Friday, October 25, 2013

இப்பொழுதெல்லாம்...


இப்பொழுதெல்லாம்...
என் விளை நிலத்திற்கான விலையை...
நான் மதிப்பிட்டுக் கூறுவதில்லை.
என் வறுமையறிந்து
என் சுமையை சாட்டிலைட் தொலைக்காட்சிகள்
பங்கிட்டுக் கொள்கின்றன.

 
இப்பொழுதெல்லாம்...
ஆறுகளுக்குள் மணல் திண்டுகளைவிட

நீரற்ற குளங்களே அதிகமிருக்கின்றன.


மணல் மீன்களை
பிடிக்கும் வலை...

மாஃபியாக்களிடம்
மட்டுமே இருக்கிறது.


இப்பொழுதெல்லாம்...
எந்த மனமகனார் வீட்டிலும்
வரதட்சணை கேட்பதே இல்லை
பின்னால் தர்ஷினியோ, விக்னேஷோ பிறந்தால்
தனியார் பள்ளியில் L.K.G க்கு இடம் மட்டும்
வாங்கித்தரச் சொல்லிக் கேட்கிறார்கள்.


இப்பொழுதெல்லாம்...
தண்ணியும் விலை
தண்ணீரும் விலை.



இப்பொழுதெல்லாம்...
ஒருவருடைய வீட்டுமனை

அவருக்கே தெரியாமல்
குறைந்தபட்சம்

மூன்று பேருக்காவது விற்கப்படுகிறது.


இப்பொழுதெல்லாம்...
கொலைக்கு புதுப்பெயர் வைத்துள்ளார்கள்

கௌரவக் கொலை என்று.


இப்பொழுதெல்லாம்...
தந்தையிடமிருந்தே பாதுகாப்புத்

தேவைப்படுகிறது. பருவம் தொட்ட மங்கைக்கு.


இப்பொழுதெல்லாம்...
தன்னை தரிசிக்கவேண்டி

கடவுளும் விளம்பரத்தூதரை
நியமித்திருக்கிறார் தொலைக்காட்சிகளில்.


இப்பொழுதெல்லாம்...
மது அடிமை மீட்புமையங்கள்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை
மிஞ்சிவிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment