Monday, November 7, 2016

'இப்படிக்கு...கண்ணம்மா' என்னும் காதல்கதை.



இப்படிக்கு...கண்ணம்மா என்னும் காதல்கதை.

புத்தகம் ஒன்று. அதை நாவல் என்பதா? திரைகைதை என்பதா? நோயற்றவனின் மருத்துவக் குறிப்பு என்பதா? மருத்துவ விழிப்புணர்வு என்பதா?  ஐந்து நண்பர்களின் கதை என்பதா? அல்லது அன்றாடம் நம்மைச் சுற்றி பயணிக்கிற மனிதர்களின் கதைக் கோர்வை என்பதா? என இத்தனை கேள்விகளைப் படிக்கத் துவங்கிய முதல் ஐம்பது பக்கத்திற்குக் கேட்டுக் கொள்ளச் செய்துகொண்டே இருந்தது. ஆனால், கண்ணமா என்கிற கதாபாத்திரம் உள் நுழைந்து, அவளுடனானப் பயணம் துவங்கியவுடன் அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றைப் பதிலாய் “இதுவொரு காதல்கதை” என உணர வைக்கிறது.
அப்படியென்ன காதல்கதை?
புணர்ச்சியற்றக் காதல்கதை. காமமில்லாக் காதல் நடைமுறை சாத்தியமற்றதுதான் என்றாலும், காதிலில் காமத் தியாகம் என்பதும் காதலின் உச்சநிலைதான் என்பதைப் பேசியிருகிற காதல்கதை என்றும் சொல்லலாம்.
மனித வாழ்க்கையில் இல்லாமை மற்றும் இயலாமையென்னும் வாழ்நாள் முடக்கம் எக்கணமும் யாருக்கு வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும், அவற்றைக் கடந்து வாழ்தல் என்பது அசாத்தியமானது. அந்நிலையைக் கடப்பதற்கு முதற்படியாக அமைவது உறவுகளின் அன்பும், அரவணைப்பும்தான். ஆனால், என்னத்தான் அவையிரண்டும் கிடைக்கபெறுகின்ற இயலாமையாக்கப் பட்டவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருந்துவரும். அவற்றிலிருந்து அவர்கள் வெளிவர உறுதுனையாகவும் உந்துதலாகவும் இருப்பது அவர்களது வாழ்வியலுக்கான தேடுதல்கள் மற்றும் அவர்களை அந்நிலையிலேயே ஏற்றுக் கொண்டிருக்கும் எதிர்பாலினக் காதலும்தான்.
அவ்வாறு முடங்கிவிட்ட கதையின் நாயகனான சம்பத்திற்கு அப்படிப்பட்டக் காதலாகக் கிடைப்பதுதான் கண்ணமாவின் காதல். கவிதையால் காதல் வளர்த்து, தான் முடமாவதற்கு முன்பாக சம்பத் வாழ்கிற வாழ்க்கையிலும் ஆங்காங்கே சொல்லப்பப்படுகின்ற செய்திகள் அன்றாடம் நாம் கேள்விப்படுகின்ற செய்திகள் மற்றும் பயணமாகின்ற சகமனிதர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகக் கொண்டு செல்வது, ஆசிரியரின் அறம் சார்ந்த விசையமாகத் தெரிந்தாலும் எவ்விதத்திலும் அவற்றைப் புறந்தள்ளிவிட முடியாதையாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் கோபத்திற்கான விளக்கம் தருகிற போதும், ஆணவக் கொலையால் தன் மனைவியை இழந்து நிற்கும் நண்பரது இருட்டுலக வாழ்க்கைப் பற்றிச் சொல்கிற போதும், கணத்தச் சிந்தனையுடன் நமது அன்றாட அறங்களை யோசிக்க வைக்கிறார் லட்சுமி சிவகுமார்.
மேலும் ஆங்காங்கே சொல்லிவருகின்ற ஆசைகள், கோபங்கள், சோகங்கள், ஈழப் படுகொலைகள், இரத்ததானம், முழுவுடல்தானம், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுகின்ற உறவுச்சிக்கல்கள் என அனைத்த்தையும் கருத்துகளாக எடுத்துச் செல்லாமல் தகவல்களாகச் சொல்லிச் செல்வதும் கூட இயல்பை மாற்றாமால் வாசிக்க உதவியிருக்கிறது.
அதே போல் ஒரு சாலை விபத்திற்குப் பிறகான முதலுதவிகள் பற்றியும், அவற்றில் நமக்கிருக்கும் தெளிவின்மையும், பொறுமையின்மையும் விளக்கிச் செல்லும்போதும், குழந்தைப் பேரின்மைக்கான மருத்துவம் மற்றும் உடல் முடக்கத்திற்கான மருத்துவச் சொல்லாடல்கள் எனச் சொல்லிச் செல்வதும், மருத்துவத்துறைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிற இடங்களில் கொஞ்சம் கருத்துப் பிரச்சாரம் செய்வது போல் தோன்றினாலும், இவையும் தேவைதானே என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் விடச் சமகாலத்தில் நிகந்து கொண்டிருக்கக் கூடிய ஸ்டேட்டஸ் காதல்கள், இன்பாக்ஸ் காதல்கள் மற்றும் அதன் உரையாடல்கள் அனைத்தும் அன்றாடம் நாம் கேட்டும், பார்த்தும் வருகின்ற செயல்களாகவே இருக்கிறது. உரையாடல்களில் கவிதைகளாலான கேள்வி, பதில் பரிமாற்றங்களும் படிக்கிற போது ஒருவிதக் காதல் உணர்வுகளை நம்முள்ளும் கொடுத்துச் செல்லும் அதேவேளையில் கண்ணமாவைப் போலொரு காதலியையும், அவளது காதலையும் நம்முள் இறக்கிவிட்டுதான் செல்கிறது புத்தகம்.
மொத்தத்தில் தன்னுளிருக்கும் காதல் ஏக்கங்கள், அனுபவங்கள் மற்றும் தன்  நண்பர்கள், தனது வாழ்க்கை என அனைத்தையும் கோர்வையாக்கி நான்கைந்துப் பாடல்களுடன் படமாக எடுக்கக் கூடியளவிலான திரைகதையைதான் “இப்படிக்கு கண்ணமா” என்கிற புத்தகத்தின் மூலம் கொடுத்திருகிறார் லட்சுமி சிவகுமார்.
ஆனால், ஏற்கனவே இணையக் காதல்கள், முகம் பாராக் காதல்கள் எனப் பல திரைபடங்கள் தமிழில் வந்திருகிறது என்றாலும் இப்புத்தகத்தில் வந்திருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படுமானால் நல்லதொரு மென்மையான காதல் திரைப்படமாக அமையும். அப்போதும் தமிழ் திரையுலகம் கொண்டாடக்கூடிய ஒன்றாக இருக்காது. அப்படியே கொண்டாடினாலும் நம்மக்கள் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம்தான். வேடுமானால் மலையாளக் கரையோரம் ஒதுங்க முயற்சிக்கலாம்.


#இனியன் 

07/11/2016

ஃபேஸ்புக்கில் 

நன்றி இனியன்.