Wednesday, October 30, 2013

தொர தத்துவம்லாம் சொல்லிருக்கு


> அன்பை விதைப்பது பலம். அதை விதைக்காமல் இருப்பது பெரும் பலம்.

> காசை மட்டுமே தேடி ஓடும் உனக்கு கலை என்பது ஒரு காலணிக்கு சமம். 

> வாழ்க்கை கேள்விக்குறியாய் வளைந்தே இருந்தாலும்
வளைவுகளில் பயணித்து பதிலை தேடிக்கொண்டே தான் இருக்கிறது.

> நீண்ட பயணத்தின் ஊடே அவ்வப்போது எதிர்படும் வெற்றியின் தோல்வியும், தோல்வியின் வெற்றியும் காலத்தின் கைப்பிடிக்குள் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று தான்

> தனியொரு அரசியல் வாதிகளுக்கு ஊழலில் பங்கில்லை எனில்  இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.

> கருப்பு தினங்களை கடக்கையில் கூட கல்லடி பட்டுத்தான் கடக்க வேண்டியிருக்கிறது

> இறை தேடியலையும் மீனை இறையாக்கிட இறையாக்கினேன் மண்புழுக்களை.

நம்பிக்கை


அந்தியில் மலரும்
மந்தாரை விதையொன்று
அவ்வப்போது கடந்துபோகும்
கருமேகங்களின் துளிகளில்
விருட்ச வேர்களை நீட்டிப் பார்க்கிறது.

தோல்வியின் விதயாகவே
இந்த பூமியில் விழுந்திருக்கிறேனோ
என்ற விரக்தியில்
ஏதேனும் ஒரு மழையுதிர்க்
காலத்திற்காக காத்திருக்கிறது.

கடந்துபோகும் எல்லா மழையுதிர்க் காலமும்
பொய்த்தே போகிறது.

இருந்தும் மண்ணிற்கு உரமாகிவிடாமல்
விதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
Tuesday, October 29, 2013

ஒன் லைன்

எப்போதோ நான் இயக்கவிருக்கும் என் கதைக்கான படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு one line சொல்லவா...

தீபஒளி திருநாள் வாழ்த்து கவிதை


மாசடைந்து மனிதர்கள் இழந்து
கந்தல் கொண்டு நிர்வாணம் மறைத்துச்
சாலையில் திரியும்
உன் சக மனிதனுக்கு புத்தாடை கொடுத்து
உன் தீபஒளி திருநாள் வாழ்த்தை தெரிவிப்பாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன்னொருநாள் சோமபானச் செலவை தவிர்த்து
தாய்மடி காணா தளிர்கள் நிறைந்த
விடுதிக்கு ஏதேனும் செய்வாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் வாசல் வந்து நின்று
யாசகம் கேட்டு நிற்கும்
யாரோ ஒருவருக்கேனும்
தீபஒளி திருநாள் இனிப்புடன்
சுயமரியாதையையும் கற்பித்து
அனுப்புவாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் பெற்றோரை விடுதிக்கு அனுப்பிவிடாமல்
வீட்டில் வைத்து கொண்டாடுவாயே யானால்
ஒவ்வொரு நாளும் உனக்கு தீபஒளி தான்.
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் அழகைக் காட்டும் புத்தாடைக்கும்
தீபஒளி திருநாள் வாழ்த்து.

பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான உடையணிந்து
தூர நின்று பத்திரமாக கொளுத்துவாயே யானால்
உனக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன் நாவை இனிக்கச்செய்யும்
இனிப்புக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்து.

உன்னை குடும்பமாக சேர்த்த இந்த நாளுக்கும்
தீபஒளி வாழ்த்து.

பாலகிட்டு

எப்போதுமே அம்மா போட்டுக்கொடுக்கும் "டீ" யில் நிறம், மனம், சுவை... இதையும் தாண்டி  என்னமோ இருக்கிறதா,  நா , அக்கா, தங்கை, மூவருமே டீ டம்ளரை வாயில் வைத்தபடி அம்மாவுக்குத் தெரியாமல் கண்களால் பேசிக்கொள்வதுண்டு. அந்த "டீ" யில் அம்மாவின் கை பக்குவத்தையும் தாண்டி, பால் காரர் பாலகிட்டுவின் கைவண்ணமும் கலந்தே இருக்கும் . கறந்த பாலில் அவர் எடை கட்டுமிடம் வீட்டை தாண்டிய குடிநீர்க் குழாய்களாகவும் அவ்வப்போது இருக்கும் என்று நண்பர்கள் கிண்டலடிப்பதுண்டு. "யாரு... பாலகிட்டு ட்டயா பால் வாங்குறிங்க...? ரோட்ல எந்த பைப்படிய பாத்தாலும் பால் கேனோட வர்ற அவரோட சைக்கிள் தானா நின்றுமே..." என்பார்கள். அது உண்மையும் கூட. நானே அவ்வப்போது பார்த்திருக்கிறேன். இது அம்மாவுக்கும் தெரிந்திருக்கிறது என்பது பிரிதொருநாளில் தான் எங்களுக்கும் தெரியும்.

அவர் கொண்டுவந்து கொடுக்கும் பாலில் நிறம், சுவை, திடம். என்று எதுவுமே இருக்காது. என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவும் செய்வாள்.  " அப்புறம் ஏம்மா இவர்ட்ட அந்த தண்ணி பாலையே வாங்குற..." என்று கேட்டால், "வாடிக்கைய வுட்ர கூடாதுடா.... " என்று சொல்வாள். அம்மா அப்படி சொன்னதின் பின்னால் ஒரு மரத்திலிருந்த பூ, பூக்கும் முன்னே உதிர்ந்த செய்தியையும், சாய்ந்த மரத்தையும், அதன் கிளைகளின் சோகங்களையும் மறைத்து வைத்திருந்தாள் என்பதை பின்னாளில் அப்பாவின் மூலமாக தெரிந்து கொண்டோம்.

அம்மா, அப்பாவை கைப்பிடுத்து வந்த நாளிலிருந்தே பாலகிட்டு தான் எங்களது வாடிக்கை பால் காரர்.  என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறோம். அவருக்கான அடையாளம் ஒவ்வொரு தீபாவளிக்கான பிறகும் உடுத்தி வரும் ஏதோ ஒரு கலரிலான சட்டையும் கைலியும் தான். இந்த உடை மறுவருட தீபாவளிக்குத்தான் நிறம் மாறியிருக்கும். மூன்று பெண் குழந்தைகளுக்கு தகப்பன் என்பதால்  தன்னை மட்டும் வறுமைக் கோட்டுக்குள்ளேயே வரைந்து கொண்ட ஒரு பிம்பமாக படிந்திருந்தார் எல்லோரின் கண்களிலும்.

வீட்டின் வெளியிலிருந்தே பால் அளந்து கொடுத்துவிட்டு போகும் அவர், மாதா மாதம் 1 - 5 தேதிகளுக்குள் ஏதேனும் ஒரு நாள் மட்டும் வீட்டின் காலிங் பெல் அடித்து உள்ளே வருவார். கையில் ஒரு துண்டு பேப்பர் வைத்துகொண்டு அதை அம்மாவிடமோ, அப்பாவிடமோ நீட்டுவார். அந்த சீட்டில் C.R.C . என்று தலைப்பிட்டு அவரது புரியாத கையெழுத்தில் ஏதோ கணக்குகளை எழுதியிருப்பார்.  C.R.C. என்பது என் அப்பா வேலை பார்த்த போக்குவரத்துக் கழகம் என்பதை அவரின் அடையாளத்திற்காக போட்டிருப்பார். அந்த கணக்குகள் கடந்த மாத பால் பண கணக்காக இருக்கும்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் சூரிய சுழற்சியில் ஆவியாகிக் கொண்டிருந்த மார்கழி மாத காலையில் வழக்கமாக அவர் வரும் 5 தேதி களுக்குள் இல்லாத நாளொன்றில் காலிங் பெல் அடித்து உள்ளே வந்ததும்.  தன்னிடமுள்ள இரண்டு மாடுகள் சினையாக இருப்பதால் மாத வருமானம் சற்றே குறைவாக இருக்கிறது என்று முன்பணம் கேட்டதை அம்மா கொடுத்திருக்கிறாள்.

கூடவே, அவரது கடைக்குட்டி மகளையும் அழைத்து வந்திருந்ததையும், அவளுக்கு மார்கழி மாத கோலம் போடுவது மிகவும் பிடித்த ஒன்று என்றும். அவள் கலர் கோலப்பொடி கேட்டு அழுகிறாள் என்றும் அதை வாங்கிக்கொடுப்பதற்காக அழைத்து வந்ததாகவும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்.

அம்மா அவளிடம் "கலர் கோலம் போடணுமா உனக்கு..." என்று செல்லமாக அவளை கொஞ்சிய படி உள்ளே சென்று தான் வாங்கி வைத்திருந்த கலர் கோலமாவு பாக்கெட்டுகள் சிலவற்றை கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள்.

அது போதாதென தன் அப்பாவிடம் அடம்பிடித்து அவரது சைக்கிளின் கேரியரிலிருந்து இறங்க மறுத்து அடம் பிடித்தவளுக்கு பின்னால் நடக்கப்போகும் சம்பவம் எப்படி தெரியும்.?

இப்போது அழைத்துப் போகவில்லை என்றால் அதிகாலையில் எப்படியும் அழுது அடம் பிடிப்பாள் என்று தன் சைக்கிள் கேரியரில் அமரவைத்து கடைக்கு அழைத்து சென்றிருக்கிறார் பாலகிட்டு.

சாலையில் சந்தித்த மணல் லாரியிடம் தன் மகளினை பலிகொடுத்து வீடு திரும்பிய அவரிடம், அவரது மனைவி  எந்த வார்த்தயுமோ, சிறு கண்நீருமோ  சிந்தவில்லை. அமைதியாய் இருந்தாள். அவளது அந்த அகால அமைதியை பார்த்துப் பார்த்தே மற்ற இரண்டு மகள்களும் பேரமைதி ஆகிவிட்டனர்.

துன்பம் வரும்போது உடைந்தழாத எல்லா மனமும் பேரமைதிக்குள் ஆழ்ந்து போய்விடும் என்பதன் சான்றாக இருக்கிறது இந்த குடும்பம்.

பாலகிட்டு தனக்குள்ள இரண்டு மாடுகளையும் சேரத்து இரண்டு மகள், மனைவியென எல்லோரையும் கவனித்துக்கொள்ளும் உயிருள்ள சவமாக வாழ்ந்து வருகிறார்.

அடப்போடி....
நீ என் காதலி என்பதை இந்த இயற்கையே நிழற்படம் பிடித்து
காட்டியிருக்கிறது இந்த உலகிற்கு.

நம் காதலை யாராலும் பிரிக்கமுடியாது என்பதை
பின்னால் விளம்பரம் வரைந்து சென்ற
எவனுக்கோ தெரிந்திருக்கிறது .

இன்னும் எவ்வளவு நாள் தான்
அந்த நன்றியுள்ள ஜீவன் போல்
எனை அலையை விடப்போகிறாய் ?

அப்படியே திரும்பி நடந்துவிடு என்னுடன் அருகில்
நிழலின் நெருக்கத்தை நிஜமாக்குவோம்.

ஸ்டடி.... க்ளிக்.வறுமை தோய்ந்த இவனது அழுக்கையும்
ஒப்பனையில்லா உடல் மொழியையும்
என்னால் ரசிக்க முடிகிறது
நான் ஒரு தன்னலம் சார்ந்தவனாயின் அவரவர்கள் விதி
என்று அவனை கடந்துவிடுகிறேன். 
நான் ஒரு மனிதநேயம் உள்ளவனாயின்
அதிகபட்ச இரக்கத்தை மட்டுமே அவன் மீது செலுத்த முடிகிறது.
நான் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞனாயின்
எனது தொழிலுக்கு யாரோ கொடுத்த முதலீடாகிறான்.

Monday, October 28, 2013

முனியம்மாவுக்குநீ விதைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்

எனக்குள் கருவாகிப்போகிறது .

புதிது புதிதாய் பலப்பல சொற்க் குழந்தைகளை

மூளைப் பைக்குள் சுமக்கச்செய்து விடுகிறாய்.

எனக்குள் நீ பாய்த்துவிட்ட வார்த்தை விந்துக்களுக்கு

நிரந்தர பேறுகாலமென்று ஏதுமில்லை.

நீ விதைக்க விதைக்க நான் பிரசவிக்கிறேன்

விதைப்பதை நிறுத்திவிடாதே...

பெ(உன்னால்)ண்ணால் பிரசவிக்கும்

ஆண் நான்.

என் facebook பக்கம் போனால்...

> மியாவ்..... என்று அடிக்கடி (கத்துவேன்) எழுதுவேன்..

> ஏதாவது ஒரு விடியலில்
மேற்கில் கண்டுவிட மாட்டோமா
செங்கதிர்க் கரங்களை நீட்டி
ஆரத்தழுவிக்கொள்ளும்
அந்த சூரியனை
இப்படித்தான் ஒரு சில எதிர்பார்ப்புகளும்...

> வாசிப்பின் கோரப்பிடிக்கு இரையாகப் போகிறது எனக்கான மணித்துளிகள் .

> எனக்காக நான் வாழப்போகும் அந்த ஒரு நொடிக்காக காத்திருக்கிறேன் பலவருடங்களாக...
கிடைத்துவிடவே போகாத அந்த ஒரு நொடிக்கான காத்திருப்புதான் வாழ்க்கையாகிறது .

> தந்தையிடம் இருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகம் ஆடிய மாணவன் அவனது கூட்டாளிகளுடன் கைது # சின்னவயசுல எனக்கெல்லாம் இப்புடி ஒரு யோசனை வராம போய்டுச்சே ...

> என் அறையின் விட்டத்தில்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது
ஒரு கருவண்டு .
அது அடித்துக்கொண்டிருக்கும்
வட்டத்தை எண்ணமுடியாமல்
எண்ணிக்கொண்டிருக்கிறேன் .

> உழைப்பையும், முயற்ச்சியையும் சிந்தி நான் நிர்ணயித்திருக்கும் இலக்கிற்கான பாதைகளில் கிடந்த முட்களை களைந்தும் , மேடுகளை சரிசெய்தும் வைத்திருக்கிறேன் .
சிரமமற்று நடக்கவிருக்கும் அந்த பாதைகளில் அடுத்த அடி எடுத்துவைப்பதற்கு அனுபவமற்று தள்ளாடிக்கொண்டிருக்கிறேன் .

> நீங்கள் உணவுத்திருவிழா நடத்தப்படும் இடம் பசித்தவர்கள் இருக்கும் இடமாக இருக்கட்டும் .
புசித்தவர்களும், செரிமானக் கோளாறினால் அவதிப்படுபவர்களும் இருக்கும் இடமாக இருக்க வேண்டாம் மக்குகளே .

> பக்கத்து வீட்டுக்காரனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு
ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டிருப்பதில் மௌனமாய் மனிதத்தை கொன்று கொண்டிருக்கிறேன் .

> இந்த உலகத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசு வாங்க தகுதியான ஒரே ஆள் நம்ம பிரதமர் மன்மோகன்சிங் ஒருவரே .

> பெட்ரூம விட Hair cutting கடையில் தான் நல்லா தூக்கம் வருது ...

> இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஆன்லைன் "டீ" கடை ஃபேஸ்புக்குதான்யா . இன்னும் கொலைக்களமா மாரல ...

> கொட்டும் மழையில் மொட்டை மாடியில்
மழையின் துளிகள் சண்டையிட்டு வருவதை
கண்டு ரசிக்க ஆசை தான் .

> காலைல 3 இட்லி தான் சாப்டுவேன்னு கண்டிப்போட சொன்ன என்னோட தட்டில் 4 இட்லிக்கான சட்னிய வச்சி தாய்மையை நிரூபிக்கிறாள் .

> 3-வது படிக்கிற என்னோட அக்கா பையன் பள்ளிக்கூடம் போயிட்டு வந்து பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு பேப்பரை எடுத்து அவங்க அப்பாகிட்ட என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தான் . என்னடா சொல்லிட்டு இருக்க? கையில் என்ன பேப்பர் ? அப்டின்னு கேட்டேன் ஃபோன் நம்பர் அப்டின்னான் யாரோட நம்பர்டான்னு கேட்டேன் . கௌசிகா நம்பராம் . எதுக்குடான்னா ... டவுட் கிவுட் இருந்தா கேட்டுக்குவானாம் . எக்ஸாம் எப்டி எழுதினேன்னு கேட்பானாம் . # ங்கொய்யால நம்மள எல்லாம் பொம்பள புள்ளைங்க கூட பேசவே விடாம தனித்தனியா அடைச்சி வச்சிருந்தாங்க . என்னமோ போ .

> கொலை , கொள்ளை, ஊழல் , லஞ்சம் , கருப்புப்பணம் ........... இப்புடியே போயிட்டு இருந்தா நாட்ல புரட்சிதான் வெடிக்க போகுதுன்னு சொல்லிட்டு இருந்தான் நண்பன் .....அவன் சொல்லிக்கொண்டிருந்தது ஒரு மாலைப்பொழுதில் . இடைமறித்த நான் , காலைல என்னடா டிபன் சாப்டன்னு கேட்டேன் .ஆஹா ..." மறந்துடுச்சே" ..... அப்டிங்கறான்.

> பாரதி என்ற பெயருக்கும் பின்னால் தன் இனத்தைக்குறிக்கும் பட்டத்தையும் பின்னால் சேர்த்திருக்கும் ஒரு நபரை இன்று சந்திக்க நேர்ந்தது. # சாதிகள் இல்லையடி பாப்பா...... நெஞ்சு பொறுக்குதில்லையே ................கிங்கிலி மிங்கிலி கொடுமைடா.

> அவசரமாக O+ ரெத்தம் உனக்கு வேண்டுமானால் என் வீட்டு கொசுக்களை உங்களிடத்தில் அனுப்பித்தருகிறேன் .# எவ்ளோ குடிக்கிது....

> அன்பை விதைப்பது பலம்.
அதை விதைக்காமல் இருப்பது பெரும் பலம்.

> நண்பர்களில் இரண்டு வகை உண்டு...
ஒன்னு கீழ விழாம கைதூக்கி விடறவன்.
 இன்னொன்னு தனக்கும் மேல போயிடாம பாத்துக்கிரவன்.

> புறக்கணிப்புகளும் வெற்றிக்கான பாதையை மலர்த்தூவி அலங்கரிக்கின்றன.

> மதிப்பெண்களை பிரதானப்படுத்தும் இன்றைய கல்வி முறையில் உடன்படாமல் விமர்சனம் செய்துவிட்டு, நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாழ்த்து சொல்லும் வினோதமான சமூக கட்டமைப்புக்குள் வாழ்கிறோம் .

>பசியுடன் வந்தவனுக்கு பையிலிருந்த பத்து ரூபாயை கொடுத்து ஏதாவது வாங்கி சாப்பிட்டுகோ என்றேன்....மகிழ்ச்சியுடன் சென்றான்.

நானும் மகிழ்ச்சியுடன் வந்தேன் என் கவிதைக்கான இரண்டு வரியை கொடுத்தானென்று.

> துளை விழுந்த படகின் ஓட்டி நான்...
என்னுடன் இருப்பது ஒரு துடுப்பும்,சிலபயணிகளும்.
என் தூரம் பற்றி எனக்கு கவலையில்லை.

> அவசியமற்றவனின் குரலுக்கு எந்த ராகமும் ஸ்ருதி சேருவதில்லை.

> திரைக்கதை எழுத கற்றுக்கொள்ள சிறந்த ஆசான்.
"பேசும்படம்"

> அடர்த்தியான மன இறுக்கத்தை கலையச்செய்யும் சிகிச்சையை யாரிடமிருந்து கற்றுவந்தாய் குழந்தாய் நீ....
நீ என் உறவெனும் போது சற்றே கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.
நிலா...நீ... மாமனைப் பார்க்க எப்போது வருவாய்...
ஏதாவது ஒரு பௌர்ணமி கழித்து வருவாய்...
காத்திருப்பேன்.

> ஒரு குறும்படம் எடுக்கப்போறேன்னு சொன்ன உடனே என்ன கான்சப்ட் ன்னு கேட்க்காம
யாரு ஹீரோவா நடிக்கிறான்னு கேட்பவனே தமிழின் மிகச்சிறந்த ரசிகன்.

> பிள்ளையாருக்கு தொந்தியும் தும்பிக்கையும் வைத்து இன்றைய தினம் வயிற்றைக் கழுவிய அந்த மண் சிற்ப்பியின் இன்றைய கனவு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்...

> மூன்று வருடங்களுக்குப் பிறகு எனது twitter கணக்கை login செய்தேன் என்பதை facebook - ல் பதிவிடும் எனது மனநிலையை என்னவென்று சொல்வேன்.

> ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் கொலை கூட செய்வேன்.
கொடுக்காவிட்டாலும் அப்படித்தான்.

> profile-ல் ஒரு முகம்...
status-ல் ஒரு முகம்...
inbox-ல் வேறு ஒரு முகம்...

> முறிஞ்சி விழ முறிஞ்சி விழ ஏதாவது ஒரு கிளைய பிடிச்சு தொங்கவேண்டிய கட்டாயம் இருந்துட்டே இருக்கு.

> உன்னுடைய பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் வருத்தப்பட்டு ஆறுதல் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை...
அது உன்னை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிவிடலாம்.
ஆகவே அதற்க்கான தீர்வை தேடிச்சொல்வது மட்டுமே என் நிலைப்பாடாக இருக்கும்.

> நேத்து ஒரு சினிமா director கிட்ட phone ல பேசற வாய்ப்பு கிடைச்சது.... சுமார் ஒரு 27 நிமிஷம் தான் இந்த வாய்ப்பு...
அவர் எனக்கு குடுத்த dialogue என்ன தெரியுமா....?
"ம்ம் ம்ம்ம் ம்ம்ம்" இவ்ளோ தான்...
நீங்க எந்தெந்த படம் சார் direct பன்னிருக்கிங்கன்னு கேட்டேன்...
ஏதோ கேள்விபடாத பேரா 2 -3 சொன்னார்...

> "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" பார்த்துவிட்டு மீண்டு வரமுடியா மண்புழுவென நெழிகிறது மனம். கடந்த பல வருடங்களில் தமிழில் ஒரு அற்புதமான சினிமா. மிஷ்கின் தன்னுடைய career ல் இனி இப்படி ஒரு படம் எடுப்பாரா என்பது சந்தேகமே. அவரின் ஆகச்சிறந்த படைப்பு. இதுவாத்தான் இருக்கும்.

Sunday, October 27, 2013

தத்துவங்கள் பல

 • எனக்கு வேர்கள் கிடையாது. கால்கள்தான் உண்டு .
                                                                     -சே குவேரா
 • அரசாளும் மன்னன் அரசனாக மட்டும் நடந்து கொள்ளவேண்டும். கணவனாகவோ , தகப்பனாகவோ , நண்பனாகவோ நடந்துகொள்ளக் கூடாது. அப்படி நடந்துகொள்ளும் மன்னன் தன்னையும், தன் நிர்வாகத்தையும் தானே சீரழித்துக் கொள்வான்.                                                                                      - சீனத் தத்துவஞான கன்ஃ பூஷியஸ்.
 • மைனராக இருந்த மானுடம் மேஜரானது புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தான் . - வலம்புரி ஜான்.
 • துயரங்களின் நகைச்சுவையே மனித வாழ்க்கை. - சார்லி சாப்ளின் 
 • மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை.- மாசேதுங்.
 • தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானதைப் போல் காட்டிக்கொள். வெற்றி வந்தால் அது உனக்கு பழக்க மானதைப்போல் காட்டிக்கொள்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
 • மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல. பலரின் மௌனம்.- மார்டின் லூதர் கிங்.
 • ஒரு துளி செயல் 20 ஆயிரம் வெற்றுப் பேச்சுக்களை விட சிறந்தது. - விவேகானந்தர்.
 •  சமரசம் ஒரு தேவையான ஆயுதம். நம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டு வலுப்படுத்திக்கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க சமரசம் தேவைப்படுகிறது. - பகத்சிங்.
 • எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச்சொல்லி ஆள்வது கடினம். அதனால் பெரிய பொய்களை சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். - கோயபல்ஸ்.

Saturday, October 26, 2013

செய்திகள் பல உங்களுக்காக.

 • மாற்றுத் திறனாளிகளுக்கு மெடிக்கல் சீட் எளிதில் வாங்க, அவர்களுக்கு 40 %முதல்  70 % வரை அவரது ஊனம் குறித்த சான்று தேவை.

 • 63 நாயன்மார்களில் நந்தன் என்பவர் மட்டுமே தலித் நாயன்மார். சிதம்பரம் கோவிலில் இவர் நுழைந்தார் என்பதற்காகவே அவ்வழி இன்னும் அடைக்கபட்டிருக்கிறது.

 • " வெர்னர் வார்ன் பிரவுன் " இவர்  ஜெர்மனியின் ஹிட்லர் படையில் இருந்தவர். ஏவுகணையை வடிவமைத்தவரும் இவரே.

 • காஷ்மீர், ஆந்திரா நீங்கலாக மற்ற மாநிலங்களின் M.B.B.S, மற்றும்  B.D.S.படிப்புகளுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடாக 15 % உள்ளது.  (பொது நுழைவுத் தேர்வின் முறையில் )

 • மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்கு "ஆண்ட்ரோ ஃபோபியா " என்று பெயர்.

 • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக்கில் பங்குபெறும் நாடுகளின் வீரர்களுக்கு நிதி அளிக்கும்.

 • பார்ப்பவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் வகையில் ஒரு பகுதியில் அதிக வண்ணத்தை பூசும் உத்தியை "இம்பாஸ்டோ" என்கிறது இத்தாலிய மொழி.

 • ஆங்கில எழுத்தாளர்  "சார்லஸ் டிக்கன்ஸ் " இவர் எழுதிய நாவல்கள் கப்பல் மூலமாக நியூயார்க் அடையும் போது, கூட்டமாக நிற்பார்களாம் அதை வாங்குவதற்கு.

 • அமெரிக்காவில் "ABBSENTEE BALLOT" எனும் முறையில் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தேர்தலில் வாக்களிக்கலாம்.

 • உத்திரப் பிரதேச மாநிலம் 403 சட்ட மன்ற தொகுதிகளைக் கொண்டது. இந்தியாவிலேயே அதிக சட்ட மன்ற தொகுதிகளைக் கொண்ட மாநிலம் இது.

 • பாசுமதி அரிசியின் காப்புரிமையை "வைரஸ் டெக்" என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

 • ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு = 17 ஏக்கர்.

 • GREECE நாட்டைச்சேர்ந்த "DEMOSTHENES"  இவர் பேசும்போது அதிகம் திக்கியதால் தன் தலையில் பாதியை மழித்துவிட்டும், வீட்டை விட்டு வெளியே வராமலும் கடைவாயில் கற்களை அடக்கி வார்த்தைகளை பேச பழகிக்கொண்டார். பின்னாளில் இவர் கிரேக்கத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

 • " SAADAT HASAN MANTO" பஞ்சாப்பை சேர்ந்த இவர் ஒரு எழுத்தாளர். "என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் இந்த சமூகத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அர்த்தம்" என்று பொட்டில் அறைந்தவர்.

 • ஈரான் நாட்டின் சட்டப்படி அங்கு அகதிகளாக செல்பவர்களுக்கு கல்வி கற்கும் அனுமதியில்லை.

 • திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது தமிழகத்தில் 18 சைவ மடங்கள். இதில் மிக மூத்த madam. மதுரை ஆதீன குருபீடம்.

 • அமெரிக்காவில் எந்தவிதமான அவசர கால நெருக்கடிக்கும் 911 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

 • அமெரிக்காவின் அரசியல் சாசனப்படி அதிபராக தேர்ந்தெடுக்கப் படுபவர் ஜனவரி 20 ம் தேதியும் ஒரு முறை பதவிஏற்கவேண்டும்.

 • 2012 DA 14 என்று பெயரிடப்பட்ட விண்கல் , ரஷ்யாவின் ஏரி ஒன்றில் விழுந்தது. இதன் அழிவு சக்தி. ஒரு அணுகுண்டுக்கு இணையானது.

 • இரண்டாம் உலகப்போர் திடீரென நின்று போனதால் ரசாயன தயாரிப்பு நிறுவனங்கள் புகுத்தியது தான் செயற்கை உரம்.   

 • "ஷாஜி" எனும் பெயர் கேரளத்தில் அனைத்து ஜாதி மதத்தினரும் வைத்துக் கொள்ளும் ஆண் பெயர்.


 

மண்ணிற்கு


 • " அரச்சலூர் செல்வம்" என்பவர் இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவிப்பவர்களில் ஒருவர்.
 • விதைகளை வெளியிலிருந்து வாங்கவேண்டாம் என்றும், தாங்களே உருவாக்கிகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
 • சாணம், நெய், தேன், வெல்லம், தயிர், பனங்கள், கோமியம், பால், இளநீர், வாழைப்பழம், இவைகளை  ஒன்றாக சேரத்து 15 நாட்கள் ஊறல் போட்டபின் கிடைப்பது தான்  " பஞ்சகவ்ய உரம்  "
 • சாணம், கோமியம், வெல்லம், இவைகளைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் "அமுதக்கரைசல்"
 • வீணாகிய பழங்களைக் கொண்டு தயாரிப்பது, " ஜீவாமிர்தம் " இவை நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படும்..
 •  இரசாயன உரம், இந்தியாவில் 12 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை தின்று 1 கிலோ விளைச்சல் தருகிறது. 
 • .
 • வீட்டுக் காய்கறி தோட்டத்து தாவரங்களில் பூச்சி வந்தால் இஞ்சி , பூண்டு இவற்றை  அரைத்துத் தெளிக்கலாம். உரமிட வேண்டுமெனில் மோரை கரைத்து தெளிக்கவும். 

நமது பாரம்பரிய நெல் ரகங்கள் சில


நமது பாரம்பரிய நெல் ரகங்கள் சில:

1 ) மாப்பிள்ளை சம்பா

2) வெண்கார்

3 ) கருப்பு கவுணி

4 ) பூங்கார்

5 ) காட்டுயானம்

6 ) பனங்காட்டு குடவலை

7 ) சம்பா மோசனம்

8 ) கருங்குருவை

9 ) குழியடிச்சான்

10) சீராகச் சம்பா

11) வாசனை சீரகச்சம்பா

12) சிவப்பு சீரகச்சம்பா

13) கார் நெல்

14 ) அறுபதாம் குருவை     

Friday, October 25, 2013

இப்பொழுதெல்லாம்...


இப்பொழுதெல்லாம்...
என் விளை நிலத்திற்கான விலையை...
நான் மதிப்பிட்டுக் கூறுவதில்லை.
என் வறுமையறிந்து
என் சுமையை சாட்டிலைட் தொலைக்காட்சிகள்
பங்கிட்டுக் கொள்கின்றன.

 
இப்பொழுதெல்லாம்...
ஆறுகளுக்குள் மணல் திண்டுகளைவிட

நீரற்ற குளங்களே அதிகமிருக்கின்றன.


மணல் மீன்களை
பிடிக்கும் வலை...

மாஃபியாக்களிடம்
மட்டுமே இருக்கிறது.


இப்பொழுதெல்லாம்...
எந்த மனமகனார் வீட்டிலும்
வரதட்சணை கேட்பதே இல்லை
பின்னால் தர்ஷினியோ, விக்னேஷோ பிறந்தால்
தனியார் பள்ளியில் L.K.G க்கு இடம் மட்டும்
வாங்கித்தரச் சொல்லிக் கேட்கிறார்கள்.


இப்பொழுதெல்லாம்...
தண்ணியும் விலை
தண்ணீரும் விலை.இப்பொழுதெல்லாம்...
ஒருவருடைய வீட்டுமனை

அவருக்கே தெரியாமல்
குறைந்தபட்சம்

மூன்று பேருக்காவது விற்கப்படுகிறது.


இப்பொழுதெல்லாம்...
கொலைக்கு புதுப்பெயர் வைத்துள்ளார்கள்

கௌரவக் கொலை என்று.


இப்பொழுதெல்லாம்...
தந்தையிடமிருந்தே பாதுகாப்புத்

தேவைப்படுகிறது. பருவம் தொட்ட மங்கைக்கு.


இப்பொழுதெல்லாம்...
தன்னை தரிசிக்கவேண்டி

கடவுளும் விளம்பரத்தூதரை
நியமித்திருக்கிறார் தொலைக்காட்சிகளில்.


இப்பொழுதெல்லாம்...
மது அடிமை மீட்புமையங்கள்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை
மிஞ்சிவிட்டிருக்கிறது.

தண்ணீர் தண்ணீர்

கண்ணான பூமகனே


கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர்

ஆறாகப் பெருகி வந்து

தொட்டில் நனைக்கும் வரை

...உன் தூக்கம் கலைக்கும் வரை

கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனேஊத்து மழை தண்ணீரே

என் உள்ளங்கை சர்க்கரையே

நீ நான் பெத்த தங்கரதம்

இடுப்பில் உள்ள நந்தவனம்

"காயப்பட்ட மாமன் இன்று

கண்ணுறக்கம் கொள்ளவில்ல

சோகப்பட்ட மக்களுக்கு

சோறு தண்ணி செல்லவில்ல

ஏகப்பட்ட மேகம் உண்டு

மழை பொழிய உள்ளமில்ல."கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனேகால் மொளைச்ச மல்லிகையே

நான் கண்டெடுத்த ரோசாவே

நீ தேன் வெச்ச அத்திப்பழம்

முத்தம் தரும் முத்துச்சரம்

"தண்ணி தந்த மேகம் இன்று

ரத்தத் துளி சிந்துதடா

காத்திருந்த பானைக்குள்ளே

கண்ணீர் துளி பொங்குதடா

வீட்டு விளக்கெரிவதற்கு

கண்ணே எண்ணை இல்லையடா."கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே.

தாத்தா சொத்து .

  

என் தந்தை வழி தாத்தா சொத்துக்களில் ஒன்று தான் அந்த மரக்கட்டில் .  நாங்கள் வசித்தது நாகரீகப்போர்வை போத்தியிருந்த நகரம் என்பதால் சிறு வயதில் அவ்வப்போது எனது தந்தையுடன் தாத்தாவின் கிராமத்திற்கு சென்றிருக்கிறேன் .

வேலையில்லாத நேரங்களில் அவர் அந்த கட்டிலில் தான் உட்கார்ந்தும் , உறங்கியும் இருப்பார்
தனியாள் மட்டும் படுத்துறங்கும் வகையிலான ஒற்றை கட்டில் அது.   தரத்திலும், விலையிலும் உயர்ந்ததான மரங்களில் செய்யப்படாத கட்டிலாயினும் மிக உறுதியாக இருக்கும் .  தனித்தனியாக பிரித்து வைத்து கொள்ளலாம், படுக்கை பலகைகள் தனி தனியாக பிரித்து எடுக்கும் வகையில் இருக்கும் .  நாளடைவில் அக்கட்டிலின் வசதி என் தாத்தாவிற்கு பிடிக்காமல் போகவே உடலை மிருதுவாக தாங்கக்கூடிய நூல் கயிறினால்  பின்னப்பட்ட மற்றொரு கட்டில் எனக்கு ஏற்ப்பாடு செய்து கொடுத்துவிட்டு இதை ஓரம் கட்டியோ , அல்லது நீயோ எடுத்து செல்  என்று  சொல்லி விட்டார் . தாத்தாவின் வீட்டில் ஓரம் கட்டிக்கடக்கப்பட்ட கட்டில் சிறிது காலம் கழித்து எங்கள் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது .

நான் , என் அக்கா , என் தங்கை மூவரும் உறங்கும் வகையில் எங்களது தந்தை ஒரு ஸ்டீல் கட்டில் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார் அதில் தான் நாங்கள் மூவரும் உறங்குவோம் இட பற்றாக்குறை ஏற்ப்பட்டால் கூட தாத்தாவின் கட்டிலை யாரும் பயன் படுத்துவதில்லை . புதிதின் மேல் ஏற்ப்பட்ட ஈர்ப்பின் காரணமாக  கூட இருக்கலாம் .


நண்பர்களுடனேயே அதிகம் விளையாண்டு செலவிடும் பருவம் என்பதால் பெரும்பாலும் தாத்தாவின் கட்டில் விளையாட்டு பொருளாகவே மாறிப்போனது ஆமாம் என் வீட்டிற்கு நிறைய நண்பர்களை அழைத்து வந்து அக்கட்டிலில் குதித்தும் , ஓடியும்  விளையாண்டிருக்கிறோம் .  பின் நண்பர்களின் ஆலோசனைப்படி கட்டிலின் துண்டு பலகைகளை வீட்டிற்கு தெரியாமல் எடுத்து சென்று கிரிக்கெட் மட்டை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டில் சிதைய எனது விளையாட்டுப்பருவமும் காரணமாக இருந்திருந்தது .

பின்னர் திருடிய பலகைகளுக்காக டின் கட்டப்பட்டும் இருந்தேன் .

பிறகு நாளடைவில் அக்கட்டில் சரியாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்தும் , சில் சில்லாக அடுப்படிக்கும், ஒரு சில சட்டங்கள் அவ்வப்போது பயன்படும் பொருளாகவும் ஓரம்கட்டப்பட்டு விட்டன .

எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் சிலவற்றில் இது போன்று அவர்களின் முன்னோர்கள் பயன்படுத்திய பண்டங்கள் சிதிலமடைந்து கிடந்திருப்பதை பார்த்தும் இருக்கிறேன் .

சிறந்த மர வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கடிகாரப்பெட்டியும் ,
தரையில் உட்கார்ந்து வைத்து எழுதும் டெஸ்க் ,
எளிதில் சாய்ந்து உட்காரும் சேர் , மற்றும் பூஜையறை சாமான்களும் இன்று எங்கள் வீட்டில் பயன் பாடில்லாமல் ஓரமாகவே கிடக்கின்றன ஆனால் அவ்வப்போது பராமரிக்கப்படுகின்றது என்பது மட்டும் ஆறுதலான செய்தி .

சமீபத்தில் என்பது வயதான எனது தாய் வழி பாட்டி  திடீரென படுத்த படுக்கையாகி விட்டார் . அச்சமயம் அவரை படுக்க வைக்க வீட்டில் இரண்டு பெஞ்ச் இருந்தாலும் அது வேறொரு மாற்று ஏற்பாட்டிற்க்காக ஓரம் கட்டியே வைக்கப்பட்டிருந்தது.  தாத்தாவின் கட்டில் அப்போது எங்களது தேவையை உணர்த்தியது .

நகரத்து நவ நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்தது என்னவோ  நமது முன்னோர்களையும் நமக்காக அவர்கள் போற்றிப்பாதுகாத்து வந்த பொருட்களையும் உதாசீனப்படுத்த தானோ என்ற கேள்வி என்னுள் எழுந்தது .


நம் தாத்தா  பாட்டிகள் நமக்காக விட்டுப்போன பெரும் சொத்து , அன்பு , பாசம் நீங்கலாக அவர்கள் பயன் படுத்திய சிறு சிறு பொருள்களே .  அது தான் அடிக்கடி அவர்களை நமக்கு நியாபகப்படுத்தி இருக்கும் .

பெரும்பாலும் கிராமங்களில் அவ்வாறு போற்றிப்பாதுகாப்பது இன்றளவிலும் நடந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்.
நகரங்களில் மிகக்குறைவு .

மனநலம் பாதித்தவர்கள் பார்வையில்

ஏதோ ஒரு.
எதார்த்த நிகழ்வு
நியாயம் கடந்து
எல்லை மீறியதால்.....
எல்லை மீறியதை
எல்லை மீறி !!
என்னுள்
உழன்று கொள்ளச் செய்ததால்
என் சுயநினைவை
இழந்து போனேன் .......


சுயநினைவை இழந்தாலும் .
சுயம் மட்டும் இழக்கவில்லை !!
சுயநினைவின்
நியாயமே இங்கு
சுயமாய் ......


நியாயம் கடந்த
எல்லை மீறல்
எதுவென்று
தெரியவில்லை !!
சுயநினைவு
இழந்ததால் ..........


உறவின் வஞ்சகமோ !!
நட்பின் வஞ்சகமோ !!


உறவின் நிரந்தர பிரிவோ !!
நட்பின் நிரந்தர பிரிவோ !!


கரம் கோர்க்க
எத்தனித்த நேரத்தில்
கை நழுவிய காதலோ !!


என்னை நானே
நம்பாமல் போனதோ !!


கருவுக்குள்
காத்தவன்
காப்பகத்திற்கு
கடத்தியதாலோ !!


கருவுக்குள்
காத்தவளை
காப்பகத்திற்கு
கடத்தியதாலோ !!


உலகறியச் செய்தவனை
உதாசீனப்படுத்தியதாலோ !!


உலகறியச் செய்தவனே
உதாசீனப்படுத்தியதாலோ !!


காமக்கூட்டம்
கருவறுத்ததாலோ !!


ஆம் இவை எல்லாம் இங்கே
எதார்த்த நிகழ்வுகள் தான் .........
இன்னும் நிறையவும் இருக்கின்றது....


நியாயம் கடந்த
எல்லை மீறலுக்கு
எல்லையுமில்லையோ !!


எல்லை மீறி
உழன்று கொண்டால்
எதுவுமேயில்லை ......

இதற்க்கு மேல்
தொடர்ந்தால்
தலைப்பாய் நானே .....................

நான் பார்த்திராத என்னவள் இப்படித்தான் இருந்தாள் !!!


அந்தி சாய்ந்த நேரத்தின்

செந்நிற வானத்தை

திருடி பூசியிருந்தால்

தன் உடலில் 


விண்மீன்கள் கூட்டத்தின்

விடுபட்ட எண்ணிக்கைகளை

பகலிலும் பார்க்க முடிந்தது

அவள் சிரிக்கையில் 


மின்னலாய் மின்னும்

அவளிரண்டு இமைகளுக்குள்ளும்..

பெளர்ணமி நிலவின் மத்தியில்

அமாவாசை இருட்டு நிலவை

ஒளித்து வைத்திருந்தால் 


அடர்ந்த மழை பெய்யும் சத்தத்தில்

கலந்திருந்தது

அவள் பேசும் மொழி 


மெல்லிய காற்று தள்ளிவிடும்

இலைச்சருகு போன்றது

அவளது நடை அவள் நீண்ட கருங்கூந்தலை

ஒப்பிட இங்கே என்னால் இயலவில்லை 

ஆம் , இப்படித்தான் இருந்தாள் .

உயர்ந்த மனிதர்கள்.

 
பெற்றார்கள் பிறந்தோம்  வளர்த்தார்கள் வளரவில்லை !!
ஏனோ தெரியவில்லை ..

பெற்றோர்கள் சிரித்து பார்த்ததே இல்லை !!
மற்றோர்கள் சிரித்துத்தான் பார்த்திருக்கிறோம்...
காரணம் குள்ளம் ..

ஏளனம் செய்வோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ....
எங்களுக்கோர் துன்பமென்றாலும் யாவரும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!
காரணம் குள்ளம் ....

வரட்டு கௌரவ குடிகாரனின் போதைக்கு
ஊறுகாய் நாங்கள் ....

குட்டிச்சுவற்றில் குந்தி கூத்தடிப்பவனுக்கு
குல்பி ஐஸ் நாங்கள் ....

உழைப்பினால் உயரும் எண்ணம் எங்களுக்கு.
உயரம் மட்டுமே முட்டுக்கட்டை எண்ணங்களுக்கு....
முட்டுக்கட்டையை முட்டியும் விட்டிருக்கிறோம் !!!இப்படி யாரும் பிறக்க வேண்டாம்
பிறந்திருக்கவே வேண்டாம்
ஐயஹோ .....வேறு யாரை நான் மணமுடிப்பேன் ?
குள்ளத்தின் உள்ளத்திற்கு குள்ளத்தின் உள்ளம் தானே பொருந்தும் இங்கே  ?

எப்பொழுது கேட்டாலும் எங்களுக்குள் பயம் தான் இப்பாடல் !!!
"எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப்போலவே இருப்பான் "

பார்த்தீர்களா இங்கேயும்  சிரிக்கத்தானே வைத்திருக்கிறோம் உங்களை.....
அழ வைக்காதீர்கள் எங்களை ........நன்றி ...........................

சொல்லமறந்த நன்றிகள்

ஏதோ ஒரு

இச்சையின்

உச்சம் உமிழ்ந்த

எச்சம் நான் !!

உமிழ்ந்த எச்சம்

உருவமாய்

உருமாறியதும் !

உச்சமடைந்தார்கள்

உச்சமடைந்தவர்கள் !!

உள்ளிருந்த நானும்

உச்சமடைந்தேன் !!

உருப்படியாய்

உலகைக்கான

உண்ணும் கொள்கையும் ! (தாய்)

உண்ணா விரதமும்

உறவினர்கள் ...

பத்து திங்கள்

பசியாறினால்

உள்ளிருந்த !

எனக்காகவும் ..

பத்தாம் திங்களில்

உணர்ந்தேன் !

படைத்தவர்களின்

பதைபதைப்பை !!

கருவெடித்தேன் !

காட்சியாய் அனைவருக்கும் !!

கை இரண்டு ..

கால் இரண்டு.

கண் இரண்டு ..

இப்படி எக்குறையும்

இல்லாமல் !!!

கண்டவர்கள் கண்களில்

ஆனந்த கண்ணீர் !!

நான் கருவாகி

உருவானதை !

உறுதிப்படுத்தி

உருப்படியாய்

உலகைக்கானவும் !!

உலவவும் விட்ட

என் இரண்டாம் (மகப்பேறு மருத்துவர் )தாயை !!

இன்றுவரை கண்டதில்லை !!!

நன்றி மட்டும் அவளுக்காய் ...................

முதிர்கன்னிகள்


எனக்கு மட்டும்
எண்ணிலடங்கா திருமணநாட்கள் 
ஆம் 
தினசரி நாள் காட்டியில் 
திருமண நாட்களை தேடியவளாய் 
தினம் தினமும் 
திங்கள் திங்களாய் 
என்வீட்டிற்கு
எவர் எவரோ அனுப்பிய
திருமண அழைப்பிதழில்
என் பெயரை ஒப்பிட்டுப்பார்த்தேன் 
எதுவும் பொருந்தவில்லை 
என் பிறந்த குறிப்பைப்போல்
பிறந்த குறிப்பின்
பிரதி எடுத்தும்
என் (பெண் ) அலங்காரம் செய்துமே 
பெற்றோரின்
பொருளாதாரத்திலும் இடி 
மணமேடை ஏறுவதற்கான
ஒத்திகை பார்த்தே 
ஓய்ந்து போனேன் 
புரியாத என்

ஆழ்மனம் தவிர 
"அனைத்தையும்"
ஒப்பிட்டுப்பார்க்கிறான் .

இக்கரைக்கு அக்கரை
பச்சையாம்
இக்கரையை அக்கரையாய்
இக்கரை காண்பதெப்போது 

இதுவும் இச்சமூகத்தின்
கறை தான் 
அக்கறையுள்ளவனால் மட்டுமே 
அகற்றப்படும் எக்கறையும்

எப்போதாவது நானும்


ஐந்து வயதுமுதல் அப்பாவின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து

பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவதானிக்கப் படுகிறார்கள்.

அந்த அரண்மனை வாயிலில் தான் அவர்கள்

எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள் .

அவர்களின் முந்தைய நாட்கள் ஏதோ ஒரு

அரண்மனையில் தான் கழிந்திருக்கும் .

அவர்களுக்கென அளவெடுக்காமல் தைக்கப்பட்ட துணியை

யாரோ கொடுத்திருக்க எப்போதும் துவைக்கப்படாமலேயே உடுத்தியிருக்கிறார்கள் .

அவ்வப்போது அவர்களது பசியை யார் யாரோ புசித்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள்

சிறிதாகவும் பெரிதாவகவும் .

ஐயோ ... பாவம் என்ற செல்லாக் காசுகளை

அவர்கள் பசிக்கான இடுபொருளாகவும் வீசுகிறார்கள்.

அப்போது எப்போதாவது அப்பாவும் …

இப்போது எப்போதாவது நானும்....

அதன் பெயர் நாய்

வெவ்வேறு இருப்புப் பாதைகளில்
கடகடத்து எதிரெதிரே குறுக்கிட்டுக்கொள்ளும் 
புகைரத பெட்டிகளைப் போல்
சதைப்பிண்டமடங்கிய மனிதப் பெட்டிகளும்
குறுக்கிட்டுக் கொண்டிருந்த அந்தியில்
புன்முறுவல் பூக்க எத்தனித்து
பரிட்சயம் அற்றிருந்ததால் தவிர்த்துப்போகும்
மனிதப் பெட்டிகளின் கருவிழிகள் நிலை கொண்டிருந்தது...
வாஞ்சையுடன் ஸ்பரிசம் கொண்டிருந்த

வீதியோர ஜீவனுடனான சிறுவனிடத்தில்

இன்னும்பல புத்தகங்கள் .....

இன்னும் பல புத்தகங்கள்.

இன்னும் பல புத்தகங்கள் வாங்கப்படவில்லை.

இன்னும் பல புத்தகங்கள் வாசிக்கப்படவில்லை.

இன்னும் பல புத்தகங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை.

இன்னும் பல புத்தகங்களில் புரிந்து கொள்ளப்படாத பக்கங்கள்
மறைத்தும் மறைந்தும் கிடக்கின்றன.

இன்னும் பல புத்தகங்களில் அறியாத வார்த்தைகளும் கருத்துக்களும்
பொசிந்து கிடக்கின்றன.

இன்னும் பல புத்தகங்கள் அழிந்து போய் விட்டது.

இன்னும் பல புத்தகங்கள் அச்சேறப் படவில்லை.

இன்னும் பல புத்தகங்கள் அவதானிக்கப்பட வில்லை.

இன்னும் பல புத்தகங்கள் சிந்திக்கப்படவே இல்லை.

இன்னும் பல புத்தகங்கள்._________________