Thursday, November 28, 2013

நன்றி சொல்லிப் பறந்த காகிதம்

ஏதும் எழுதப்படாமல் உபயோகமற்றிருப்பதாக
சலசலத்துக் கிடந்தது அந்தக் காகிதம்.
எதையோ எழுதவேண்டும் என்றெண்ணிய எனக்கு
அந்தக் காகிதம் கண்ணில் பட்டது.

கையிலெடுத்ததும் மொட மொடவென
சிரித்து சிலாகித்துக் கொண்டது அக்காகிதம்.

கவிதை என்றெழுதி ஒரு தலைப்பிட்டதும்
காற்றை இழுத்து தன் மேல்முனை இரண்டையும்
சட்டைக் காலரைப் போல் கம்பீரமாக தூக்கிவிட்டுக் கொண்டது.

எழுத்தாணியின் கூர்முனை தீண்டலுக்கு அது
கொஞ்சமும் அஞ்சியிருக்கவில்லை - மாறாக
தன் மேல் எழுதப்படும் வார்த்தைகள் யார்மீதும்
குத்தீட்டியாய் பாய்ந்து விடாமலிருக்க வேண்டுமென அஞ்சியது.

முதல் பக்கத்தின் முடிவில் குத்தீட்டியாய் எழுதப்பட்ட ஒரு
வார்த்தையை திருத்தும்வரை மறுபக்கம் மாற மறுத்தது அக்காகிதம்.

தமிழின் வார்த்தைகளை எழுதும் போதெல்லாம்
சிலாகித்த காகிதம்.
மாற்றுமொழி கலந்த வார்த்தைகள் எழுதிய போதெல்லாம்
எழுத்தாணியின் கூர்முனைக்கு வார்த்தைகளை அனுப்ப மறுத்தது

எழுதியதை கணினியில் தட்டச்சிட்டு
இனி இக்காகிதம் உபயோகமற்றதென வீசி எறிந்தபோது

இப் பேரண்டத்தில் பேசப்படாத மொழியில்
நன்றியைத் தன் வாலால் சொல்லிவிட்டு ஓடும் நாய் போல
பூமியில் புரண்டோடியது அக்காகிதம்.

3 comments:

  1. //கவிதை என்றெழுதி ஒரு தலைப்பிட்டதும்
    காற்றை இழுத்து தன் மேல்முனை இரண்டையும்
    சட்டைக் காலரைப் போல் கம்பீரமாக தூக்கிவிட்டுக் கொண்டது.//

    அழகு ...!

    ReplyDelete
  2. எதுவும் பறந்தும் போகும்...!

    ReplyDelete
  3. நன்றி ஜீவன் நண்பா... நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete