்
அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவரை உற்சாகப்படுத்துவோம்.

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே... சிறிது ஓய்விற்குப் பின் மீண்டும் வாருங்கள். மீண்டு வருவீர்கள்.


3 comments: