Saturday, November 16, 2013

வெறும்பயல்

வெறும்பயல்


மனிதக் கூட்டங்களுக்குள் விரக்தியின் மையப்புள்ளியாக மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஊர்ந்து சென்று, கும்பகோணம் செல்லும் பேருந்தில் இடதுபுற சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான் சோலையப்பன்.
நடத்துனரின் தடித்த குரலுக்கு மட்டும் அவன் செவி சாய்த்து கும்பகோணம் செல்வதற்கான டிக்கெட்டை பெற்றுக்கொண்டான்.

அவன் பிடிக்காமல் உதறித்தள்ளி வந்த வேலைகளுள் எத்தனையாவது வேலை இது என்று அவனுக்கே கூட தெரிந்திருக்காது. மூன்று மாதங்களாக பார்த்துவந்த மருந்து விற்பனை பிரதிநிதி வேலையையும் உதறிவிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. மனசுக்கு புடிக்காத வேலையில இருக்கதும் மனசுக்கு புடிக்காத மனைவியோட குடும்பம் நடத்துறதும் ஒண்ணுன்னு சுயம்புவாக பேசினான் என்னிடம்.

கட்டாயமாக படிக்கவைக்கப்பட்ட கல்லூரி படிப்பு சோலையப்பனுக்கு எந்தவிதத்திலும் பயன்படவில்லை. தன் மனதுக்கு பிடிக்காத வேலைக்குச் செல்வதற்கான ஒரு தகுதிச் சான்றாகவே அது அவனுக்கு பயன்பட்டது.

கும்பகோணத்தில் இறங்கி அவன் நேராக வீட்டிற்கு போகப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் நினைத்தது போலவே "டை" யும் "பை" யுமாக அவன் போய்க் கொண்டிருந்த இடம் நூலகமாக இருந்தது. "ஏண்டா... வீட்டுக்கு போயி bag எல்லாம் வச்சுட்டு டிரஸ் மாத்திட்டு போயேண்டா..." என்றேன். சிகரெட்டை ஊதியவாறு என்னை அகங்காரமாய் திரும்பிப்பார்த்து ஒரு முறை முறைத்தான். அவனின் அந்த முறைப்புக்கு எல்லாம் எனக்குத்தெரியும். அடங்கு... என்பது அர்த்தம்.

அவனது அப்பா அந்த நூலகத்தின் முன்னாள் உறுப்பினர். அவரது உறுப்பினர் அட்டையை இவன் புதுப்பித்துக் கொண்டே இருந்தான். நாங்களெல்லாம் கோவில், குளம், ஆறு, மைதானம், சினிமா என்று ஊர்சுற்றிக் கொண்டிருந்த நேரமெல்லாம் அவன் மட்டும் நூலகத்தில் கிடையாய் கிடப்பான். புத்தகப்பிரியன். விடுமுறை நாட்களில் நூலகர் வந்து திறக்கும் முன்னே இவன் அங்கு சென்று அமர்ந்திருப்பான். ஒரு சில நேரங்களில் மதிய சாப்பாட்டுக்கே வீடு வரமாட்டான். ஒரு சில நாட்களில் நூலகர், "சோலையப்பா... பூட்ர நேரம் வந்துருச்சி..." என்று கூட இவனை வெளியில் தள்ளியிருக்கிறார். எந்த நூலகர் வந்தாலும் ஒருவாரத்தில் இவனது பெயர் பரிச்சயப்பட்டுவிடும்.

வீட்டிற்கு வந்தபிறகும் தான் எடுத்துவந்திருந்த புத்தகங்களை படிக்கவும், அவ்வப்போது ஏதோ எழுதுவதுமாவே அவனது பொழுதுகளை கரைப்பான்.

எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற அவனது லட்சியத்திற்கு யாரும் உடன்படவில்லை. உடன்படவில்லை என்றால் ஊக்கப்படுத்தவில்லை. ஒரு முறை பிரபல வார இதழில் தனது கதை பிரசுரம் ஆகியிருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் சென்று காண்பித்தான். அதற்கு வீட்டில் உள்ளவர்கள், "ஒழுங்கா எங்கயாவது வேலைக்கு போயி சம்பாதிக்கிற வழிய பாரு... இப்புடி "வெறும்பயலா" சுத்தாத..." என்றார்கள்.

அப்போதிலிருந்து தான் இரண்டும் கெட்டான் மனநிலைக்கு போனது போன்ற விரக்தியில் எங்கேயாவது வேலைக்கு போவது. அவ்வப்போது எதோ எழுதுவதுமாக இருந்தான். எப்போதாவது செலவுக்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கேட்பான். அவன் கேட்கும் தொகை சிறியதாகவே இருக்கும். எனக்கும் கொடுப்பதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் இருந்தது.

ஒரு மார்கழி மாத கடும்பனி இரவில் சோலையப்பனிடமிருந்து எனது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. தாங்கமுடியாத இருமலுடன் என்னை உடனே தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். அவசரமாக கிளம்பிசென்றேன். அவன் தன் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு மாடியில் உள்ள ஒரு அறையில் தான் தங்கியிருந்தான்.

அந்த நேரத்தில் நான் சென்றதும் அவனது வீட்டில் உள்ளவர்களும் மாடி அறைக்கு வந்தனர். கொஞ்சம் மூச்சிவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். உடன் மருத்துவமனை அழைத்துச்செல்ல

ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தார் அவனது அப்பா. சற்று சுதாரித்து , சிரமப்பட்டு எழுந்து கொண்டவன் தனது ஒரு பெட்டியிலுள்ள மொத்தமான நோட் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்தான். அந்த நோட்டின் முதல் பக்கத்திலேயே எழுதமுடியாமல் கிறுக்கலாக ஒரு பதிப்பகத்தின் பெயரை எழுதினான்.

அதில் இந்த நோட்டை கொடுக்குமாறு சொல்லிக்கொண்டிருந்தபோது. ஆட்டோ வந்ததும் மருத்துவமனைக்கு பறந்தது ஆட்டோ.

அதிக புகைப் பழக்கத்தினால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான சோலையப்பன், தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஆறுமாதங்கள் கழித்து ஒரு நாள் காலையில் சோலையப்பன் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த அந்த மருத்துவமனையின் டிவி செய்தியில்,

கும்பகோணத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவர் "வெறும்பயல்" என்ற புனைபெயரில் எழுதி வெளிவந்திருக்கும் "மனித(ரில்)க் கழிவுகளா நாங்கள்" என்ற துப்புரவு தொழிலாளிகளின் வாழ்வியல் குறித்த நாவல் சாகித்ய அகாடமி

விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியை சொன்னதும்.

எந்தவித மகிழ்ச்சியையும் காட்டிக்கொள்ளமுடியாத சோலையப்பன் செய்தியை காதில் வாங்கியவனாய் இருமிக்கொண்டே இருந்தான்.

அவனதுஅம்மாவும்அப்பாவும்,அந்த செய்தியை காதில் வாங்கியவாறு தன் மகனின் நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

தன் அம்மாவின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் வெறித்துப் பார்த்த சோலையப்பனின் பார்வை, நீங்கள் பெற்றெடுத்த நான் வெறும்பயல் இல்லை என்பதை அவர்களுக்குள் குத்தியது.

சோலையப்பன் என்ற வெறும்பயலின் ஆன்மா அவனை விட்டு பிரிந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment