Friday, October 25, 2013

தாத்தா சொத்து .

  

என் தந்தை வழி தாத்தா சொத்துக்களில் ஒன்று தான் அந்த மரக்கட்டில் .  நாங்கள் வசித்தது நாகரீகப்போர்வை போத்தியிருந்த நகரம் என்பதால் சிறு வயதில் அவ்வப்போது எனது தந்தையுடன் தாத்தாவின் கிராமத்திற்கு சென்றிருக்கிறேன் .

வேலையில்லாத நேரங்களில் அவர் அந்த கட்டிலில் தான் உட்கார்ந்தும் , உறங்கியும் இருப்பார்
தனியாள் மட்டும் படுத்துறங்கும் வகையிலான ஒற்றை கட்டில் அது.   தரத்திலும், விலையிலும் உயர்ந்ததான மரங்களில் செய்யப்படாத கட்டிலாயினும் மிக உறுதியாக இருக்கும் .  தனித்தனியாக பிரித்து வைத்து கொள்ளலாம், படுக்கை பலகைகள் தனி தனியாக பிரித்து எடுக்கும் வகையில் இருக்கும் .  நாளடைவில் அக்கட்டிலின் வசதி என் தாத்தாவிற்கு பிடிக்காமல் போகவே உடலை மிருதுவாக தாங்கக்கூடிய நூல் கயிறினால்  பின்னப்பட்ட மற்றொரு கட்டில் எனக்கு ஏற்ப்பாடு செய்து கொடுத்துவிட்டு இதை ஓரம் கட்டியோ , அல்லது நீயோ எடுத்து செல்  என்று  சொல்லி விட்டார் . தாத்தாவின் வீட்டில் ஓரம் கட்டிக்கடக்கப்பட்ட கட்டில் சிறிது காலம் கழித்து எங்கள் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது .

நான் , என் அக்கா , என் தங்கை மூவரும் உறங்கும் வகையில் எங்களது தந்தை ஒரு ஸ்டீல் கட்டில் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார் அதில் தான் நாங்கள் மூவரும் உறங்குவோம் இட பற்றாக்குறை ஏற்ப்பட்டால் கூட தாத்தாவின் கட்டிலை யாரும் பயன் படுத்துவதில்லை . புதிதின் மேல் ஏற்ப்பட்ட ஈர்ப்பின் காரணமாக  கூட இருக்கலாம் .


நண்பர்களுடனேயே அதிகம் விளையாண்டு செலவிடும் பருவம் என்பதால் பெரும்பாலும் தாத்தாவின் கட்டில் விளையாட்டு பொருளாகவே மாறிப்போனது ஆமாம் என் வீட்டிற்கு நிறைய நண்பர்களை அழைத்து வந்து அக்கட்டிலில் குதித்தும் , ஓடியும்  விளையாண்டிருக்கிறோம் .  பின் நண்பர்களின் ஆலோசனைப்படி கட்டிலின் துண்டு பலகைகளை வீட்டிற்கு தெரியாமல் எடுத்து சென்று கிரிக்கெட் மட்டை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டில் சிதைய எனது விளையாட்டுப்பருவமும் காரணமாக இருந்திருந்தது .

பின்னர் திருடிய பலகைகளுக்காக டின் கட்டப்பட்டும் இருந்தேன் .

பிறகு நாளடைவில் அக்கட்டில் சரியாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்தும் , சில் சில்லாக அடுப்படிக்கும், ஒரு சில சட்டங்கள் அவ்வப்போது பயன்படும் பொருளாகவும் ஓரம்கட்டப்பட்டு விட்டன .

எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் சிலவற்றில் இது போன்று அவர்களின் முன்னோர்கள் பயன்படுத்திய பண்டங்கள் சிதிலமடைந்து கிடந்திருப்பதை பார்த்தும் இருக்கிறேன் .

சிறந்த மர வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கடிகாரப்பெட்டியும் ,
தரையில் உட்கார்ந்து வைத்து எழுதும் டெஸ்க் ,
எளிதில் சாய்ந்து உட்காரும் சேர் , மற்றும் பூஜையறை சாமான்களும் இன்று எங்கள் வீட்டில் பயன் பாடில்லாமல் ஓரமாகவே கிடக்கின்றன ஆனால் அவ்வப்போது பராமரிக்கப்படுகின்றது என்பது மட்டும் ஆறுதலான செய்தி .

சமீபத்தில் என்பது வயதான எனது தாய் வழி பாட்டி  திடீரென படுத்த படுக்கையாகி விட்டார் . அச்சமயம் அவரை படுக்க வைக்க வீட்டில் இரண்டு பெஞ்ச் இருந்தாலும் அது வேறொரு மாற்று ஏற்பாட்டிற்க்காக ஓரம் கட்டியே வைக்கப்பட்டிருந்தது.  தாத்தாவின் கட்டில் அப்போது எங்களது தேவையை உணர்த்தியது .

நகரத்து நவ நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்தது என்னவோ  நமது முன்னோர்களையும் நமக்காக அவர்கள் போற்றிப்பாதுகாத்து வந்த பொருட்களையும் உதாசீனப்படுத்த தானோ என்ற கேள்வி என்னுள் எழுந்தது .


நம் தாத்தா  பாட்டிகள் நமக்காக விட்டுப்போன பெரும் சொத்து , அன்பு , பாசம் நீங்கலாக அவர்கள் பயன் படுத்திய சிறு சிறு பொருள்களே .  அது தான் அடிக்கடி அவர்களை நமக்கு நியாபகப்படுத்தி இருக்கும் .

பெரும்பாலும் கிராமங்களில் அவ்வாறு போற்றிப்பாதுகாப்பது இன்றளவிலும் நடந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்.
நகரங்களில் மிகக்குறைவு .

No comments:

Post a Comment