Saturday, November 30, 2013

2013 நவம்பர்-ல் facebook











நவம்பர் 2013 ல் facebook 

  • டார்வின் தியரியை பொய்யெனச்சொல்லவில்லை என் செயல்.
  • எனக்கும் எனக்கும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.
    ஜெயிக்கப்போவது யாரென்று தெரியவில்லை.
  • 64 பாகம் கொண்ட சங்கிலி கருப்பரை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இன்னும் கிடைத்தாரில்லை.
  • கார்பனும் நைட்ரஜனும் சேர்ந்து செய்த கலவை நான்.
  • ஒரு கவிதைக்கான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போதே
     அதற்கான வார்த்தைகளை தேடத்துவங்கிவிடு.
  • குடிக்க குடிக்க சுகம்.... சுடுதண்ணிய சொன்னேன்.
  • இந்த இரவு முடிவதற்குள் நிலாவை பற்றி ஒரு கவிதையாவது எழுதிவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
    நிலா
    அழகு
    கவிதை
    இந்த மூன்று வார்த்தைகளைத்தவிர வேறெதையும் நான் எழுதியிருக்க மாட்டேன்.
  • ஹலோ..சுதாகர் எப்டி இருக்க...
    சுதாகர் இல்லையே... நீங்க யாரு...?
    சென்னை நம்பர் தானே இது...?
    இல்லங்க நீங்க நம்பர் மாத்தி அடிச்சிட்டிங்க...
    சரி மன்னிச்சுருங்க...# மன்னிக்க தெரிஞ்சவனோட மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுஷன்.
  • மந்திரிசபை மாற்றம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு வரை. நான் போட்ட உத்தரவுகள் தூக்கத்தில் உளறியது என்ற செய்தி நாளை வருமானால் அ.தி.மு.க. வினரின் நேற்றைய விவாதம் கண்டு யாரும் சிரிக்கக்கூடாது.
  • கைகூடா காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கடைபிடிக்கவேண்டிய அதிக பட்ச நாகரீகம்.
    கள்ளமில்லா ஒற்றைப்புன்னகையுடன் கடந்துவிடுவது.
  • நிலா .
    ஒப்புவமையிலாஅழகுப் பெண்.
    இரவுகளுக்கு சொந்தக்காரி.
    நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்.
    கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
    இவளின்றி அமையாது கவிதை .
     # சுட்ட கவிதை... எங்கிருந்துன்னு கேட்கக்கூடாது.
  • இன்றைய சில நிகழ்வுகள் என் மண்டைக்குள் alprazolam மருந்தை செலுத்தியிருக்கிறது. நிம்மதியாய் தூங்குவேன்.
  • சூனியமாகத்துடிக்கும் இன்றைய மணித்துளிகளுக்கு ஏதேனும் மந்திரம் ஓதிவிடவேண்டும்.
  • ம்ம்ம் இப்போ என்ன ஸ்டேடஸ் போடலாம்...
    குலாப் ஜாமூன் நல்லா இனிப்பா இருந்துச்சின்னு போடலாமா...
    குடிக்க குடிக்க சுகமா இருந்துச்சின்னு போடலாமா.... (சுடுதண்ணி)
    ஒரே தலைவலி... அப்டின்னு போடலாமா...
    எதுவுமே தோன மாட்டேங்குதுன்னு போடலாமா...
    தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்...
    எதையாவது போட்டே ஆகணும்.
  • 200 டெஸ்ட் விளையாண்டதுக்கு சச்சினுக்கு அஞ்சல் தலை...
    10 வருசத்துக்கும் மேல் உண்ணாவிரதம் இருந்துட்டு இருக்க இரோம் ஷர்மிளாவுக்கு... வெறும் பட்னி தான் தலையெழுத்தா...
  • நேற்றிருந்த எதுவும் இன்றில்லை. பிரபஞ்ச வெளியில் எல்லாம் கரைந்து போகிறது.
  • ஆளில்லாத உயர்ந்த மலையும், அடர்ந்து இருண்ட காடும், குறுகிப்போன குகையும், அகண்ட பாலைவனமும் வேண்டும் என் மனக்குமுறலை எதிரொலிக்க.
  • தூக்கம் வருமா தெரியாது.
    கனவு மட்டும் வரும்.
  • இந்த இரவின் குரல் கொன்னக்கோல் வாசித்தபடியே கரைத்து போகிறது.
  • கோட்டோவியமாக காமராஜரின் உருவம் வரைய எத்தனிக்கிறேன்...
    நேர்(மை) கோட்டிலிருந்து சற்றும் கூட வளைந்து கொடுக்க மறுக்கிறார்.
  • ( ) இந்த அடைப்பிற்குள் எத்தனை புள்ளிகள் மறைந்திருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது...
    ஆனால் ( ) இந்த அடைப்பிற்குள் உள்ள புள்ளிகளை மேல் அடைப்பிலுள்ள புள்ளிகளுடன் கழித்துப் பார்த்தால் புள்ளிகளே இல்லை என்று வருகிறது.
  • நல்லவன் மாதிரியே, ஈழ தமிழ்ல, அதே slang ல பேசுரான்யா டக்லஸ் தேவானந்தா..!!
  • ஓராயிரம் கவித்துளிகளுக்கான மழைத்துளியை பெய்து தந்திருக்கிறது இந்த பருவநிலை.
  • எந்த குதூகலத்திற்கும் இடமளிக்க மறுத்தே கடல் கலக்க ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஓடை.
  • இந்த இரவுப்பாலம் அதி பயங்கரமானது...
    கற்களும், முட்களும், கம்பிகளும், கனவுகளும் நிறைந்தே கிடக்கும்.
  • காசு, பணம், துட்டு... எல்லாம் செலவானபின் எஞ்சியிருக்கும் நேரத்தையும் செலவுசெய்து கொண்டிருக்கிறேன்.
  • useless fellow" இது எனக்குப் பொருத்தமாயிருக்கிறது.
  • வாழ்வு... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
    மரணம்... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
  • பேயோன் facebook லிங்க் இருக்கா... யார்ட்டயாவது.
  • கடந்துபோன இரவு இன்னும் கொஞ்சம் நீண்டு, கடந்து போகாமலிருந்திருக்கலாம்.
  • அடர்மரங்களை எல்லாம் அழித்துக் கிளம்பிய அந்த கல்லூரி வளாக மூலையில் ஒற்றை நெட்லிங்க மர உச்சியிலிருந்து... எழுத்தால் நிரப்ப இயலா ஓசையில் கூவுகிறது அந்த மணிப்புறா.
  • நேத்து பிரபல தொலைகாட்சில ஒரு நிகழ்ச்சி....
    பல பிரபலங்கள் ! கலந்துகிட்ட நிகழ்ச்சி...
    அவர்களிடம் நிகழ்ச்சி நெறியாளர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா...?
    "முக்கோணத்துக்கு எத்துனை கோணம்". இந்த கஷ்டமான கேள்விக்கு
    அந்த பிரபலங்கள் மிச்சரியா !! "மூணு கோணம்" நு பதில் சொல்லிட்டாங்க...
    உடனே சுத்தியிருந்த பார்வையாளர்கள் எல்லாம் ஒரே கை தட்டல்.
    அப்புறம் ஏன் நாம் அப்டியே இருக்க மாட்டோம்...
  • விஞ்ஞானி என்று அறியப்பட்ட சி.என்.ஆர். ராவ்.
    பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர். ராவ். அரசியல் வாதிகளை முட்டாள்கள் என்று சொல்கிறார்...
    அதற்க்கு நீங்கள், அவர் ஏதோ புரியாமல் பேசுகிறார் என்கிறீர்கள்.
    இது தானா உங்க டக்கு...
  • உனக்குள் இருக்கும் வரை அது ரகசியம் தான்.
  • வேற்றுக்கிரகவாசி ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று.
    எனக்கும் அவனுக்குமான உரையாடலின் முதல் வார்த்தை, "என்ன சாப்டிங்க..."
  • பெண்கள் மீதான குடும்ப வன்முறையின் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, அது இன்னும் குறையவில்லை என்பதை பல தொலைக்காட்சி நிகழ்சிகளின் மூலம் பார்க்க முடிகிறது.
  • சிக்கல் நிறைந்த உளவியலை உடைக்கும்போதெல்லாம் ஒரு மிருகத்தின் சம்பட்டியடி பலமாகவே விழுந்துவிடுகிறது.
  • ரிமோட் கையிளில்லாமல் சன் டிவி பார்ப்பவர்கள் கல்லுளி மங்கர்களாக கருதப்படுவர்.
  • facebook பயன்பாட்டாளரை MOBILE, WEB ன்னு எழுத்தால தனித்தனியா காட்டுது chat list ல.
  • மூன்று வருடங்களாக படுக்கையிலிருந்த அம்மாவை பார்த்துக் கொண்டதற்காக பெரியண்ணன் தன் தம்பிக்கு கொடுத்த தொகை, பத்......தா...யிரம் ரூபாய்.
  • நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லியதால்
     நீ நானாகிறாய்.
  • விசயத்தை செல்லத்தொடங்கினான்,
    பேசத்தவர மட்டார்,
    பொறியில் படிப்பு ,
    அவர் சேர்வாக அமர்ந்தார் ,
    அங்கே பேய் சேர்ந்தார்.
    அவர் ஒரு புதிய தொனியில் கோட்டார்.

     இப்டிலாம் படிக்கிறேன்.
  • அவன கொண்ணு....
    அவங்குடும்பத்த அழிச்சி...
    அந்த குடும்பத்துல இருக்க ஒருத்தர கூட நிம்மதியில்லாம நடுத்தெருவுல நிறுத்துற அன்னிக்கி தான் எனக்கு நிம்மதியாவே இருக்கும்...

     # தமிழ் சீரியல் கத்துக்குடுக்கும் பாடம்.
  • சுமைகூடி கடந்த நிமிடங்களுக்கு மத்தியில்
    எங்கிருந்தோ எடை குறைக்க வந்த அந்த
    எதிர்பார்த்தும், எதிர்பாரா ப்ரியம்...
    காட்டிக்கொள்ள விரும்பாத அந்த அக்கறை .
    சோர்வுறும்போதெல்லாம் தட்டியெழுப்பிய அந்த எழுத்துக்கள்.
     எங்கும் தொய்வை திணிக்காமல் நகர்த்திச்செல்கிறது.
  • பொடி தோசைக்கு புதினா சட்னியும், தேங்காய் சட்னியுமாக துணைசெய்தபோது, பிரபல செய்தி சேனலில் "ஆந்திராவில் மழைக்கு வாய்ப்பு" என்ற செய்தி...
    அப்படி என்ன வாய்ப்பளிக்க போகிறார்கள்... ஆந்திராவில்.
    தமிழகத்தில் செய்யாத கவிதையை விடவா வாய்ப்பளித்துவிட போகிறார்கள் அந்த மழைக்கு...?
     சத்தியமாக பேயோன் எனக்குள் இல்லை.
  • செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள்.
     அடக்கி வாசிங்க விஞ்ஞானிகளே..
  • நீங்கள் உதறிய நிலைத்தகவல்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவில் Like or Comment வரவில்லை என்றால்... எங்கோ நான்கு மணிநேர மின்வெட்டு அமலில் இருப்பதாக கொள்ளவும்.
  • விஸ்வநாதன் ஆனந்த் ஜி... சீசன் சரியில்ல. ஒரு crocin போட்டுட்டு விளையாடுங்க.
  • என்னங்க.... வரும்போது சால்ட் உப்பு ஒரு பாக்கெட்டும், கல்லு உப்பு ஒரு பாக்கெட்டும் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க... # எங்கேயோ கேட்ட குரல்.
  • இன்னும் ஒரு மாதகாலத்திற்கு தினசரி, தினசரி கிழிக்கும் வேலையை இல்லாமல் செய்துவிட்டாள் ஒரு பூனை பூம் பூம்.
  • பத்து ரூபாய் எடுத்துப்போய் நாடார் கடையில் 50 தேங்காய் எண்ணெய், 2 ரூபாய்க்கு பொட்டுக்கடலை , 1 ரூபாய்க்கு தேங்காய் சில், ஒரு பொன்வண்டு சோப்பு வாங்கிட்டு பாக்கி காசும் வாங்கி வந்த கனவு ஒன்றை நேற்று இரவு கண்டேன். கனவு தான் காண முடியும்.
  • ஓர் ஊமைத்தாயின் தாலாட்டுக்காக விழித்துக் கிடக்கிறது என் உறக்கம்.
  • ஒரு கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதென்பதும், கௌரவிக்க வேண்டும் என்பதும் அவன் வாழும் காலங்களில் கொடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, அவன் இறந்த பின் சிலை வைப்பதும், பின்பு அதை அகற்றுவதும் மிகக்கேவலமான சிந்தனை.
  • "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்திற்கு பின்னரான மிஷ்கினின் வார்த்தைகளில் கர்வம் கூடியிருக்கிறது.
  • வலி தாங்கமுடியாத பசு, தெளிவான வார்த்தையில் "அம்மா..." என்கிறது.
  • இந்த நீதி மன்றங்கள் இப்படி பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றன. செல்வாக்கு உள்ள மனிதர்கள் எதையும் சந்திக்க தயாராகவே இருப்பார்கள், இருக்கிறார்கள். இப்போதைக்கு ஒரு டீ சொல்லு மச்சி.
  • யோவ்.... ஒரு நாளைக்கு 24 மணி நேரம்யா.... ரொம்ப கஷ்டம். நீ வேணா ட்ரை பண்றியா...
  • facebook password மறந்து போச்சுன்னு அவனோட நண்பன் பத்துபேருக்கு போன் பண்ணி கேட்டு login பண்ற நண்பனெல்லாம் என் கூட இருக்கதாலதான் நானெல்லாம் சிரிக்கிறேன்.
  • ஒரே சளியா இருக்குன்னு சொன்னேன்...
     நண்பன் சொல்றான் wills ல vicks தடவி அடி சரியாகிடும்னு...நீங்க சொல்லுங்க... என்ன பண்ணலாம்.
  • அம்ருத வர்ஷினி ராகத்துல பாடினா மழை வருமாமே...
     பாடவா...
  • அவ்வப்போது வந்து ஒரு like விதை இட்டுப்போ...
     அப்போதான் எனக்குள் வார்த்தைகள் முளைவிடும். # முனியம்மாவுக்கு மட்டும்.
  • கரண்ட் போகப்போகுது.....
     நா log out பண்ணிட்டேன்.
  • வலுவிழந்த வாகனம்
    வறண்ட சன்னலோரங்கள்
    சுவாரஸ்யம் இல்லாத பயணம்
    இடையிடையே ஏறியவர்கள்
    இடையிடையே இறங்கியவர்கள்
    போகும் தூரம் எக்கணம் குறையும்
     என்ற எதிர்பார்ப்பில்.
  • கொட்டும் மழைத்துளிகளால்
    சிதரிக்கொண்டே இருக்கும் நிலாவை
     உள்ளங்கையில் சேர்க்கத் துடிக்கிறேன்.
  • அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...# இந்த ஆசிரியருக்கெல்லாம் பொம்பள புள்ள இருந்தா எப்டி அதுங்க மூஞ்ச பாப்பாங்க.
  • ஓ... நீங்க எழுதுவிங்களா....
    எப்போவெல்லாம் எழுதுவிங்க...
     சும்மாருக்க டைரியும், தீராத மையும் வீணா போகுமேன்னு அப்போ அப்போ எழுதுவேன்.
  • USB port ல எதுவுமே செருகல USB Detected. Scan the driver for viruses now ன்னு கேக்குது. பேயா இருக்குமோன்னு பயமா இருக்கு.
  • மிகக்குறைவான நேரமே இருப்பதால் இலக்கை நிர்ணயிப்பதில் குழம்பி, இருந்த நேரத்தையும் வீணடித்து, எங்கேயோ செல்கிறது இந்த பாதை.
  • கற்பனையாக எழுதுவதை கூட பொய் எழுதாதே எனும் மனநிலையை எப்படி சீர்செய்யமுடியும்.
  • டாஸ்மாக் கும், ஃபேஸ்புக் கும் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

Friday, November 29, 2013

ஓர் நடை பயணத்தில்

நடந்தாலென்ன ?என்று
நட்புமுகம் பார்த்து வினவிய மறுகணம்
முகம் முழுக்க பச்சை சாயம்
பூசிக்காட்டினான்.

எப்போதும் நாணம் கொண்டே
வளைந்து நெளிந்தோடிக்கிடந்த
சாலைப்பயணம் .

வலப்புறம் உள்ளடங்கி
ஓங்கி வளர்ந்து நின்ற பள்ளியில்
படித்த பருவங்களை
ஏக்கத்துடன் அசைபோட்டு முடிக்கையில்
போதுமான இடைவெளியற்றிருந்த
அரசு மதுக்கடையில்
ஆடை கலைந்தவர்கள் கூட்டம்
அநாகரீக வார்த்தைகளை
அள்ளி வீசிக்கொண்டிருந்தது .
வெட்கப்பட்ட காதுகளை
மூடிக்கொள்ள உத்தரவிடாத மூளை
முந்திச்செல்ல கால்களை பணித்தது .

அலைந்து திரிந்த கண்களுக்கு
அடுத்ததாய் அகப்பட்டது
அய்யாவு "டீ" கடையில்
வெட்டவெளியில் பிரமீடுகளாய்
தூசுதின்ற பலகாரம் .
விபரீதம் புரியாமல் பசிப்பிணி போக்கமட்டும்
எடுத்துக்கொண்டிருந்தனர்
துப்புரவு பணியாள தோழர்கூட்டம்.

சற்றே நாணி த்திரும்பிய சாலை முக்கில்
கணபதி மரப்பட்டறையில்
கோங்கு மரம் கூர்போட்டுக்கொண்டிருந்தான்
நாசிக்கவசம் அணியாத சுந்தரம் .

கவலை கப்பிக்கொண்டு
கடிவாளம் கட்டிக்கொண்டு நடந்த கண்களை
கடிவாளம் கிழித்த செயற்கை மின்னல் தாக்கியது !
ஆம் , “பெர்பெஃக்ட்“வெல்டிங் வொர்க் ஷாப் இல்
பாதுகாப்புக் கண்ணாடி அணியாமல்
சிறிதொரு பத்தவைப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தான்
தொழிலாளி சண்முகம்.
ஒய்யார நாற்காலியில்
கூலிங் கிளாஸ் அணிந்தவாறு முதலாளி .

மூன்று பேர் பயணித்த
ஒற்றை இருசக்கர வாகனத்தை மறித்த
போக்குவரத்துக் காவலர் ஒருவர்.
அரசு விதிக்கும் அபராதத்தொகையை கட்டினாலுனக்கு
கட்டுபடியாகாதென்ற பேச்சுவார்த்தையில் சமரசம் கொண்டு
சகாயம் செய்துகொண்டிருந்தார்கள் .

இரண்டு வேலை உணவருந்தும்
தட்டுவண்டி இட்லி கடைக்காரரை
போக்குவரத்திற்கு இடையூரென்று
திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்
காவலரொருவர்.

தாளமுடியாத தலைவலி தளர்த்திட எண்ணி
மெடிக்கல் ஷாப் படியேறினேன்.
தலைவலி மாத்திரை கேட்டு
தண்ணீர் எடுக்க குனிந்து திரும்பினேன் !
கண்ணாடியில் கவிந்திருந்தது

ஸ்ப்ரிட் நனைத்த காட்டன் துணியில்
ஃபிசிசியன் சாம்பிள் நாட் டூ பீ சோல்டு -ஐ
அழித்துக்கொண்டிருந்த முதலாளியின் முகம் .

அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில்
கச்சிதமாய் அடைக்கப்பட்ட போதை லாகிரிகள்
பெட்டிக்கடையில் மட்டும்
பயந்து பயந்து பிரசவமாகிக்கொண்டிருந்தது!!
கூடவே கொட்டைஎழுத்தில்
புகைத்தல் உடல் நலத்திற்கு கேடென்று பதியப் பட்டிருந்த
வெண் சுருட்டும் .

போர்க்குற்ற செய்தியை
பெட்டிசெய்தியில் கூட
தேடிக்கிடைக்காத ஏமாற்றத்தில்
கார்ப்பரேட் கம்பெனி தயாரித்திருந்த
திரைப்பட விளம்பரத்தையும் .
கொட்டை எழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த
ஐ .பி .எல் கிரிக்கெட் செய்தியையும் ,
12 -ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்த
மந்திரிகள் பட்டியலையும்.
கொடுத்த காசிற்காய் வாசித்துக் கொண்டிருந்தார்
சமூக ஆர்வலர் ஒருவர் !!

அய்யாவு "டீ" கடை பலகாரமும்
தட்டு வண்டி இட்லி கடையும்
இங்கே கொஞ்சம் முரண்பட்டே
சொல்லப்பட்டிருக்கும் .

உற்று நோக்கினால்
வாழ்தலே முரண்தான் இங்கே
முரண்பட்டுநிற்கும் சமூகத்தில்
வாழ்தலின் கட்டாயமும் முரண்தான்.

Thursday, November 28, 2013

நன்றி சொல்லிப் பறந்த காகிதம்

ஏதும் எழுதப்படாமல் உபயோகமற்றிருப்பதாக
சலசலத்துக் கிடந்தது அந்தக் காகிதம்.
எதையோ எழுதவேண்டும் என்றெண்ணிய எனக்கு
அந்தக் காகிதம் கண்ணில் பட்டது.

கையிலெடுத்ததும் மொட மொடவென
சிரித்து சிலாகித்துக் கொண்டது அக்காகிதம்.

கவிதை என்றெழுதி ஒரு தலைப்பிட்டதும்
காற்றை இழுத்து தன் மேல்முனை இரண்டையும்
சட்டைக் காலரைப் போல் கம்பீரமாக தூக்கிவிட்டுக் கொண்டது.

எழுத்தாணியின் கூர்முனை தீண்டலுக்கு அது
கொஞ்சமும் அஞ்சியிருக்கவில்லை - மாறாக
தன் மேல் எழுதப்படும் வார்த்தைகள் யார்மீதும்
குத்தீட்டியாய் பாய்ந்து விடாமலிருக்க வேண்டுமென அஞ்சியது.

முதல் பக்கத்தின் முடிவில் குத்தீட்டியாய் எழுதப்பட்ட ஒரு
வார்த்தையை திருத்தும்வரை மறுபக்கம் மாற மறுத்தது அக்காகிதம்.

தமிழின் வார்த்தைகளை எழுதும் போதெல்லாம்
சிலாகித்த காகிதம்.
மாற்றுமொழி கலந்த வார்த்தைகள் எழுதிய போதெல்லாம்
எழுத்தாணியின் கூர்முனைக்கு வார்த்தைகளை அனுப்ப மறுத்தது

எழுதியதை கணினியில் தட்டச்சிட்டு
இனி இக்காகிதம் உபயோகமற்றதென வீசி எறிந்தபோது

இப் பேரண்டத்தில் பேசப்படாத மொழியில்
நன்றியைத் தன் வாலால் சொல்லிவிட்டு ஓடும் நாய் போல
பூமியில் புரண்டோடியது அக்காகிதம்.

Tuesday, November 26, 2013

எது அது


தேனடையை சுற்றியிருக்கும் ஈக்கள் போல அந்த அரளி மர நிழலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை சுற்றி மஞ்சள் நிறத்தில் பூக்கள் உதிர்ந்து கிடந்தது. எப்போதும் போலவே சுப்பு தனது அலுவலகம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச்சென்றான்.

அப்போது அந்த மரப்பொந்தின் கூட்டுக்குள்ளிருந்து தாய்க்குருவி தன் குஞ்சுகளை விட்டு வெளியில் வந்து, பறந்து பறந்து கிளைகளில் அமர்வதும், பின்பு கூட்டுக்கு செல்வதுமாகவே இருந்தது.  இதை பார்த்துக் கொண்டிருந்த சுப்பு, இரைதேட விட்டுப்பிரியும் போதே நிரந்தர பிரிதலுக்கான  ஒத்திகையை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டான். விட்டுப் பிரிதலை விட அதற்கான ஒத்திகை பார்ப்பதென்பது அதிக வலியாகவே அந்த தாய்க்குருவிக்கும் தெரிந்திருந்ததில் சுப்புவுக்கு ரொம்பவே ஆச்சர்யம்.

சுப்புவும் சில நாட்களாக தன் குடும்பத்தை நிரந்தரமாக விட்டுப் பிரிவதற்கான ஒத்திகையைபார்த்துக் கொண்டிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கான மன உளைச்சல்
அவனை அவ்வாறு தூண்டிக்கொண்டிருந்தது.




கலையாத படிமம்

மிச்சமிருக்கும் கரும் படிமங்களையும் உதறி விடிந்த
இரவுப் போர்வைக்குள் கலையாத படிமமாய்...

ஒரு ஒண்டிக் கிடந்தவனின் கனவு
ஒண்ட இடம் தேடியவனின் வெற்றி.
புசித்துக் கிடந்தவனின் கனவு
பசித்துக் கிடந்தவனின் தோல்வி.
தூக்கம் அலைய விட்டவனின் கனவு
தூங்கிப் போனவனின் வெற்றி.
கூடிக் கிடந்தவனின் கனவு
துணை தேடியவனின் தோல்வி.
துணை கிடைத்தவளின் கனவு
வலி தாங்க முடியாதவளின் வெற்றி.
விக்கிக் கிடந்தவனின் தாகம்
சிறுநீர் கழிக்க முடியாதவனின் விரக்தி.
வம்பு நிறைந்த வார்த்தைகள்
உணர்ச்சியில்லா மனிதர்கள்
ஒருவருமில்லா சாலை
முக்காடுகளால் நிரம்பிக் கிடந்த நடைபாதை
கயவர்களின் கத்தி முனை
நீண்டு நடந்திருந்த ஒற்றைப் பாதைச் சுவடு.

Monday, November 25, 2013

நான் பெற்றெடுக்காத என் மகளுக்காக

அந்தரக் கூத்தாடும் ஆலவிழு தொன்றை
தன்னுடன் கலந்து ஸ்பரிசித்துக் கொள்ள 
கொஞ்சம் கொஞ்சமாய்
மீட்டிக்கொண்டிருக்கிறது காற்று.

அன்பும் அக்கறையுமாக ஊற்றி வளர்த்த
தாய் மரத்தின் கிளை விழுது வேறுபக்கம் அசைந்து
சுவாசம் கொள்ளும்போது

தாய் மரம் தன் இருப்பின் மீதான
நிலைப்பாட்டிலிருந்து
தன்னை மீட்டுக்கொண்டு .

மேலும் மேலும் அன்பும் அக்கறையுமாகவே
ஊற்றி ஊற்றி கிளை விழுதினை பத்திரமாக
மண் பிடித்துக் கொள்ளச்செய்கிறது.

Saturday, November 23, 2013

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே...

விஸ்வநாதன் ஆனந்த்... இந்திய சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ராஜீவ் காந்தி கேல்ரத்னா, மற்றும் அர்ஜுனா விருது. மற்றும் உலகின் ஆஸ்கார் போன்ற பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

சதுரங்க விளையாட்டில் ரஷ்யர்களின் ஆதிக்கத்தை உடைத்து, சதுரங்க உலகின் ராஜாவாக ஐந்துமுறை முடிசூடிக்கொண்டவர், ஆறாவது முறையாக அந்த பட்டத்தை தனது சொந்த மண்ணிலேயே, நார்வே நாட்டை சார்ந்த மேக்னஸ் கார்ல்சனிடம் 6.5 புள்ளிகளுடன் தவறவிட்டுள்ளார்.

உலகளவில் சதுரங்க விளையாட்டில் நகர்த்தமுடியாத ராஜாவாக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.

கடந்த காலங்களில் விஸ்வநாதன் ஆனந்திடமே உதவியாளராக இருந்த கார்ல்சன், அவரது விளையாட்டு நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து இன்று அந்த சிங்கத்தின் குகைக்குள்ளேயே அந்த சிங்கத்தை சாய்த்திருப்பது விஸ்வநாதன் ஆனந்துக்குமே கூட அதிர்ச்சியாக இருக்கலாம்.

விளையாட்டுகளில் வெற்றியும் தோல்வியும் இரு முனைகள் தான். இருப்பினும் எந்த ஒரு வீரனும் தான் தோல்வியுறுவதை விரும்புவதே இல்லை. தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்த விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்த தோல்வி சற்றே மன உளைச்சலை கொடுத்திருக்கும்.

அதுவும் தனது சொந்த மண்ணில் தனது ரசிகர்களையும், மக்களையும் தனது தோல்வி  சோர்வடைய செய்துவிட்டதாக கூட அவர் உணரலாம். வயதுமூப்பின் காரணமாக தன்னால் சிந்திக்க முடியவில்லை என்று கூட உணரலாம். இதெல்லாம் சரி என்பது போலவே ஆனந்தின் ஆட்ட நகர்த்தலும் இருந்திருக்கிறது.

இப்போட்டியில் 7 சுற்றுகள் டிராவில் முடிந்திருக்கிறது. 3 சுற்றுகளில் ஆனந்த் தோல்வியை தழுவியிருக்கிறார். இத்தொடர் முழுவதும் கார்ல்சன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருப்பதாக நிபுணர்கள் சொன்ன கருத்தை ஆனந்தும் ஆமோதித்திருக்கிறார்.

மேலும் இதற்க்கு முன்னரான உலக சாம்பியன் போட்டிகளில் ஆனந்த்துடன் மோதிய வீரர்கள், "இந்த போட்டிகள் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. அவ்வளது எளிதாக என்னால் காய்கள் நகர்த்தலை கையாள முடியவில்லை. ஆனந்த் உடனான இந்த போட்டி ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது .” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவுமே மேக்னஸ் கார்ல்சன் சொல்லவில்லை.

ஆனந்திடம் விளையாடியது சற்று சிரமமாகவே இருந்தது என்று பெயரளவில் மட்டுமே கார்ல்சன் சொல்லியிருந்தாலும். ஆனந்த் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். சதுரங்க விளயாட்டில் இது நிகழ்வது தான். என்றாலும், ஐந்து உலக சாம்பியன் பட்டங்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருக்கும் ஆனந்த் என்ன தவறு செய்தார் என்பதை பின்னாளில் வரும் போட்டிகளில் திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஐந்து உலக சாம்பியன் பட்டம் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க விளையாட்டு அனுபவங்களை கூட வயதாக அடையாத மேக்னஸ் கார்ல்சன் , விளையாட்டின் போது எந்த வித பதர்ஷ்டமுமே இல்லாமல் மிக சாதாரணமாகவே காணப்பட்டார்.  அவரது இந்த வெற்றி அவரது வாழ்வில் மிகமுக்கியமான வெற்றியாகவே இருக்கும். இன்னும் 20 வருடங்களுக்கு  யாரும் அசைத்துவிட முடியாத சதுரங்க ஆட்டக்காரராக திகழ்வார் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறது.

திறமையும் உழைப்பும் எங்கிருந்து வெற்றியடைகிறதோ அதை நாம் தூரநின்று ஊக்கப்படுத்தவும்,
உற்சாகப் படுத்தவும் வேண்டும். இது நாம் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. அந்த வகையில்
மேக்னஸ் கார்ல்சனுக்கு நமது வாழ்த்துக்கள்.

பல பட்டங்களை வென்று அனுபவங்களாக குவித்து வைத்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்த்
அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவரை உற்சாகப்படுத்துவோம்.

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே... சிறிது ஓய்விற்குப் பின் மீண்டும் வாருங்கள். மீண்டு வருவீர்கள்.


Wednesday, November 20, 2013

கண் தானம் கடைசி ஆசை



உயிர்வீழ்ந்த அடுத்த ''பல'' நிமிடங்கள் காண ஆசை
என்னின் வீழ்ச்சி செய்தி கேட்டு
அதிர்ந்த பல உள்ளங்கள் காண ஆசை
எனக்காக கண்ணீர் வடிக்கும் உள்ளங்களுக்காக .
வீழ்ந்தும் நான் கண்ணீர் வடிக்க ஆசை .
ஆகவே ... 
வீழ்ந்த பின் என் கண்ணை தானம் செய்துவிடுங்கள்

ஒரு நாள் மட்டும் ஆசை.ஆம்

பிறவியிலேயே பார்வைத் திறனற்றவனாய் இருந்திருக்க
ஒரு நாள் மட்டும் ஆசை
பிறவியிலேயே கேட்புத் திறனற்றவனாய் இருந்திருக்க
ஒரு நாள் மட்டுமே ஆசை
பிறவியிலேயே பேச்சுத்திறனற்றவனாய் இருந்திருக்க
ஒரே ஒரு நாள் மட்டுமே ஆசை
ஒரு நாள் போதும் …
ஆம் . ஒரே ஒரு நாள் மட்டுமே போதும்
வேறெப்படி விவரிப்பேன்
நான் கண்ட கனவுகளை. ?

Monday, November 18, 2013

2013 செப்டம்பர் , அக்டோபர் ல் facebook






















2013 செப்டம்பர் அக்டோபர் - ல் facebook
  • இப்பருக்க ஒரே ஆறுதல் அடிக்கடி கழுத்தறுத்த laptop தொந்தரவு குடுக்கல ரெண்டு நாளா.... chrome அ விட்டு மாறினதிலேருந்து நல்லாருக்கு.
  • போர் அடிச்சுதா... அதான் கோபத்துல deactive பண்ணிட்டேன்.
    மறுபடியும் போர் அடிச்சுதா.... அதான் கோபத்துல active பண்ணிட்டேன்.
  • அடர்த்தியான மன இறுக்கத்தை கலையச்செய்யும் சிகிச்சையை யாரிடமிருந்து கற்றுவந்தாய் குழந்தாய் நீ....
    நீ என் உறவெனும் போது சற்றே கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.
    நிலா...நீ... மாமனைப் பார்க்க எப்போது வருவாய்...
    ஏதாவது ஒரு பௌர்ணமி கழித்து வருவாய்...
    காத்திருப்பேன்.
  • ஒரு குறும்படம் எடுக்கப்போறேன்னு சொன்ன உடனே என்ன கான்சப்ட்ன்னு கேட்க்காம
    யாரு ஹீரோவா நடிக்கிறான்னு கேட்பவனே தமிழின் மிகச்சிறந்த ரசிகன்.
  • பிள்ளையாருக்கு தொந்தியும் தும்பிக்கையும் வைத்து இன்றைய தினம் வயிற்றைக் கழுவிய அந்த மண் சிற்ப்பியின் இன்றைய கனவு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்...
  • ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் கொலை கூட செய்வேன்.
    கொடுக்காவிட்டாலும் அப்படித்தான்.
  • ம்மா... ஒரு டீ...
  • ஆயிரங்களை கொடுத்துப் பெற்ற உன் jeans pant. அரைநிர்வாண மனநோயாளியை கடந்து போகும்போது உறுத்தவில்லை என்றால்....
    உனக்கும் எனது தீபாவளி வாழ்த்து.
  • படகும் துடுப்பும் மட்டுமே போதவில்லை பயணம் செய்ய.
    நீர் நிறைந்த ஓடையும் தேவைப்படுகிறது.
  • எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...
    தொலைந்த பொருள் எதுவென்றும் நினைவிலில்லை.
  • விஷம் கலந்து அவன் அருந்திய அந்த மதுக்குவளையில்
    ஓரிரு துளிகள் எஞ்சியிருக்கலாம்.
    தனிமை சூழ்ந்த அந்த இரவில் அவனது அலைபேசிக்கு ஓர் அழைப்பு...
    அந்த அழைப்பை ஏற்றவன் நிரந்தர மயக்கநிலைக்கு சென்றிருந்த போது.
    அலைபேசியின் எதிர்முனை குரல்.
    "சார் உங்களோட கதையை படமா தயரிச்சுடலாம்னு சார் சொல்லிட்டார்.... நாளை காலை எங்க ஆபீஸ் வந்துருங்க...."

பேராபத்தான கவிதை

நான் எழுதப்போகும் இந்த கவிதையின்
முதல் வரி மனநோயாளியின் அம்மணத்தை மறைத்துவிடும்.
இரண்டாம் வரி ஆண்ட குடும்பத்திலிருந்து ஆண்டியாகிப் போனவன் வயிறை நிறைத்துவிடும்.
மூன்றாம் வரி எங்கோ நடந்த இனப்படுகொலைக்கு
நியாயம் பெற்றுத்தரும்.
நான்காம் வரியில் சாதிகளெல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும்.
ஐந்தாம் வரி ஆங்காங்கே நிகழும் வன்கொடுமைகளையும்
வன்முறைகளையும் ஒழித்துவிடும்.
ஆறாம் வரி நான் மட்டும் நல்லவனென எழுதப்படுகிறது.
ஏழாம் வரி என்னை விளம்பரப் படுத்திக்கொள்ள எழுதப்படுகிறது.
கடைசி வரி பேராபத்தை விளைவிக்கும் வார்த்தைகளை எழுதவைத்துவிடலாம்.

காரணம் வெங்காயம்

சித்தப்பா சுட்டிக்காட்டிய மணாளனுக்கு வாக்கப்பட்டு
புகுந்தகம் போயிருந்த முதல் தினமன்று .
ஆனந்த ஒலியும் ஆனந்த ஒளியும்
வியாபித்துக் கிடந்த புகுந்தகத்தில்
அவளின் முட்களற்ற கண்மீன்கள் இரண்டிலிருந்தும்
வெந்நீர் ஊற்றெடுத்து ததும்பிக் கொண்டிருந்ததை
அள்ளிப் பாய்ச்சிக்கொண்டிருந்தாள் அடுக்களையில்.
அவளின் கண்ணீருக்கு காரணம் கேட்பவர்களுக்கு
பதிலாய் வைத்திருந்தாள்
கையில் கத்தியும் வெங்காயமும் .


Sunday, November 17, 2013

தலைப்பில்லை

சுப்பு எனக்கு அறிமுகமானது அவனுடைய 10 வது வயதில்தான். அப்போதான் அவனுடைய அப்பா இறந்திருந்தார். அவனது அப்பாவை சுற்றியிருந்த கூட்டத்தில் உள்ளவர்கள் அழுததால் இவனும் ஒருமுறை அழுதுவிட்டு என்னை கோலி விளையாட கூப்பிட்டான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கும் அவனுடைய வயது தான்... அம்மாவும், மூன்று தங்கைகளும் அவனுக்கு. அம்மா, அப்பா வழி சொத்துக்கள் எதுவும் கிடையாது. அவனது அப்பா அரசு ஊழியர். பென்ஷன் திட்டம் செயலில் வராத ஒரு துறை.

அந்த குடும்பத்தின் சுமை இனி இவனுக்கானது. எப்படி இவன் இதை சுமக்கப்போகிறான் என்ற உறுத்தல் எனக்கு அன்று ஏற்பட்டது.

அவன் அப்பா இருந்தவரையில் ஆவரேஜிக்கும் சற்று கூடுதலாக மதிப்பெண் வாங்குவான். அதன் பின்னர் விளையாட்டு பிள்ளையானான். எப்போதும் என்கூடவே சுற்றுவான். நான் ச்சுச்சா போக சாக்கடை ஓரம் போனால் அவனுக்கு வருதோ இல்லையோ... அவனும் ட்ரவுசரை தூக்கிக்கொண்டு வந்து சும்மா நின்றுவிட்டு என்கூடவே வருவான். இப்படி பொறுப்பற்று போனவனின் போக்கு எங்கே U டேர்ன் அடித்தது என்று தெரியவில்லை.

காரணம் என்னுடைய அப்பா திடீரென சென்னைக்கு பனி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். நாங்கள் எல்லோரும் சென்னைக்கு இடம் மாறியிருந்தோம்.

மறுபடியும் 12 வருடங்கள் கழித்து சுப்புவை வந்து பார்த்தல் ஆளே மாறியிருந்தான். அவனுடைய அப்பா வேலைக்கு அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அவனது தங்கைகள் இருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தான். மற்றொரு தங்கை படிப்பு முடிக்கு தருவாயில் இருந்தால்.

Saturday, November 16, 2013

இணையத்தில் கிடைத்த முனியம்மா


 இணையத்தில் கிடைத்த முனியம்மா 


நகரத்தின் மையப்பகுதியென்றே கொள்ளலாம் கவியமுதன் பிறந்து , வளர்ந்தது…. அநேகமாக அவன் வாழ்வை முடிக்கும் இடம் இதுவாகத்தான் இருக்கும் . 

எதிரெதிரே வீடுகளுள்ள நீண்ட வீதியில்தான் அவனது குடியிருப்பு . 
எப்போதும் பரபரப்பை உடுத்திக்கூத்தாடும் வீதியது . 
ஏறக்குறைய ஏழு வீதிகளின் கிளைப்பாதை இந்த வீதிதான் .

திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் மூன்று வயது முதலான மெட்ரிகுலேசன் குழந்தைகள் தெரு முக்கத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் திண்ணையில் தான் வேனுக்காக காத்திருப்பார்கள் . 

வாரத்தின் ஏழு நாட்களிலும் , மூங்கிலை கூறு போட்டுச்சீவிய குச்சிகளால் பின்னப்பட்ட பெரிய கூடைகளை சைக்கிளில் பின்புறம் பெரிய கேரியரில் கட்டிக்கொண்டு பக்கத்து கிராமங்களிலிருந்து காய்கறிகளை ஆந்தை குரலில் கூவி விற்றுக்கொண்டு அங்குமிங்குமாக திரிவார்கள்.

வீதியின் மற்றொரு முனையில் கணேச நாடார் மளிகை கடை. இங்கே சகல சாமான்களும் கிடைக்கும் . எதிர்பாராத விருந்தாளிகளுக்கு உள்நாட்டு குளிர்பானம் முதல் பன்னாட்டு குளிர்பானங்கள் வரை வாங்க கூட கணேச நாடார் மளிகை கடையை கடந்து யாரும் போகமாட்டார்கள். வாடிக்கயாளரிடமிருந்து வாங்கும் காசிற்கு பொருள்களுடன் இலவசமாக சிரிப்பையும் , அன்பான வார்த்தைகளையும் சேர்த்துக்கொடுக்க இவர் ஒரு போதும் தவறவே மாட்டார். 

கவியமுதனின் தந்தை அரிமாவளவன் . இவர் ஒரு தமிழாசிரியர் . யாருடன் பேசினாலும் செம்மொழி சாரல் சிந்தாமல் வாய்மூட மாட்டார். தான் முதுகலை தமிழ் படிக்கும்போது தன்னுடன் கூடப்படித்த வாசிகபாரதியை காதல் மனம் புரிந்தவர் . தமிழ் மீதுள்ள பற்றால் கவியமுதனின் தம்பிக்கும் அமலன் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் .

அரிமாவளவன் தம்பதியர் தங்களது குழந்தைகளை தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களாக திட்டமிட்டு தமிழ் பாலூட்டி வளர்த்தார்களே தவிர... இவர்களது உத்தியோகம் சார்ந்த படிப்பு கணினி சார்ந்ததாகவே இருந்தது . இதற்கு காரணம் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் . குறுகிய காலத்தில் மிகையாக பொருள் தேடும் உத்தி. இன்றைய சூழல் அப்படி ! இவர்கள் மட்டும் இழிச்ச வாயர்களாக இருந்தால் சமூகம் மாறிவிடுமா என்ன ? தமிழ் படிப்பதை இழிச்சவாய்த்தனம் என்கிறது இன்றைய சமூகம் .

கடிவாளம் கட்டிய பந்தயக்குதிரையின் மீதமர்ந்து வேகமாய் பயணித்துக் கடத்திய வழக்கமான வாரக்கடைசி தினமன்று....

பிரபல சாஃப்ட்வேர் கம்பெனி.... அலுவலக வேலைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தான் கவியமுதன் . ஏற்கனவே சென்னை to தஞ்சவூருக்காக பதிவு செய்து வைத்திருந்த பயணச்சீட்டை தனது கருப்பு நிற money purse க்குள் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டான் .

ஒரு மாதம் கழித்து தன் குடும்பத்தாரை பார்க்கசெல்லும் ஆர்வமும் , பரபரப்பும் அவனது முகத்தில் புரையோடிக் கிடந்தது. 

எப்போதும் வாரம் ஒரு முறை செல்பவன் இடையறாத கடின வேலை காரணமாக செல்ல முடியாமல் இருந்திருந்தது .

அலுவலகம் முடிந்து தன் ரூமிற்கு சென்று அவசரம் அவசரமாக கிளம்பி பேருந்து நிலையம் வந்து தனக்காகவே நின்று கொண்டிருந்ததாக எண்ணிய பேருந்தில், தான் பதிவு செய்திருந்த சன்னலோர இருக்கையில் ஆயாசமாக அமர்ந்து கொண்டான் . நகரத்தில் மோதித்திரியும் காற்று... சன்னலோரத்தில் அமர்ந்திருந்தவனை அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருந்தது. நட்டு நாற்ப்பது நாட்களேயான நெற்பயிர், பரந்த வெளிக்காற்றை பருகிக்குடித்துக்கொண்டே ஓயாத ஒய்யார நடனம் புரிவதை போல் ஆடிக்கொண்டிருந்தது அவனது தலைமுடிகள்.

துரட்டியால் தட்டிவிட்ட தேனடையை சுற்றி பதற்றத்துடன் மொய்க்கும் தேனீக்களைப் போல விறுவிறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது நகரம். விறுவிறுப்பிலிருந்து மெல்ல வழுக்கி ஊரத்துவங்கிய பேருந்து சாலையோர காட்சிகளையெல்லாம் பின்புறமாக செறுகிக்கொண்டிருந்தது. வேகமாக புறந்தள்ளிபோய்க்கொண்டிருந்த சன்னலோர காட்சிகள் மெல்ல மெல்ல இவனை அடிமை படுத்திக்கொண்டிருந்தது .

“சார்.... உங்க டிக்கெட் குடுங்க.” என்ற நடத்துனரின் கேள்வி இவனது காதுகளுக்கு எட்டவில்லை . இவனது மூளை ஏதோ ஒரு குறுகிய குகைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. 

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்பவர்களில் யாரோ ஒருவருடைய வயதுடன் ஒத்துப்போவதுமான வயதுடனும் , தோற்றத்துடனும் இருந்த ஒருவர் இவனது பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தார் . அவரது அகத்தோற்றத்தை போலவே புறத்தோற்றமும் அழகாய் இருந்தது . “தம்பி.... என்று தோளில் தட்டி டிக்கெட் கேட்கிறார் கண்டக்டர். குடுங்க” என்றார் .

நட்டநடுநிசியில் அதிபயங்கர கனவு கண்டு விழித்தவனைப்போல் திடுக்கிட்டு பின் சுதாரித்துக்கொண்டு. பேன்ட் பாக்கெட்டிலிருந்து தனது purse சிலிருந்த reservation டிக்கெட்டை எடுத்துக்கொடுத்து மாற்று டிக்கெட் பெற்றுக்கொண்டான் .

தோள்தட்டி எழுப்பிய பக்கத்து இருக்கை காரரை பார்த்து குழந்தையாய் சிரித்து தேங்க்ஸ் சார் என்றான் .

“இருக்கட்டும் தம்பி.... நீங்க எந்த ஊர் போரேல் தம்பி” 

தஞ்சாவூர் சார் என்றான். திரும்ப இவன் அவரை பார்த்து நீங்கள் எந்த ஊர் செல்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அவராகவே சொன்னார். நான் கும்பகோணத்தில் இறங்கிடுவேன் தம்பி என்று .மறுபடியும் சிரித்துக்கொண்டான் .

நகரத்தை கடந்து மெல்ல இருளுக்குள் புதைந்துகொண்டிருந்தது பேருந்து. சன்னலோரக்காட்சிகளையெல்லாம் இருள் மூடி மறைத்துக்கொண்டன. மின்மினிப்பூச்சிகள் மின்னி ஒளிப்பதை போல் எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும் இருட்டை ஊடுருவி மின்னிக்கொண்டிருந்தது வெளிச்சம் .

அயராத பணியினால் ஏற்ப்பட்ட சோர்வும் , உறக்கமும் இவனை அடிமை படுத்த , தென்றலின் தாலாட்டில், இரவின் மடியில் இவன் சொக்கி தற்காலிகமாய் செத்துப்போயிருந்தான் . இடையில் ஒரு சில இரவு நேரக்கடைகளில் பேருந்து நின்றது கூட தெரியாமல் தற்காலிக மரணம் உறங்காமல் உயிர்ப்புடன் இருந்திருந்தது . பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் இவனை தட்டி எழுப்பி தம்பி மணி 3 .30. இன்னும் பத்து நிமிடத்தில் கும்பகோணம் பேருந்து நிலையம் சென்று விடும் பேருந்து. நான் இறங்கி விடுவேன். நீங்களும் விழிக்கொள்ளுங்கள் என்றார் . பாதி பிறையாய் கண்களை திறந்து , வாயோரம் ஒழுகிக்கொண்டிருந்த உமிழ்நீரை வெட்கப்பட்டு துடித்தவாறே சரி சார் ரொம்ப தேங்க்ஸ் என்றான் .

அடுத்த ஒரு மணிநேரத்தில் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் வீட்டு வாசலில் இறங்கிவிட்டு ஆட்டோவிற்கு பணம் கொடுத்து கொண்டு
இருக்கையில் . அவனது அம்மா ஆட்டோ சத்தம் கேட்டதும் லைட்டை போட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு கதவை திறந்து வாஞ்சையுடன் அழைத்து சென்றாள். 


மிச்சமிருந்த சோர்வையும் , உறக்கத்தையும் இருளுக்குள்ளேயே கரைத்துவிடும் பொருட்டு தனது அறைக்கு உறங்கசென்று விட்டான் . 

விடியலின் ஒலி, ஒளி அத்துனை சமிக்கைகளையும் அலட்சியப்படுத்திவிட்டு சிறு ,சிறு கனவுகளை சுமந்தபடி உறக்கத்தை நீட்டிக்கொண்டிருந்தான். அம்மாவின் அழைப்புக்குரலில் சுருண்டு , சுருட்டிக்கொண்டது உறக்கம் . டேய்... போயி குளிச்சுட்டு வாடா.... உனக்கு பிடிச்ச கறிக்குழம்பு வச்சுருக்கேன். தோசை ஊத்தி தாரேன்.

பிரஷ் பண்ணிட்டேம்மா... மொதல்ல ஒரு டீய போட்டுக்குடு. கொஞ்ச லேட்டா சாப்புர்றேன் .

அம்மா போட்டு வந்து கொடுத்த டீயை குடித்தபடியே ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாக காணப்பட்டான் .

முந்தைய இரவுப்பயணத்தின் போது தன்னுடைய பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்த வயதான தம்பதிகள் எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது இவனது செவித்துளைகளின் ஓரச்சுவருக்குள் படிந்திருந்தது .

அவர்கள் தங்களுடைய 32 வயது மகளுக்கு தொடர்ந்து திருமணம் தள்ளிபோய்க்கொண்டிருப்பதை பேசிக்கொண்டு வந்ததாக அவனுக்கு தெரிந்திருந்தது . மேலும் பரிகாரத்திற்காக வைதீஸ்வரன் கோவிலுக்கு வருபவர்களை போல் பேசிக்கொண்டிருந்தார்கள் . அவர்களது உரையாடல், அம்மிக்கல்லில் வைத்து குளவியின் ஏதோ ஒருமுனை தூக்கி லேசாக நசுக்கிய இஞ்சி விழுதை போல் நைந்து போயிருந்தது . 

டீ கப்பினை முத்தமிட்டுக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். முதிர்கன்னிகள் குறித்து கவிதை ஒன்று எழுதினாலென்ன என்று தோன்றியது.

டீ கப்பினை சமயலறையில் வைத்துவிட்டு தன் அம்மாவிடம், “ம்ம்மா நானா வந்து டிபன் கேட்க்குரப்ப குடு.... ஒரு கவித எழுத போறேன். நடுப்பரவந்து சாப்டு கீப்டுன்னு தொந்தரவு பண்ணாத” என்றான் கவியமுதன்.

வாசிகபாரதி: ஏண்டா ஒரு வழியா சாப்டு போய் எழுதேண்டா... எனக்கொரு வேல முடியும்ல .

கவியமுதன் : இல்லம்மா.... நல்ல மூட்ல இருக்கப்பவே எழுதிர்றேன் என்னோட இஷ்டத்துக்கு விட்ரும்மா.

வாசிகபாரதி: சரி சரி போய் எழுதுடா தொந்தரவு பன்னால ஒன்ன .

நன்றிம்மா.... என்றபடி தன் தாயின் வலது தோளில் தன்னுடைய வலது கையை போட்டு ,இடது கையால் அவளது தாடையை உருகிக்கொஞ்சிவிட்டு தன்னுடைய ரூமிற்கு சென்று கதவை தாழிட்டான். மேசையை ஒட்டிக்கிடந்த வயரால் பின்னப்பட்டிருந்த s டைப் சேரை இடது கையால் பின்புறம் இழுத்து அமர்ந்து கொண்டு மேசை மீதுள்ள டைரியை எடுத்து தன் சட்டைபாக்கெட்டிலுள்ள கருப்பு நிற பேனா மூடியை திறந்து “முதிர் கன்னிகள்” என்று தலைப்பிட்டான் .

தமிழை சுவாசித்த தம்பதிகளின் உதிரங்கள் உருவாக்கிய உயிர் என்பதால் வார்த்தைகள் வழுக்கி விழுவதில் தடையேதுமில்லாமல் விழுந்தது கவியமுதனுக்கு . 

விழுந்தவரிகளை பொருக்கி முடிந்து வார்த்தைகளாய் கோர்த்து பின் வாய்விட்டு வாசித்துப்பார்த்தான். வரிகளில் வலிகள் கூடியிருந்ததால் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு வார்த்தைகள் வரமறுத்து வாசிப்பை நிறுத்த கட்டாயப்பட்டுப்போகிறான் .

பெருக்கெடுத்திருந்த விழிக்குளம் இரண்டிலிருந்தும் இருதுளி நீர்கள் மட்டும் பூமி தேவியின் மடியில் சிந்திப்போனது.

சிறிதுநேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கவிதையின் கணம் சுமந்து கொண்டே , 
கவியமுதன் டிபன் குடும்மா.

வாசிகபாரதி: என்னடா அதுக்குள்ளே எழுதீட்டியா ? ஏண்டா மொகம் ஒரு மாதிரி இருக்கு?
என்று கேட்டுக்கொண்டே தோசையை வார்த்து தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள். 

சாப்பிட்டு முடித்ததும் கவிதையை அவளிடம் கொடுத்து வாசிக்கசொன்னான் . வாசித்து முடித்ததும் புள்நுனியிலிருந்து சிதறப்போகும் நீர்த்துளிபோல் அவளும் இருதுளிகள் கண்ணீரை கசியவிட்டு துடைத்தவாறே , நல்லா எழுதீருக்கடா... என்றாள். 

நல்ல அழுத்தமான கவிதையா இருக்குடா அப்படியே ஒன்னோட ப்ளாக் ளையும் , ஃபேஸ்புக் ளையும் போட்டு விடுடா.... எல்லோரும் படிக்கட்டும் என்றாள் .

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொல்லும் நிலை இன்று மாறி. இணையம் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டு வரியில் கவிதையோ, தத்துவமோ நாம் எதை சொன்னாலும் இந்த உலகில் இணைய இணைப்பு உள்ள எந்த மூலையிலும் ,யாரும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இன்றைக்கு இணையத்தில் பலவகையான வசதிகள் உள்ளன . ஃபர்ஸ்ட் நேம் , செகண்ட் நேம் பாலினம் , பிறந்த தேதி , ஒரு மின்னஞ்சல் முகவரி... இது இருந்தால் போதும் பெருகிக்கிடக்கும் சமூக வலைத்தளங்கள் ஒன்றில் கணக்கு தொடங்கி விடலாம். அப்படி தொடங்கிவிட்டால், அமெரிக்க அதிபர் முதல், இந்த கதை எழுதிய நாள் வரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படாத ராஜபஷே வரையிலும். கோல்ஃப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் முதல் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரை யாரை வேண்டுமானாலும் நண்பர்களாக ஆக்கிக்கொள்ளலாம். மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம் . 

பிளாக் இல் இது போன்று நண்பர்களை சேர்க்க முடியாது இதற்கென்று ஒரு விலாசம் நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்யவேண்டும். அந்த விலாசத்தை அட்ரஸ் பாரில் அடித்தால் நீங்கள் உங்கள் ப்ளாக் இல் எழுதி இருப்பதை எல்லோரும் பார்க்கலாம் . 
அதாம்மா பண்ணப்போறேன் என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய லேப்டாப்பை 
திறந்து எப்போதும் இரண்டு மூன்று முறைக்கு மேல் அழுத்தி சுவிட்ச்சான்
செய்வது போலவே சுவிட்ச்சான் செய்தான் . 

ஃபேஸ் புக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் கவியமுதனுக்கு ஏற்கனவே கணக்கும் , நிறைய நண்பர்களும் உண்டு .

தன்னுடைய கவிதையை ஃபேஸ்புக் குறிப்பில் பேஸ்ட் செய்தான். தன்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு முப்பது நபர்களுக்கு இணைப்பில் போட்டான் . இணைப்பில் போட்டதை பப்ளிஷ் செய்தான். 

செய்து முடித்துக்கொண்டிருந்த இடைவெளியில் இவனது செல் ஃபோன் , "கையில் மிதக்கும் கனவா நீ " என்ற பாடலை பாடியது. எடுத்துப்பார்த்தான் “ரொசாரியோ ஒ +” என்ற பெயர் ப்ளிங்கிக் கொண்டிருந்தது.

நண்பனின் அழைப்பு அது. அவன் பெயருக்கு பக்கத்தில் உள்ள இந்த “ஒ+” என்ற குறியீடு அவனது ரெத்த வகையை குறிப்பதாகும். கவியமுதனின் செல் ஃபோனில் அவனது தொடர்பாளர்களது பெயருக்கும் பக்கத்தில் அவரவர்களின் ரெத்தவகையை குறித்து வைத்துக்கொள்வது அவனது வழக்கம். தக்க சமயத்தில் அவர்களுக்கும், அல்லது வேறு யாருக்கேனும் உதவியாக இருக்கும் என்று இவ்வாறு குறித்து வைத்துக்கொள்வான். அழைப்பு மணி “கை கால் முளைத்த காற்றா நீ” பாடுவதற்குள் , 

கவியமுதன்: சொல்டா  எங்க இருக்க ? 

ரொசாரியோ: வீட்லடா..., நீ எங்கருக்க ? 

கவியமுதன்: நானும் வீட்ல தாண்டா.

ரொசாரியோ: சினிமா போவமா ?

கவியமுதன்: என்ன படம் ?

ரொசாரியோ: வா போய் பாக்கலாம். எது கிடைக்கிதோ போலாம். ரொம்ப போரா இருக்குடா .

கவியமுதன்: சேரி கெளம்பி வர்றியா ?

ரொசாரியோ: இன்னும் ஆஃப்ன்னவர்ல உங்க வீட்ல இருப்பேன்.

கவியமுதன்: சரி வா . 

அரைமணி நேரத்தில் வந்துநின்ற கருப்பு நிற டூவீலரில் பின்னால் ஏறிக்கொண்டான் கவியமுதன்.

ஆற்றுப்பாலம் தாண்டி சென்றது டூவீலர். நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள குறுகிற சந்துப்பாதைக்குள் நுழைந்தது. அதனுள்ளே தான் மிகப்பெரிய இடத்தில் ராஜராஜன் தியேட்டர். மணிரத்னம் இயக்கிய “கன்னத்தில் முத்தமிட்டால்” பட போஸ்டரில் மாதவன் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தாள் பார்த்திபன் சீதா தம்பதியர் பெற்றெடுத்திருந்த குட்டி தேவதை “கீர்த்தனா” . ரூபாய் நூற்றி அறுபதிற்க்கு “சலுகை” விலையில் இரண்டு ப்ளாக் டிக்கெட் கிடைத்தது . 

படத்தின் இடைவெளியில் கூட்டத்தின் பெரும்பாலோனோர் விரல் இடுக்கிலும் வித விதமான கம்பெனிகளின் சிகரெட் தற்காலிகமாக தன்னையும் , பிடித்திருப்பவனை சமயம் பார்த்து எரிக்கவும் கங்கிக்கொண்டிருந்தது. இவர்களும் தன் பங்கிற்கு ஆளுக்கொரு சிகரெட் சாம்பலை தட்டிக்கொண்டிருந்தார்கள் .கவியமுதன் தட்டும் சிகரெட் சாம்பல் திண்டு திண்டுகளாக கீழே விழுந்து சிதறுவதைப்போல் அவனது மனதும் விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. படத்தில் ஈழத்தமிழர்கள் படும் அவஸ்தையை தத்ரூபமாக படமாக்கியிருந்தார் மணிரத்னம்.

நல்லதொரு விடுமுறை பொழுதை அர்த்தப்படுத்தியதாக எண்ணினார்கள் இருவரும் .

அப்படத்தில் வரும் பல காட்சிகள் மனதை கணக்கசெய்தாலும் "விடைகொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே" என்ற இந்த பாடல் வரிகள் தினமும் தன்னை கொத்திக் கொத்தித்திண்ணாமல் போகப்போவதில்லை என்றும், இதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனது கனவில் வந்து போகாமல் ஒரு இரவு கூட விடியப்போவதே இல்லை என்றும் நினைத்துக்கொண்டான் .

இரண்டு நாள் விடுமுறைக்காக தான் பணிபுரிந்த ஊரிலிருந்து உறவினர்கள் வசிக்கும் தன் சொந்த ஊருக்கு தான் பயணித்ததையும் , இந்த பாடல் காட்சிகளில் தம் சொந்த மண்ணை விட்டு பிரிந்து புலம்பெயர்ந்து போகும் மக்களின் பயணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டான்.

மாலைப்பொழுதுகளை எல்லாம் நண்பருடன் கடத்தியாகிவிட்டது. இரவு டிபன் கூட ஒரு நல்ல ஹோட்டல் இல் முடித்து வீடு திரும்பியாகிவிட்டது .

வீட்டு வாசலில் வந்து நின்ற டூ வீலரில் இருந்து இறங்கி.... வருங்கால தலைமுறையினருக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஓர் ஆய்வில் கடந்த ஒரு மாதங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்த தன் தந்தையிடம், ஹாய் அப்பா என்றான். “ஹாய்” என்ற பதம் இவனுக்கு சாஃப்ட்வேர் துறை கொடுத்திருந்த சாபமாக எண்ணிக்கொண்டான்.

அரிமாவளவன்: ம்ம், வாடா எங்க போயிட்டு வர்ற ?

கவியமுதன்: சினிமாவுக்குப்பா..

ம்ம் சரி சரி என்று தலையாட்டிக்கொண்டு தன்னுடைய வேலையில் மூழ்கிகொண்டார் . இவரது கல்விப்பணி விளம்பரமற்றதாக , சுயநலமற்றதாக இருந்திருந்தது .

இவன் இந்த முறை வீட்டில் தங்கியிருந்த இரண்டு நாட்களிலும் தன் அப்பா தன்னுடன் சரியாக பேசவில்லை என்று எண்ணிக்கொண்டான் . 

தம்பி அமலன் தான் படித்திருந்த படிப்பிற்கு வேலை தேடும் பொருட்டு ,சென்னையில் உள்ள கம்பெனிகளின் விபரங்களை சேகரித்து கொண்டிருக்கையில் ,

ஒல்லியான தேகம் கொண்டவர் ஒருவர் சார் என்று அழைத்தவாறே தயங்கி வாசலில் நின்றிருந்தார் .வாங்க மாரியப்பன் என்று அழைத்து வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார் கவியமுதனின் அப்பா .அவர்களின் பேச்சில் இருந்து தனக்கு கல்யாண பேச்சு தொடங்கியிருப்பதாக தெரிந்திருந்தது கவியமுதனுக்கு .

வந்திருந்தவர் ஒரு திருமண தரகர் என்பதை புரிந்து கொண்டான் .

சரி நீ சாப்ட வாடா என்றாள் அம்மா .

சாப்டேம்மா ஹோடெல்ல.

ஏண்டா ஊர்ல இருக்கப்பவாவது வீட்ல சாப்டாம இப்டி பண்ற? என்றாள்.

கோவிச்சுக்காதம்மா தூக்கம் வருது போயி தூங்குறேன்.

என்று விடை பெற்றுக்கொள்கிறான் .

சுவற்றுக்கோழியின் இடையறாத தாலாட்டில் உறங்கிப்போயிருந்தான் கவியமுதன். உறக்கத்தின் ஊடே அவன் கண்டிருந்த ஏதேதோ கனவுகளை எல்லாம் விடிந்ததும் தொலைத்து விட்டிருந்தான் . அன்றிரவு சென்னை செல்வதற்கு 10 .30 பேருந்திற்கு முன்பதிவு டிக்கெட் பெற்றிருந்தான் . அதற்காக ஆயத்தமாகிக்கொண்டே அன்றைய பகல் பொழுதுகளை உடைத்தெறிந்து கொண்டிருந்தான் .

குடும்பத்தாருடன் கழித்த பொழுதுகளை நினைவோடையில் மிதக்கவிட்டபடி சென்னையில் கரை ஏறிக்கொண்டான் . மறுபடியும் அவன் பந்தயக்குதிரையில் பயணித்தாகவேண்டும் .

அலுவலக கணினிதிரையின் மூலம் இரவிற்கான உறக்கத்தினை சம்பாதித்து வந்தவனுக்கு தன் அறையில் உள்ள கணினியை திறப்பதில் அலாதிப்பிரியமின்மயாயிருந்தாலும் நித்தம் அவனது நித்திரையை கொத்தித்தின்று கொண்டிருந்த அந்த பாடல் வரிகளும், காட்சிகளும் .அன்று ஏனோ அகோரப்பசியால் ஒரேயடியாய் கொத்தி விழுங்கிக்கொண்டிருந்தது . சரி... இணையத்தை சற்று நேரம் திறந்து பொழுதை கழிப்போம் என்றெண்ணினான். தான் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் எழுதிய “முதிர்கன்னிகள்” குறித்த கவிதைக்கு யார் யார் என்ன பதில் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக முகவரிப்பெட்டிக்குள்ளும் , கடவுச்சொல் பெட்டிக்குள்ளும் பத்து விரல்களின் நடன ரேகையை பதித்து திறந்து கொண்டான் .

முகமறியாத, தகவல் அறிந்த நண்பர்களின் நட்பு கேட்பு , உள்ளீட்டு செய்தியொன்று , அறிவுறுத்தல் செய்தியென்று எல்லாம் சிகப்பு நிறத்தில் நம்பர்கள் பதித்த அட்டையை தூக்கிக்கொண்டு நின்றது . யாரோ நட்பு வேண்டி விண்ணப்பித்திருக்கின்றார்கள் முதலில் அவர்களை நட்பில் இணைத்துக்கொள்ளலாம் என்று அவரது முகவரியையும் , புகைப்படத்தையும் பார்த்தான் கவியமுதன். தான் ஒரு பெண் என்ற தகவலும் தன்னுடைய சொந்த நாடு ஸ்ரீலங்கா, ஊர் ஜப்ஃனா என்று மட்டும் இருந்தது. மற்ற தகவல்கள் இல்லாததால் பிறகு எப்போதாவது நட்பில் இணைத்துக்கொள்வோம் என்று உள்ளீட்டு குறுஞ்செய்தியின் பக்கம் பார்வையை விட்டெறிந்து கிளிக்கினான்.... நட்பு அழைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த அதே ஜப்ஃனா கேர்ள், ஹாய் ... என் பெயர் ஆண்டாள்.  உங்கள் முதிர் கண்ணிகள் கவிதை வாசித்தேன் அருமை என்று ஆங்கில எழுத்துக்களை பயன் படுத்தி தமிழில் படித்து உச்சரிக்கும் படியாக எழுதியிருந்தாள். 

என்னதான் பொழுதனைக்கும் கணினியில் பணிபுரிபவனாக இருந்தாலும் வேற்று நாட்டவர் ஒருவர் தமிழில் எழுதி பேசியதை கவியமுதன் முதல்முதலாக இப்பொழுதுதான் பார்க்கிறான் . பதில் மரியாதைக்காய் மட்டும் நன்றி என்றொரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த ஈழ தமிழச்சியை தன்னுடைய நட்பில் இணைத்துக்கொண்டான் . முதிர்கன்னிகள் குறித்த பதிவினை திறந்து பார்த்துக்கொண்டிருந்தான்... அந்த பதிவிற்கு பின்னூட்டம் பெரும் ஆறுதலை தந்தது அழுத்தமான , நல்ல பதிவு என்று பாராட்டிவிட்டு , தங்களுக்கு பிடித்த , தங்களை உறையச்செய்த வரிகளாக கீழ்க்கண்ட வரிகளைத்தான் குறிப்பிட்டிருந்தார்கள் . 

//மனமேடை ஏறுவதற்கான

ஒத்திகை பார்த்தே

ஓய்ந்து போனேன் // 

கவியமுதனுக்கும் வலித்த வரிகள் இதுவாகத்தான் இருந்திருந்தது . 

சற்று நேரத்தில் மற்றுமொரு குறுஞ்செய்தி வந்திருப்பதாக ஒற்றை எண் சிகப்பாக எரிந்தது , பிரித்துப்பார்த்ததும் அதே ஜப்ஃனா கேர்ள் , அனைவருக்கும் பிடித்திருந்த , வலித்திருந்த, மேல் குறிப்பிட்ட அதே வரிகள் தனக்கும் பிடித்திருக்கிறது என்று அனுப்பியிருந்தாள். 
மறுபடியும் பதிலுக்காய் ஒ...... , அப்படியா ? நன்றி. என்று அனுப்பினான் கவியமுதன் .

அடுத்ததாக எப்படியும் ஒரு செய்தி வரும் என்று எதிர் பார்த்து பார்வையை செய்திப்பெட்டியின் மேலேயே வைத்து காத்திருந்தான். அவனது காத்திருப்பு வீண் போகவில்லை. அடுத்த செய்தியையும் அவளே அனுப்பியிருந்தாள்.

தான் கொழும்புவில் இருக்கும் தன்னுடைய அக்கா வீட்டிற்கு வந்திருப்பதாகவும், நாளை ஜப்ஃனா போய்விடுவேன் அங்கு போய் பேசுகிறேன்.

டேக் கேர் என்று முடித்திருந்தாள்.

பதிலுக்கு – bye , டேக் கேர் என்ற
செய்தியை அனுப்பிவிட்டு தனது கணினியை மூடி வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டான்., ஒரு வார காலத்தை எப்படிக் கடத்தப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. இந்த மலைப்பு அந்த இலங்கை தமிழச்சி ஏற்படுத்தியிருந்ததானது. 

தினமும் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்து பார்ப்பதை இப்போது கொஞ்சம் ஆர்வமாக செய்யத்துவங்கி இருந்தான்.

வாரத்திற்கு ஏழு நாட்கள் என்று நிர்ணயித்தவன் எவன் ? என்று தினமும் , அவ்வப்போது திட்டிக்கொண்டான். ஏழு நாட்களைக்கடந்தும் அவள் இணையத்திற்கு வராததால் வாரத்தின் நாட்கள் ஏழு என்பதை இப்பொழுது அதிகப்படுத்திவிட்டாகளோ ? என்றளவில் லேசாக புலம்புபவனாகியிருந்தான். இந்த எதிர்பார்ப்புக்கும் , புலம்பலுக்கும் எது காரணியாக இருக்கும் என்று அவனால் அறிந்திருக்க முடியவில்லை . அநேகமாக அது காதல் என்ற உணர்வின் சீண்டலாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான். இந்த உணர்வு தன்னை முதன்முதலாக அவளால் சீண்டிவிடப்படுவதாக உணர்ந்தான்.

ஒருவாரம் கழித்து வருவதாக சொல்லியிருன்தவள் பதினோரு நாட்கள் கழித்து இணையம் திறந்து ஒரு செய்தி அனுப்பியிருந்தாள்.

“ஹாய் சாரி போன இடத்தில் கொஞ்சம் வேலை , அதனால் தான் வர இயலவில்லை” தேடிக்கொண்டிருந்தீர்களோ..... ரொம்ப ?” இப்படியாக இருந்தது அந்த செய்தி. அவள் பேசும் அழகில் வாஞ்சை இருந்ததாக எண்ணிக்கொண்டான்.

அலுவலகத்தின் கணினியில் வேலை பார்த்துக்கொண்டே அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கத்தினை திறந்து பார்த்து அவளிடமிருந்து செய்தி ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். இவனுக்கான அலுவலகப்பணி நேரம் முடியப்போவதாக கடிகாரமுள் குத்திக் காட்டிக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது.

கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று ஃபேஸ்புக் பக்கத்தினை பார்த்திருந்த போதுதான் மேற்க்குறிப்பிட்டிருந்த அந்த செய்தியை அவன் பார்த்தான் . அவளிடமிருந்து செய்தி வந்திருந்து மூன்று நிமிடங்கள் ஆகிவிட்டதாக இருந்தது . அலுவலக நேரம் இவ்வளவு சீக்கிரம் நகர்ந்து போயிருக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டான் . அவளது செய்தியை பார்ப்பதற்கும் முன் அவன் அப்படி நினைத்திருக்கவில்லை. 

ஓ...... அப்படியா ...சரி சரி நான் இப்போது அலுவலகத்தில் இருக்கிறேன். அலுவலக வேலை நேரமும் எனக்கு முடிந்துவிட்டது . தொடர்ந்து இப்பொழுது என்னால் பேச இயலாது. எனது அறைக்கு சென்றதும் ஆன்லைன் வருகிறேன். என்ற செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காய் காத்திருந்தான் . சிறிதொரு வினாடிகளுக்குள் அவளும் “oki . டேக் கேர் . ஆன்லைன் வந்ததும் மெசேஜ் பண்ணுங்கோ”. என்று செய்தி அனுப்பிவிட்டு சென்றுவிட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி தன்னுடைய பைக் சாவியை எடுத்து பைக்கை திறந்து பார்க்கிறான். அது திறக்கமுடியாமல் போகிறது . எரிச்சலடைகிறான் . தன் அலுவலக சக ஊழியரான ராஜாராமன், “என்னப்பா ... உன்னோட பைக் சாவியை வைத்து என்னோட பைக்க திறக்கற ? என்னாச்சி உனக்கு ?” என்றதும்... அவரிடம் ஒரு சாரி சொல்லிவிட்டு கிளம்பிப் போகிறான்.

நாட்களின் நீட்சி இவர்களின் பேச்சடங்கியதாய் கடந்து போயின. இருவரின் எண்ணமும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்திருக்க வேண்டும் . கடல் கடந்த இவர்களது பேச்சுவார்த்தைகள் காதல் என்னும் உணர்வுப்பூவை மலரச்செய்திருந்தது. 

இவர்கள் பேசிக்கொண்டிருந்த பிரிதொருநாளில் ஆண்டாள், “எங்கள் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை . நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்” இப்படி ஒரு செய்தியை அனுப்பியிருந்தாள். 

அவள் அனுப்பியிருந்த இந்த செய்திக்கு... அவளுக்கு கவியமுதனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இணையத்தின் மூலம் காதலித்து , மனதை பறிகொடுத்து எமார்ந்துவிட்டோமோ எண்றெண்ணியவள், தினமும், அடிக்கடி செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். அவனது அலைபேசிக்கு தொடர்புகொண்டும் அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதான குரலையே அதிரச்செய்தது.

இவள் அனுப்பிக் கொண்டிருக்கும் செய்திக்கு பதில் வந்ததா ? அழைத்துக் கலைத்துப்போன அலைபேசி மணி அடித்ததா ?

கவியமுதன் என்னவானான் ? அதன் பின்  ஆண்டாள் என்னவானாள் ? இவர்களது காதல் என்னவானது ? கவியமுதன் , ஆண்டாளை ஏமாற்ற நினைத்தானா ? ஆண்டாள் தேடிக்கொண்டே இருந்தாளா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா ? 

இதில் எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் .

இதிலுள்ள ஏதும் நிகழாமலும் இருந்திருக்கலாம் .

எங்கும் நிகழாத ஏதேனும் தியாகம் கூட இக்காதலில் நிகழ்ந்திருக்கலாம் . 

(மனித உணர்வுகளை வருடும் வகையில் , மென்மையான, இந்த காதல் கதையின் முடிவினை திரையில் காணும் பொருட்டு, இக்கதைக்கான முழுத்திரைக்கதை வடிவம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையினை திரையிட விரும்பும் தயாரிப்பாளர்கள் என்னை அணுகலாம்.

வசனம், பாடல்கள் உட்பட தயார்நிலையில் உள்ளது.)



வெறும்பயல்

வெறும்பயல்


மனிதக் கூட்டங்களுக்குள் விரக்தியின் மையப்புள்ளியாக மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஊர்ந்து சென்று, கும்பகோணம் செல்லும் பேருந்தில் இடதுபுற சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான் சோலையப்பன்.
நடத்துனரின் தடித்த குரலுக்கு மட்டும் அவன் செவி சாய்த்து கும்பகோணம் செல்வதற்கான டிக்கெட்டை பெற்றுக்கொண்டான்.

அவன் பிடிக்காமல் உதறித்தள்ளி வந்த வேலைகளுள் எத்தனையாவது வேலை இது என்று அவனுக்கே கூட தெரிந்திருக்காது. மூன்று மாதங்களாக பார்த்துவந்த மருந்து விற்பனை பிரதிநிதி வேலையையும் உதறிவிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. மனசுக்கு புடிக்காத வேலையில இருக்கதும் மனசுக்கு புடிக்காத மனைவியோட குடும்பம் நடத்துறதும் ஒண்ணுன்னு சுயம்புவாக பேசினான் என்னிடம்.

கட்டாயமாக படிக்கவைக்கப்பட்ட கல்லூரி படிப்பு சோலையப்பனுக்கு எந்தவிதத்திலும் பயன்படவில்லை. தன் மனதுக்கு பிடிக்காத வேலைக்குச் செல்வதற்கான ஒரு தகுதிச் சான்றாகவே அது அவனுக்கு பயன்பட்டது.

கும்பகோணத்தில் இறங்கி அவன் நேராக வீட்டிற்கு போகப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் நினைத்தது போலவே "டை" யும் "பை" யுமாக அவன் போய்க் கொண்டிருந்த இடம் நூலகமாக இருந்தது. "ஏண்டா... வீட்டுக்கு போயி bag எல்லாம் வச்சுட்டு டிரஸ் மாத்திட்டு போயேண்டா..." என்றேன். சிகரெட்டை ஊதியவாறு என்னை அகங்காரமாய் திரும்பிப்பார்த்து ஒரு முறை முறைத்தான். அவனின் அந்த முறைப்புக்கு எல்லாம் எனக்குத்தெரியும். அடங்கு... என்பது அர்த்தம்.

அவனது அப்பா அந்த நூலகத்தின் முன்னாள் உறுப்பினர். அவரது உறுப்பினர் அட்டையை இவன் புதுப்பித்துக் கொண்டே இருந்தான். நாங்களெல்லாம் கோவில், குளம், ஆறு, மைதானம், சினிமா என்று ஊர்சுற்றிக் கொண்டிருந்த நேரமெல்லாம் அவன் மட்டும் நூலகத்தில் கிடையாய் கிடப்பான். புத்தகப்பிரியன். விடுமுறை நாட்களில் நூலகர் வந்து திறக்கும் முன்னே இவன் அங்கு சென்று அமர்ந்திருப்பான். ஒரு சில நேரங்களில் மதிய சாப்பாட்டுக்கே வீடு வரமாட்டான். ஒரு சில நாட்களில் நூலகர், "சோலையப்பா... பூட்ர நேரம் வந்துருச்சி..." என்று கூட இவனை வெளியில் தள்ளியிருக்கிறார். எந்த நூலகர் வந்தாலும் ஒருவாரத்தில் இவனது பெயர் பரிச்சயப்பட்டுவிடும்.

வீட்டிற்கு வந்தபிறகும் தான் எடுத்துவந்திருந்த புத்தகங்களை படிக்கவும், அவ்வப்போது ஏதோ எழுதுவதுமாவே அவனது பொழுதுகளை கரைப்பான்.

எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற அவனது லட்சியத்திற்கு யாரும் உடன்படவில்லை. உடன்படவில்லை என்றால் ஊக்கப்படுத்தவில்லை. ஒரு முறை பிரபல வார இதழில் தனது கதை பிரசுரம் ஆகியிருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் சென்று காண்பித்தான். அதற்கு வீட்டில் உள்ளவர்கள், "ஒழுங்கா எங்கயாவது வேலைக்கு போயி சம்பாதிக்கிற வழிய பாரு... இப்புடி "வெறும்பயலா" சுத்தாத..." என்றார்கள்.

அப்போதிலிருந்து தான் இரண்டும் கெட்டான் மனநிலைக்கு போனது போன்ற விரக்தியில் எங்கேயாவது வேலைக்கு போவது. அவ்வப்போது எதோ எழுதுவதுமாக இருந்தான். எப்போதாவது செலவுக்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கேட்பான். அவன் கேட்கும் தொகை சிறியதாகவே இருக்கும். எனக்கும் கொடுப்பதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் இருந்தது.

ஒரு மார்கழி மாத கடும்பனி இரவில் சோலையப்பனிடமிருந்து எனது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. தாங்கமுடியாத இருமலுடன் என்னை உடனே தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். அவசரமாக கிளம்பிசென்றேன். அவன் தன் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு மாடியில் உள்ள ஒரு அறையில் தான் தங்கியிருந்தான்.

அந்த நேரத்தில் நான் சென்றதும் அவனது வீட்டில் உள்ளவர்களும் மாடி அறைக்கு வந்தனர். கொஞ்சம் மூச்சிவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். உடன் மருத்துவமனை அழைத்துச்செல்ல

ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தார் அவனது அப்பா. சற்று சுதாரித்து , சிரமப்பட்டு எழுந்து கொண்டவன் தனது ஒரு பெட்டியிலுள்ள மொத்தமான நோட் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்தான். அந்த நோட்டின் முதல் பக்கத்திலேயே எழுதமுடியாமல் கிறுக்கலாக ஒரு பதிப்பகத்தின் பெயரை எழுதினான்.

அதில் இந்த நோட்டை கொடுக்குமாறு சொல்லிக்கொண்டிருந்தபோது. ஆட்டோ வந்ததும் மருத்துவமனைக்கு பறந்தது ஆட்டோ.

அதிக புகைப் பழக்கத்தினால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான சோலையப்பன், தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஆறுமாதங்கள் கழித்து ஒரு நாள் காலையில் சோலையப்பன் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த அந்த மருத்துவமனையின் டிவி செய்தியில்,

கும்பகோணத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவர் "வெறும்பயல்" என்ற புனைபெயரில் எழுதி வெளிவந்திருக்கும் "மனித(ரில்)க் கழிவுகளா நாங்கள்" என்ற துப்புரவு தொழிலாளிகளின் வாழ்வியல் குறித்த நாவல் சாகித்ய அகாடமி

விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியை சொன்னதும்.

எந்தவித மகிழ்ச்சியையும் காட்டிக்கொள்ளமுடியாத சோலையப்பன் செய்தியை காதில் வாங்கியவனாய் இருமிக்கொண்டே இருந்தான்.

அவனதுஅம்மாவும்அப்பாவும்,அந்த செய்தியை காதில் வாங்கியவாறு தன் மகனின் நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

தன் அம்மாவின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் வெறித்துப் பார்த்த சோலையப்பனின் பார்வை, நீங்கள் பெற்றெடுத்த நான் வெறும்பயல் இல்லை என்பதை அவர்களுக்குள் குத்தியது.

சோலையப்பன் என்ற வெறும்பயலின் ஆன்மா அவனை விட்டு பிரிந்து கொண்டிருந்தது.

Friday, November 15, 2013

பழகிப்போன வலி

பழகிப்போன வலி 

ஆறுவருடங்கள் வரை அவன் கருவாகவில்லையே என்று
அவர்கள் அழுதிருக்கவில்லை .

அவர்கள் மிதித்த மருத்துவமனைகளின் வாசல்படிகள்
குத்திக் கிழித்தது கூட அவர்களை அழச்செய்திருக்கவில்லை .

பெயர் உச்சரிக்க வராத ஊர்களுக்குச் சென்று
பச்சிலை அறைத்துக்குடித்ததெல்லாம்
அவர்களுக்கு கசந்து விட்டிருக்கவில்லை .

குடியிருந்த வீதியில் நடக்கும் போதெல்லாம்
குத்திப் பேசியவர்களின் வார்த்தைகள் கூட
அவ்வளவு ஆழம் இறங்கி இருக்கவில்லை அவர்களுக்கு .

எந்த ஆராய்ச்சியும் செய்திருக்காமல்
பாட்டி சொல்லியிருந்த வேப்பமர அரசமர பிணைப்பு வட்டத்தை
சுற்றிய போதெல்லாம் ஒருநாள் கூட வலித்திருக்கவில்லை அவர்களுக்கு.

திண்ணையை விட்டு விரட்டிய தினம்
கொஞ்சம் வலித்ததாம் அவர்களுக்கு .

இப்போதும் எப்போதாவது வலிக்கிறதாம்
அப்போதெல்லாம் சொல்கிறார்கள்
பழகிவிட்டதென்று.

Wednesday, November 13, 2013

நானும் சுப்புவும்

நானும் சுப்புவும்


10 வருடம் 12 நாட்களுக்குப் பிறகு சுப்பு இன்று தான் முதல் முறையாக பார்க்கக் கிடைத்தான். கடைசியாக அவனுடைய பாட்டி இறந்தபின் மாமாவுடன் உண்டான சொத்துத் தகராறில் ஊரை விட்டு போனது அவனது குடும்பம்.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் என்னை கடந்து சென்றான்.

"டேய் சுப்பு... " என்று கூப்பிட நினைத்த எனக்குள் ஒரு தயக்கம். அவன் பழைய சுப்புவாக இருந்திருக்க வில்லை.

இரண்டு கைகளையும் வேகமாக வீசி நடப்பவன் இன்று ஒற்றை காலை இழுத்து இழுத்து நடந்து போய்க்கொண்டிருந்தான். வளர விட்டிருந்த தாடியை மழிக்காமல் விட்டிருந்தான். பின்பக்க தலையில் வழுக்கை விழுந்திருந்தது. வேகமாக நடை கூட்டிக்கொண்டு அவன் பின்னாலேயே சென்று அவனருகில் சென்றதும் எனது செல் ஃபோனை காதில் வைத்தவாறு "டேய் சுப்பு எப்டிடா இருக்க..." என்று ஃபோனில் பேசுவது போல பேசினேன்.

திடுமென நான் கூப்பிட எத்தனித்த சுப்புவே திரும்பிப் பார்த்தான். எந்த வியப்புமோ, ஆர்பரிப்புமோ இல்லாமல் நேற்று பார்த்தவனைப் போல "என்னடா சிவா. எப்டி இருக்க...?" என்று ஒரு பக்கமாக சிரித்துக் கொண்டு கேட்டான். "என்னாச்சிடா... எங்க இருக்கீங்க இப்போ... ஏன் இப்டி ஆளே மாறிப் போயிட்ட...?" என்றதும் "பாட்டி தெவசத்துக்கு வந்தேன்... இப்ப தான் வந்து 10, 12 நாள் இருக்கும்." நாடோடி வாழ்கையா போச்சுடா என்னோட வாழ்க்கை... என்று அவன் ஆரம்பித்ததும் அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவை அவனே நிறுத்தினான். ஏறுடா போகலாம் என்றான். ஏறிக்கொண்டோம் இருவரும்.

பிறகு ஆட்டோ டிரைவரிடம் " கொள்ளிடம் பாலத்துக்கு போங்கண்ணே" என்று அவனே போகுமிடம் சொன்னான்.

ஆட்டோவின் வலது புறம் சுப்புவும், இடது புறம் நானுமாக உட்கார்ந்திருந்தோம். வலது புறம் வெளியே பார்த்துக்கொண்டு சிகெரட் தீர தீர ஊதிக்கொண்டே வந்தவன் எதுவும் என்னிடம் பேசவில்லை. அப்போதைக்கு நான் பேசுவதையும் அவன் விரும்புவதாக தெரியவில்லை.

கொள்ளிடக் கரை வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோவை வெய்டிங்கில் இருக்க சொல்லிவிட்டு வாடா. என்று எனக்கு முன்னால் நடந்து சென்றான் சுப்பு.

நீரற்ற ஆற்று மணல் வெள்ளத்தில் பாலத்தின் அடியில் பாதி தூரம் நடந்திருந்த போது. பாலத்தின் நிழலில் வானம் பார்த்து இரு கைகளையும் விரித்து பொத்தென விழுந்தான் சுப்பு.

பதறிப் பார்த்த எனக்கு அவன் கண்ணிலிருந்து பொல பொலவென நீர் கொட்டிக்கொண்டிருந்தது.

மெல்ல அவனுடைய சிரமங்களை சொல்ல ஆரம்பித்தான்.

எனக்கு தெரிந்து அவன் சிரமங்களை யாரிடமும் சொல்லிக் கேட்டதில்லை. இடி விழுந்த மாதிரியான சிரமம் வந்தாலும் கொஞ்சநேரம் எல்லோரிடமிருந்தும் விலகி நிற்பான். யாரிடமும் எதுவும் பேச மாட்டான். யார் பேசுவதும் அவனது காதில் விழுந்திருக்காது. பிறகு தானாகவே சமாளித்துக் கொள்வான். அன்று அவனுடைய சிரமங்களை நான் கேட்கக் கேட்க மறுபடியும் எனக்கு இவன் சுப்பு தானா என்ற  சந்தேகம் வேறு.

கடைசியாக அவன் சொன்னது, அப்பாவுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போயிருச்சி... அவசரம் அவசரமா ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனோம். போற வழியில ஒரு ஆக்சிடென்ட் அதுல அப்பா, கூட வந்த அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அக்கா அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டா...

ஆறுதல் சொல்ல யாருமில்ல சிவா எனக்கு.... வாழ புடிக்கல தான்... ஆனா சாக பயமா இருக்கு. யாரையாவது தொத்திக்கிட்டு உயிர தக்க வச்சிக்கணும்னு அலையுறேன்... என்றவாறு என் சட்டயைப்பிடித்து ஆறுதல் சொல்லு ஆறுதல் சொல்லுன்னு உலுக்கி கதறி அழுதுட்டே இருந்தான்.

அவனை கட்டி அணைத்துக் கொள்வதைத்தவிர வேறு எதுவும் எனக்கு சொல்லத்தெரியவில்லை.

Sunday, November 10, 2013

மழை மொழி

மழை மொழி 


மழை பேசுகிறது

அது விழுந்து சிதறும்

பொருளின் துணை கொண்டு.

கரிசனம்


கரிசனம்

கரிசனமாய் முதலாளி தந்த

ஒரு கோப்பை தேநீருக்குள்

திருடிக்கொண்டிருந்தார்

ஒரு நாளைக்கான ஊதியத்தை.


Thursday, November 7, 2013

எதுவோ...



அது எப்போதும்

அழகாகவே இருப்பதாக

அவனுக்கு பிம்பப்படுகிறது.

ஆனால் அழகென்பது

அவன் விரும்பாத

பிம்பமாகவே

எப்போதும் இருக்கிறது.


மியாவ் .... மியாவ்....




மியாவ் .... மியாவ்....

மிகச்சரியாக "நியாபகமில்லை" என்று எழுதலாமென நினைக்கையில் என்தோழி, சகோதரி "ஞாபகம்" என்பது தான் சரியானதாக இருக்கும் என்று கூறியது நியாபகம் வரவே. sorry .... sorry ..... ஞாபகம் வரவே.... ஞாபகம் என்றே எழுதுகிறேன் . இது அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட எத்தனையாவது பிழைத்திருத்தம் என்று ஞாபகம் இல்லை.

நினைவு என்று கூட எழுதிருக்கலாமே ? என்று உங்கள் மனக்குரல் கூவுவது என் செவிவழி துவாரம் துளைத்து செல்வதையும் உணரமுடிகிறது !!

சரி உள்ளே செல்வோம்...

மிகச்சரியாக ஞாபகமில்லை. காலை ஒரு 7 மணி இருக்கலாம் சோர்வும் உறக்கமும் தன்னை ஓய்வெடுத்து கொண்டிருக்கவில்லை ..

முந்தைய இரவில் , எல்லை வரையறுக்காமல் உபயோகமற்று உலவித்திரிந்த கற்பனைக்குதிரையை துரத்திச்சென்ற களைப்பினால் ஏற்பட்ட சோர்வு அது .

கீற்று வேயப்பட்ட பந்தலிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் நீர்ப்பந்தினைப்போல் ஆங்காங்கே மழைத்துளிகள் கனமாக சொட்டிக்கொண்டிருந்தது . விடிந்துவிட்டதற்கான அறிகுறிகள் ஒலிக்கத்தொடங்கின. மூன்றாவது தெருவிலுள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து “கோதையின் திருப்பாவை” என்ற கிருஷ்ண கானம் மிதமான ஒலியுடன் பாடிக்கொண்டிருந்தது. பால்காரரின் பாத்திரம் சைக்கிளில் முட்டிக்கொண்டு எழும் சத்தம் , கோலமாவு விற்று செல்பவரது கர கர குரல் சத்தம் , வீதிக்குழாயடியில் முக்கு வீட்டு சுசீலாவும் , கீற்று வீட்டு சரோஜாவும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததும் , அடிக்குடத்தில் வேகமாக நீர்விழுந்து எழும் சத்தமும் , குடம் நிறைகையில் நிறைவான சத்தமும் கேட்டு கண்கள் விழிக்க செய்திருந்தது .

சோர்வையும் ,உறக்கத்தையும் சுமந்த படியே தான் இன்றைய பொழுதின் இறுதியை கடக்கப்போகிறோம் என்று தோன்றியிருந்தது தன் பெற்றோர்களான பூர்ணசந்திரா குணாளனுடன் வசித்து வரும் மணவாளனுக்கு.

எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு காலை தேனீரின் முதல் சுவையை ரு(ர)சிக்க ஆயாசமாக நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியின் தொலை இயக்கியை எடுத்து ஏதோ ஒரு எண் கொண்ட பொத்தானை அழுத்தி தொலைக்காட்சியை இயங்கச் செய்தான் மணவாளன்.

மணவாளன் தன் அம்மா கொண்டு வந்து கொடுத்த தேநீரை ரு(ர)சித்துக்கொண்டிருக்கையில் . பிறந்து 10 நாட்களுக்குள் தான் இருக்கும் அதற்க்கு. கருப்பு நிற உடல் கொண்டதாயிருந்தது. பிரமீடு போன்றொரு செந்நிற அடையாளம் அதன் நெற்றியில். கண்களை அண்மித்த பகுதி , கழுத்து மற்றும் வாலின் நுனிப்பகுதி. இங்கு மட்டும் தான் வெண்ணிறம் ஒட்டிக்கொண்டிருந்தது . கண்டிப்பாக அது ஒரு கூட்டத்துடன் தான் பிறந்திருக்கும் .

 எந்த வீட்டின் அடுப்படி பாத்திரத்தில் வைத்திருந்த பாலையும் திருடிக்குடிக்க அது இன்னமும் தைரியம் இல்லாமலும் , பயிற்ச்சி பெறாமலும் இருந்திருந்தது . மழையில் நனைந்திருந்ததால் அதன் முடிகள் திரட்டிக்கொண்டு தோலுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. தாயிடமிருந்து பிரிந்திருந்ததால் பசியின் பிணி தாக்கப்பட்ட சோமாலியக் குழந்தையின் உடல் போலவும், வறுமையில் தன்னுயிர் மாய்த்துக்கொண்ட விதர்பா விவசாயிகளின் உடல் போலவும் இருந்தது அதன் உடல்.

சிங்க வேட்டையின் போது கூட்டத்திலிருந்து சிதறிய ஒற்றை மான்குட்டி போல எப்படியோ தன் உறவுகளை தொலைத்து விட்டு மியாவ் ..... மியாவ்....... மியாவ்....... என்று விடாமல் கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்துவிட்டது .

சிறுவயதிலிருந்தே வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தது மணவாளனுக்கும் அவரது வீட்டாருக்கும். இதற்காக அவர்கள் தனியாக மெனக்கெட விரும்பவில்லை . குறிப்பாக பூனையை பெரும்பாலான வீடுகளில் அனுமதிப்பதே இல்லை . பூனை முடி வீட்டில் கொட்டக்கூடாது. அப்படி கொட்டினால் பாவம் வந்து சேரும் என்று தடுத்து விடுவார்கள் . மனித நேயம் இல்லாமல் இருந்தார்கள் என்று கூட சொல்லிக்கொள்ளலாம் .

பொதுவாக நாம் அனைவருக்குமே நமது சிறு வயதுகளில் நமது நண்பர்களோ, தோழிகளோ ஒரு செயல் செய்தால் நாமும் அதையே செய்ய முற்பட்டிருப்போம் . மணவாளன் தனது நண்பர்களின் வீடுகளில் , புறா, நாய் , பூனை , கோழி இவைகள் வளர்வதை அவர்களுடன் சென்று பார்த்திருக்கிறான் . அப்படி பார்த்த நாளன்று மட்டும் தானும் வளர்க்க ஆசைப்பட்டு தன் வீட்டில் வந்து இவைகளில் ஏதேனும் ஒன்று வளர்க்க அனுமதி கோருவான்.

“டேய்ய்…. இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுடா. முதல்ல நீ ஒழுங்கா படிக்கிற வழிய பாரு” என்று அவனது அப்பா, அம்மா, அக்கா இவர்களது குரல் ஒத்தகுரலாக ஒலிக்கும்.

மீறி அடம்பிடித்து கேட்பானேயானால் ஆண்டுத்தேர்வுகளில் அவன் எடுத்த மதிப்பெண்கள் அவர்களது கூடுதல் பேச்சுக்கு காரணமாய் இருந்தது . அத்துடன் அவனும் மறந்துவிடுவான் . மறுபடியும் அந்த நண்பர்களது வீட்டிற்கு சென்றால்தான் பிராணிகள் வளர்ப்பு குறித்த ஆர்வம் அவனுக்கு வந்திருந்தது. அப்படி வரும்போது மதிப்பெண் குறித்த வசைமொழிகள் முகம் காட்டும்... அப்படியே விட்டுவிடுவான் .

சரி பூனையின் பின் செல்வோம்.

எப்படியோ தன் உறவுகளை தொலைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த அந்த பூனை எங்கு செல்வதென்று தெரியாமல் மூளை முடுக்குகளில் மாறி மாறி ஒளிந்து கொண்டு கத்திக்கொண்டிருந்தது . மணவாளனின் அம்மாவும், மணவாளனும் சேர்ந்து தூக்கி வெளியில் கொண்டு விட்டு விடலாம் என்றால், இடுக்குகளில் நின்று சற்றே சீறியது பூனை . என் உறவுகளை தொலைத்து விட்டு கொலைவெறியுடன் வந்திருக்கிறேன் . வெளியே மழை. உடலிலே குளிர். குடலிலே பாலைவனம். எங்கு செல்வதென்று தெரியவில்லை... என்னை சீன்டாதே என்பது போல் இருந்தது அந்த சீற்றம். மேற்கொண்டு தன்னுடைய வீரத்தை அந்த பூனையிடம் காண்பித்து அதற்கான மகுடம் சூட்டிக்கொள்ள விரும்பாத மணவாளனிற்கு, குற்ற உணர்வுகள் கருந்தேளின் கொடுக்குகளைப் போல் கொட்டியது. அவ்வப்போது இடத்தை மாற்றிக்கொண்டும் இருந்தது அப்பூனை .

சரி விடும்மா.... கொஞ்ச நேரத்துல தானா ஓடிபோயிடும் என்றான் மணவாளன் . சிறிது நேரத்தில் ஓடியும் விட்டது. 10 நிமிட இடைவெளியில் மறுபடியும் வீட்டுக்குள் ஓடி வந்து விட்டது. இம்முறையும் விரட்டிப்பார்த்து முடியவில்லை.. ஒரு ஓரமாக இருந்த அட்டை பெட்டியில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில் உறங்கிவிட்டிருந்த பூனையை இவர்கள் இருவரும் எழுப்ப மனமில்லாமல் விட்டு விட்டனர் .

மணவாளன் தன் அம்மாவிடம், பேசாம இங்கேயே வளர்ந்துட்டு போகட்டுமேம்மா என்றான் .

அட ....நீ வேரடா... அது கண்ட எடத்திலயும் அசிங்கம் பண்ணி வைக்கும்… ஊடே நாறும். நீயா வந்து சுத்தம் பண்ணுவ ?

என்று கூறிக்கொண்டே கையில் மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுடன் வாசலில் நின்று கொண்டிருந்த காய்கறி வண்டிக்காரரிடம் பேரம் பேச சென்று விட்டாள்.

இந்த முறை காமராசின் ஆண்டுத்தேர்வுகளின் மதிப்பெண் குறித்த துருப்பு சீட்டு அவர்களிடம் இருந்திருக்கவில்லை .

பூனை உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளே மறந்து விட்டார்கள் . மணவாளனின் அலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம் மட்டும் பூனை திடுக்கிட்டு எழுந்து பக்கவாட்டுகளை நோட்டமிட்டுவிட்டு பின் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. தொடர்ச்சியான தன்னுடைய கனவை மணவாளனின் அலைபேசி அழைப்புமணி இடையறுப்பதாக ஏசிக்கொண்டது பூனை. கனவுகள் சேர்ந்து பயணித்த நீண்ட உறக்கத்தில் தன்னுடைய சோர்வினை முற்றிலுமாக முறித்துக்கொண்டிருந்தது.

அரைமணி நேர இடைவெளியில் 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ,10 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனும் தயங்கி தயங்கி மணவாளனின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அண்ணே .... அண்ணே .. என்று இரண்டு முறை அழைத்தனர். வெளியில் வந்த மணவாளன் , என்னடா என்றதும் தயக்கம் மாறாமல், அண்ணே ஒரு பூனை குட்டி இங்கே வந்துச்சான்னே என்றான் .

மறந்து போயிருந்த காமராசுக்கு திடீரென ஞாபகம் வராததால் விழிகளை மேல்நோக்கியும், உருட்டியும் விழித்துவிட்டு .

இந்தோ படுத்துருக்குடா. இந்த பூனையா பாரு ? உன்னோடதா... ? என்றான்.

இருவரில் ஒருவன் ஆமாண்ணே என்னோடது என்றான் , மற்றொருவன் ஆமாண்ணே இவனோடதுன்னே... என்றான் .

ஆமாண்ணே இதுக்கும் முன்னாடி ஒரு பூனை வளத்தேன் செத்து போச்சுன்னே…. இதும் கானாபோயிடுச்சுன்னு இருந்தே.... கிடைச்சுடுசுன்னே தேங்க்ஸ்நே . என்று பூனையை தூக்கி தன் தோளில் ஏற்றிக்கொண்டு கொஞ்சினான் .

மணவாளனின் சீண்டலுக்கு படியாமல் மீறி சீண்டிய பூனை, விக்னேஷின் கொஞ்சலுக்கு விசுவாசமாய் அவனிடம் அதுவும் கொஞ்சிக்கொண்டிருந்தது.

டேய் பேர் என்னடா என்ற மணவாளனிடம், ஸ்வீட்டிண்ணே... என்றான் விக்னேஷ்.

டேய்.... இது என்னடா நாய்க்குட்டி பேரு மாதிரி இருக்கு ? நான் கேட்டது உன்னோட பேருடா ?

விக்னேஷ் என்று இருவரும் கூறினார்கள் .

ரெண்டுபேர் பேருமா விக்னேஷ் ?

ஆமாண்ணே.....என்று கூறிக்கொண்டே பூனையிடம் கொஞ்சிக்கொண்டிருந்த விக்னேஷிடம், விளையாட்டாக சீண்டினான் மணவாளன் .

ரொம்ப தொந்தரவு பண்ணிடுச்சுடா பூனைக்குட்டி... குச்சாலே ஓங்கி ஓங்கி அடிச்சேன் தெரியுமா ? அது ஒடம்புல அடிபட்ட காயம் இருக்கா பாரு....
என்று மணவாளன் பொய் சொல்வதை தெரிந்து கொண்டு நம்பாதவனாய் சிரித்துக்கொண்டே, பாவம்னே அடிக்காதீங்கன்னே என்று விடைபெற்றார்கள் விக்னேஷ்கள்.

Tuesday, November 5, 2013

கனவில் பூத்த கள்ளிசெடிகள்


"கனவில் பூத்த கள்ளிசெடிகள்" என்ற தலைப்பிட்டு நான் எழுதிய சில கவிதைகளை தொகுத்து
"கசிஉ" பதிப்பக வெளியீடாக, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே நூலாக வெளியிட இருந்தோம். சில காரணங்களால் இதை நூலாக வெளியிட இயலவில்லை. ஆகவே அந்த தொகுப்பினை இங்கே வெளியிடுகிறோம்.
இந்த நூலுக்கான அட்டையை வடிவமைத்தவள் என் மகள்.




1 ) முனியம்மாவுக்கு                          26 ) இன்னும் பல புத்தகங்கள்

2 ) அதன் பெயர் நாய்                                                                          

சூழ்நிலைக்கைதி

முந்தியை இழுத்துப்போர்த்திய சிகப்புச்சேலையில்

மூதாட்டியொருவர் எதிர் வீட்டு வாசலில்

யாசகம் கேட்டு நின்றாள்.

எவ்வளவோ யாசகம் அளித்த

எதிர்வீட்டுப்பெண்ணின் கையிலிருந்து

யாசகம் பெற்றுக்கொண்டே...

தீர்க்க சுமங்கலியாக இருக்கணும்

என்றவாறு நிமிர்ந்தவளின் நெற்றியைப் பார்க்கிறாள்.

பின் மெட்டியைப் பார்க்கிறாள் .

பொட்டும் மெட்டியும் காலனிடம் சென்றிருந்தது.

Friday, November 1, 2013

தங்கையின் தம்பி


தங்கையின் தம்பி

சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் தங்கள் முகங்களை காட்டுவதில்லை. ஒரு சில இந்திய பெண்களும் கூட.. ஏன்... ஏனைய நாட்டுப் பெண்களும் கூட . இப்படித்தான் ஃபேஸ்புக்கில் தயாளனுக்கு அறிமுகமானாள் யவனிகா.

இது ஒரு சமூக வலைத்தளம் என்பதால் யார் வேண்டுமானாலும் அவர்களது படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு விடலாம் . அப்படி பதிவிறக்கம் செய்பவர்கள் அயோக்கியவர்களாகவும், வக்கிர புத்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களேயானால் அந்தப் படத்தை கணினியின் மூலம் ஒருசில மென் பொருட்களை பயன்படுத்தி எப்படி அலங்கோலமாகவும் அவர்களை காட்டிவிடமுடியும் . இப்படியான பாதிப்புகள் ஆண்களை பெருமளவில் பாதிப்படைய செய்வதில்லை. இந்த பாதுகாப்புக் கருதியே பெரும்பாலான பெண்கள் பிரபலமான நடிகர், நடிகையர் மற்றும் பிரபலமான நபர்களது படங்களை அல்லது தனக்குப் பிடித்த படங்களை அடையாளப் படமாக வைத்திருப்பார்கள்.

இப்படித்தான் இரண்டு கண்களை மட்டும் விழித்தவாறு இருந்த ஒரு கலர் படத்தை அடையாளப்படமாக வைத்திருந்தாள் யவனிகா.. அந்த கண்களுக்கு ஏதோ ஒரு காவியனோ, காவினியோ தன் கரங்களாலோ, கணினியாலோ உயிர் கொடுத்திருந்தார்கள். அந்த கண்கள் படத்தின் இமைக்கு மை தீட்டப்பட்டு இருந்தது . புருவத்திற்கு அடர்த்தியாக அதிக முடி சேர்க்கப்பட்டிருந்தது. கண்டிப்பாக அது யவனிகாவின் காதல் கணவன் மஹீதரனால் வரையப்பட்ட கண்கள் இல்லை . அப்பொழுது மஹீதரனுக்கும் ,யாவனிக்கவிற்கும் பார்வைகள் இருந்திருக்கவில்லை. அந்த கண்கள் யாவனிகாவின் உயிர் அண்ணன் தயாளனின் காதல் மனைவி கண்ணம்மா வின் கண்களாக கூட இருந்திருக்கலாம். 

தயாளனுக்கும் யவனிகாவிற்குமான நட்பு மலர்ந்த அன்றே , தயாளன், யவனிகாவிடம் “இன்றுமுதல் நீ என் தங்கையாகிறாய்” என்று சொல்லியதும், அருவியிலிருந்து விழும் நீர் போல குதூகலித்து வார்த்தைகளால் “ஐ..........” எனக் கத்தினாள். அவளுடைய அந்த குதூகளிப்பு எனக்கும் அண்ணன் இருக்கிறான் என்றது போலிருந்தது. பின்நாட்களில் இந்த நட்பு அலைபேசியில் பேசிக்கொள்ளும் வகையில் நம்பிக்கை வேர் பரப்பியது. 

யவனிகா தயாளனிடம் பேசும்போதெல்லாம் தன் அப்பாவைப் பற்றியும் , தம்பியைப் பற்றியுமே சொல்லிக்கொண்டிருந்தாள். அவளது அம்மாவைப்பற்றி சொல்லவில்லையே என்று தயாளனுக்கு தோன்றியது . அவள் அம்மாவைப்பற்றி கேட்பதா ? வேண்டாமா? என்ற தயக்கத்தில் ஒரு நாள் அம்மாவைப் பற்றி சொல்லவே இல்லையே யவனிகா நீ ? என்று கேட்ட தயாளனுக்கு அவளிடமிருந்து வந்திருந்த பதில் என்னவாக இருந்திருக்கும்...?

பின்பனிக்காலத்தில் ஆதவனின் ஆளுகைக் குள்ளிருந்த அண்டவெளியை, ஆலங்கட்டி மழை உடைத்து சிதற்றியது போல இவன் எதிர் பார்த்திராத பதிலை எந்தத் தயக்கமுமின்றி போலியான துணிச்சலை போர்த்திக்கொண்டு சொன்னாள் , “இப்போதான் ஒரு வாரம் ஆகுது போய் சேர்ந்துட்டாங்க” என்று. நம்ப முடியாதவனாய் அதிர்ச்சியில் உடைந்து போன தயாளன் தன்னுடைய அம்மா இறந்து போனதை யாராவது இப்படிச் சொல்வார்களா ? இவ்வளவு துணிச்சலாக... அதுவும் ஒரு வாரத்திற்குள் !?. இந்த சிறிய வயதில் தன் தாயைப் பறிகொடுத்த செய்தியை யாரும் இவ்வளவு துணிச்சலாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கவில்லை தயாளன். அவள் சொன்ன சிறிது நேரத்திற்கு பேசும் திறனவற்றவனாய் மாறி இருந்தான் . யவனிகா ஏதோ விளையாட்டிற்கு சொல்கிறாள் என்று அவனால் எண்ணிக்கொள்ள முடியவில்லை . என்ன யவனிகா உண்மையாகத்தான் சொல்றியா ? என்று அவளிடம் மறுபடியும் வலியுறுத்திக் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்க்கும் செய்தியாகவும் இல்லை . இறப்புச்செய்தியில் பொய் இருக்காது என்று நம்பினான் . அன்றிரவு அவனது உறக்கம் அவனிடம் வந்து சேராமல் சதுப்புநில காடுகளுக்குள்ளும், செங்கடல் கரையில் நின்று அது உமிழும் அலைகளை மிதித்தபடியும் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது .

தயாளன் இப்படித்தான் மற்றவர்கள் துன்பத்திற்காக தன்னுடைய உறக்கத்தை தேசம் கடந்தும், கண்டங்கள் தாண்டியும் அலைய விட்டுக் கொண்டிருப்பான் . மற்றவர்களது துயரங்களை செவி நுழைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவனது உறக்கம் கடவுச்சீட்டு இல்லாமல் எட்டிய தேசங்கள் எல்லாவற்றிற்கும் சென்று திரும்பியிருக்கிறது. 

அன்று வரை யவனிகாவை தன் உடன்பிறவா தங்கை என்று அழைத்து வந்தவன். தங்கை மட்டுமல்ல மகளென்றும் நினைத்துக் கொண்டான் .

ரஞ்சித் எப்போதும் நண்பர்களையும் , விளையாட்டுகளையும் கட்டிக்கொண்டு திரிவது... பார்ப்பவர்களில் சிலரையாவது வெறுப்படையச் செய்திருக்கும். அவனது வீட்டினருக்கோ அல்லது அவன் கூட்டிக்கொண்டு திரியும் அவனது நண்பர்களின் வீட்டினருக்கோ இவன் மீது எரிச்சல் உண்டாகியிருக்கும். அப்படி பொறுப்பற்றவனாய் எப்போதும் ஊர் சுற்றித் திரிபவன். படிப்பைப்போலவே சாப்பாடும் அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அந்தியில் கூடடையும் பறவைகளைப் போல் இரவு படுக்கைக்குமட்டும் வீட்டிற்கு வந்தால் போதும் என்று நினைப்பவன். ஒரு முறை பின் வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய நண்பனான சைமனின் அம்மா, “என்ன ரஞ்சித் உங்க வீட்ல உன்ன கண்டிக்கவே மாட்டாங்களா ? பொழுதனைக்கும் இவனையும் கூட்டி கூட்டிக்கிட்டு விளையாட போயிடுற ? இவனோட படிப்பயும்ல சேத்து கெடுக்குற நீ ?” என்று சொன்ன வார்த்தைகள் ரஞ்சித்தின் அப்பா காதில் ஈட்டியாய் பாய்ந்தது.

எருமை மாட்டின் மீது மழை பெய்தால் பொருட்படுத்தாமல் போகுமே.... அதைப்போல விளையாட்டாக எடுத்துக்கொண்டு ஏதோ பதில் சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறான். தன் மகனைப் பற்றிய குத்தீட்டி சொற்கள் தன் காதுகளில் செருகியிருந்ததால் வார்த்தைகளின் வலியை குறைய விடாமல் “பேரக் கெடுக்கிரியேடா படுபாவி பயலே” ன்னு அவருடைய முழு கோபத்தையும் பூவரச மரப்பிரம்பால் காட்டிக்கொண்டிருக்கையில் ரஞ்சித்தின் அக்கா, கோழிக்குஞ்சினை கொத்திப்போக தாழப் பறந்து வட்டமிடும் வல்லூறு  விடமிருந்து காப்பாற்றும் கோழியைப் போல குறுக்கே விழுந்து ரஞ்சித்தை அனைத்துச் செல்கிறாள். 

அப்பாவின் சட்டைப் பையில் அவ்வப்போது காசு எடுத்தும், அம்மாவின் சேமிப்பை லவட்டியும் விட்டதில் அவ்வப்போது மாட்டிக்கொண்டு அடிவாங்குவதும் பழகிப்போயிருந்தது ரஞ்சித்துக்கு . எழுதப்படாத புதிய அன்ரூல்டு நோட்டு தாள்களை கிழித்து ராக்கெட் செய்து விட்டு விளையாடியும், அப்பாவிடம் அடிவாங்கியிருக்கிறான். ஒரு முறை தான் வைத்திருந்த பட்டத்தின் ஜக்கிரி நூலுக்கு மாஞ்சா போட மற்றொரு நண்பன் கோயிந்துவிடம் யோசனை கேட்கிறான்.

கோயிந்து : டேய் கழிச்சா கொட்ட , மயில் துத்தம், வஜ்ஜிரம் இதெல்லாம் நாட்டு மருந்து கடையில வாங்கிடலாம். ஆனா ஒரே ஒரு மேட்டர் மிஸ்ஸிங் .

ரஞ்சித் : என்னடா அது .

கோயிந்து : கண்ணாடி மட்டும் வேணும், சவுண்ட் சர்வீஸ் காரான் டியூப்லைட்ட தொடவுட மாட்டேங்கிறான். ஃபீசா போனத வச்சி என்ன பண்ண போறான்டா அவன் ? படித்துறை சத்திரத்து சாமியார் கோயில் பிரசாதம் வாங்கப் போறப்போ வெரட்டுவாங்களே... அப்புடி வெரட்டி அடிக்கிறான்.

ரஞ்சித் : ஏண்டா டியூப் லைட் தான் வேணுமா ? பாட்டிலா இருந்தா குப்பையில பொறுக்கிடலாம்.

கோயிந்து : ஹே..... போடா வெண்ண.... எங்களுக்கு தெரியாதா குப்பையில பொறுக்க ....? வந்துட்டாரு டீடெயில் சொல்ல.... டியூப் லைட்ட அரச்சி மாஞ்சா போட்டு பாரு..... எத்தன பட்டம் பறந்தாலும், எவன் எப்புடி மாஞ்சா போட்டுருந்தாலும் சும்மா கத்தி மாதிரி அறுத்து வுட்டுட்டு நம்ம பட்டம் மட்டும் கும்.....முன்னு பறக்கும்.

ரஞ்சித்: ட்ரை பண்ணுவோம்டா கோயிந்து. இது ஒரு மேட்டரா ? விடு விடு.... நாளைக்கு தான மாஞ்சா போட போறோம். அதுக்குள்ளே கிடைக்காமலா போய்டும். என்று சொல்லிக்கொண்டே இருவரும் அவரவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுகின்றனர்.

மறுநாள் பள்ளிக்கூடம் சென்ற ரஞ்சித்தின் முழுக் கவனமும் பட்டத்தின் நூலுக்கு மாஞ்சா போட டியூப் லைட் எப்படி, எங்கிருந்து எடுப்பது என்பது பற்றியதாகவே இருந்தது. ஒன்பது ஐம்பதுக்கு பள்ளியின் மணி அடிக்கப்பட்டு அனைவரும் இறைவணக்கத்திற்காக கூடியிருந்தனர். விளையாட்டு ஆசிரியர் அன்றைய தினம் விடுப்பில் இருந்ததால் வரவில்லை. அதன் பொறுப்பை உதவித்தலைமை ஆசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார். இறைவணக்கம் முடிந்து அனைவரும் களைந்து செல்கையில் திடீரென ஏற்ப்பட்ட மாரடைப்பில் உதவித்தலைமை ஆசிரியர் சரிந்து விழவே, மருத்துவமனை கொண்டு சென்று பலனில்லாமல் மரணித்ததின் பொருட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டு விடுகிறது.

மரணச்செய்தியை பள்ளியின் பால்ய பருவம் கொண்டாடும் அளவிற்கு எப்பருவமும் கொண்டாடிவிட முடியாது. சற்று நேரத்தில் நண்பர்கள் புடை சூழ வீடு திரும்பிக்கொண்டிருக்கிறான் ரஞ்சித். பட்டத்தின் நூலுக்கு மாஞ்சா போட டியூப் லைட் கிடைக்கவில்லை. வெகுநேரம் யோசித்த ரஞ்சித், தன் வீட்டிலுருந்த ஒரு ஸ்டூலை தூக்கி அடுப்படியில் எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டை கழற்றி விட்டான் . அவளது அக்கா எதற்கு என்னவென்று கேட்டும் “நீ சும்மாரு எங்களுக்கு தெரியும்” என்று சொலிவிட்டு எடுத்து சென்று விட்டான்.  

டியூப் லைட் கண்ணாடியை குளத்தங்கரை படிக்கட்டில் வைத்து ஒரு குழவியால் அரைத்து முடிப்பதற்குள் இரண்டு காதுகளுக்குள்ளும் இரண்டு உலகப்போர்கள் நடந்து முடிந்திருந்தது அவனுக்கும் கூட இருந்த நண்பர்களுக்கும். அந்த அசதி அடங்குவதற்குள் ரஞ்சித்தின் அப்பா அவர் பங்குக்கு அவனது முதுகில் ஒரு வழித்தாக்குதளுக்கான ஒரு குட்டி போரை நிகழ்த்தி இருந்தார். திமிரி எதிர்க்க திராணியும் துணிச்சலும் இல்லாது வாங்கிக்கொண்டான். “ மாஞ்சா போட வூட்ல எரிஞ்சிக்கிட்டு இருந்த டியூப் லைட் கேட்க்குதா உனக்கு” ன்னு . அவர் திட்டிய வார்த்தைகள் எல்லாம் அவன் காதில் நுழையவே இல்லாமல் இருந்தது.

தன் வீட்டிற்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா இப்படி வந்து கொண்டிருந்த அந்த மாலைப் பொழுதில் ரஞ்சித் யாரையும் கண்டுகொள்ளாமல் மெல்ல நழுவி நண்பர்களுடன் விளையாட வந்திருந்தான் . அவனது நண்பர்களில் ஒருவனான சைமன் , டேய் ரஞ்சித்து என்னடா இன்னிக்கும் விளையாட வந்துருக்க ? 

ரஞ்சித் : நாந்தான் டெய்லி வருவனே. இன்னிக்கு மட்டும் என்ன புதுசா கேட்கிற ?

ராமன் : டேய் உனக்கு தெரியாதா ? உங்க வீட்டுக்கு விருந்தாளி எல்லாம் வந்திருக்காங்க தானே ?

ரஞ்சித்: ஆமா .... விருந்தாளின்னாலே நான் வெளில வந்துடுவேன்னு உனக்கு தெரியாதா ? என்ன மார்க் வாங்குன ? எத்தனையாவது ரேங்க் எடுத்தன்னு ஆளாளுக்கு கேட்டு உயிர எடுத்துடுவாங்க . பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும். ஆனா அப்புடி சொல்ல எனக்கு தெரியாது. கன்னாபின்னான்னு பயத்துல ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு மாதிரி சொல்லிபுடுவேன். அதுக்கு இப்புடி எஸ்கே.........ப். நு ஓடி வந்துருவேன்.

ரஞ்சித்துடன் 2 வயது இளையவனான சைமன், கூட்டத்திலிருந்த ரஞ்சித்தை தனியாக அழைத்து சென்று அவனது காதில், “டேய்..... உங்க அக்கா வயசுக்கு வந்துட்டாங்களாம் . அதான் உங்க வீட்டுக்கு விருந்தாளி நிறைய பேர் வந்துருக்காங்க உனக்கு தெரியாதா ? எங்கப்பாட்ட எங்கம்மா சொல்லிட்டு இருந்தாங்க . நான் அப்பாகிட்ட என்னம்மா சொல்லிட்டு இருந்தேன்னு கேட்டேன் அம்மா என்னைய திட்டி அனுப்பிட்டாங்க”. என்றதும் ரஞ்சித்தின் முகம் மாறியது... நம்மைவிட 2 வயது சிறியவனுக்கு... அதுவும் நம்ம வீட்டு விஷயம் தெரிஞ்சிருக்கு... நமக்கு தெரியலயேன்னு யோசித்தவன், இலைகளற்ற பட்டமரத்தில் சிக்கிக்கொண்ட பட்டம் போல காற்றில் சிதிலப்படுவதாக தன்னை உணர்ந்தான். 

குற்ற உணர்வுடன் வெளிப்படுத்த இயலாத விம்மலுடன் கால்கள் பின்ன நடந்து வீடு வந்து சேர்ந்திருந்தான் ரஞ்சித். அவனது வீட்டில் கவலைக்கும் கலகலப்புக்கும் இடையிலான சதுரங்கப் போட்டியில் ஒன்றுக்கொன்று வெட்டியும் வெட்டிக்கொள்ள முடியாமலும் நீண்டு கொண்டிருந்தது. அங்கு ரஞ்சித்தின் அப்பா அவரது தங்கையிடம் தனியாக அழுதுகொண்டிருந்தார். “ஒரு மாசத்துக்கும் முன்னாடியே எம்மக பெரிய மனுசியாகியிருந்தா உங்க அண்ணியாவது பாத்துருப்பா . இன்னிக்கு இருந்தா எவ்வளவு சந்தோச பட்ருப்பா . எவ்வளவு சிறப்பா செஞ்சிருப்பா விழாவ.” அப்டின்னு .

பெரும் புயலும், ஆழிப் பேரலையும் கொடுத்துச்சென்ற பாதிப்பை தன் மண்டையோட்டுக்குள் உணர்ந்தவனாய். சலனமற்ற அலையில் தத்தளிக்கும் ஒற்றைப் படகைப் போல அமைதி கொண்டிருந்தான்.

பின்னொரு நாளில் ஏதோ ஒரு அலைபேசியிலிருந்து மற்றொரு அலைபேசிக்கு ஒரு அழைப்பு செல்கிறது. அழைப்பை பெற்றுக்கொண்டவரது காதில் , “அண்ணா ... அப்பா ஆஃபீஸ் போயிட்டு வரும்போது வண்டி சறுக்கி கீழ விழுந்துட்டாங்கன்னா...வலது கால் மணிக்கட்டு லேசா நழுவிடுச்சாம். இப்போ தான் கட்டு போட்டுட்டு வந்துருக்காங்க. கொஞ்ச நாள் நடக்காம ரெஸ்ட்ல இருக்கனுமாம் . தம்பி தான் ஆஸ்பிடல் அழைச்சுட்டு போயிட்டு வந்தான். அப்பா ரூமா சுத்தம் பண்ணி , கட்டில தூக்கி அப்பா சவுகர்யத்துக்கு போட்டுக் கொடுத்து , டிவி எந்த வியூவ்ல வைக்கனும்னு கேட்டு வச்சிக்கொடுத்து, அப்பாவுக்கு தேவையான பொருள பக்கத்துல கொண்டாந்து வச்சிக்கொடுத்து . அடிக்கடி அவர பொறுப்பா கவனிச்சிக்கிரான்னா .......” என்று மகிழ்ச்சி பொங்கிய குரல் கேட்க்கிறது.

அலைபேசியில் அழைப்பு விடுத்தவள் யவனிகா....

அழைப்பை பெற்றுக்கொண்டவர் தயாளன்....

அலைபேசியில் தம்பி பொறுப்புடன் நடந்து கொள்கிறான் என்று பெருமையுடன் யவனிகா சொன்னது ரஞ்சித்தைப் பற்றி .