Monday, December 2, 2013

தண்டனையா ? தடுக்கப்பட வேண்டுமா...

நூற்று இருபது கோடி மக்கள் எண்ணிக்கையை நெருங்கிவிட்ட நமது தேசத்தில், வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, சுகாதாரக் குறைபாடு, லஞ்சம், ஊழல், திருட்டு, கொலை, கொள்ளை... இவைகள் எல்லாம் அன்றாடம்.

எல்லாமும் தவிர, மெல்ல வளர்ந்துவரும் ஒரு விஷச்செடியை போல வளர்ந்து எங்கும் கிளைபரப்பி இருக்கிறது மற்றுமொரு அவலம். பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை....

பெண்கள், குழந்தைகள், வயோதிக பெண்கள், ஆண் சிறுவர்கள், என யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த வன்முறை.

எப்போதும் செய்திகளாகவே கடந்து போய்க் கொண்டிருந்த நமக்கு, அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நிகழ்ந்து, நம்மையும் நிலைகுலையச் செய்து விடுகிறது.

1992 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த் துறையினரால் 18 பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள். நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.

2012 டிசம்பர் 16 ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா, ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு (Gang rape) கம்பியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது தலைநகரையே ஒரு உலுக்கு உலுக்கியது. அரசியல் காரணங்களுக்காக அது ஒரு தேசிய பிரச்சனையாகவே கையிலெடுத்துக் கொண்டது அரசு. நமக்கும் அப்போதுதான் குடல் நடுங்கும் பயம் தோன்ற ஆரம்பித்தது. அரசு செலவில் சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் 13 நாட்கள் கழித்து நிர்பயா இறந்ததும் பல அவசர சட்டங்கள் நிறைவேற்றச் சொல்லி மக்கள் கொந்தளித்தனர்.

அந்தச் சுவடு கலையும் முன்னரே, 2013 ஆகஸ்ட் 22 ம் தேதி மற்றொரு இந்திய பெரு நகரமான மும்பையில் புகைப்பட பத்திரிகை நிரூபரை (photo journalist) ஐந்து பேர் கொண்ட கும்பல் கற்பழித்து (Gang rape) தாக்கியது. (Gang rape) எனும் இந்த வார்த்தையே அருவருக்கத் தக்கதாக இருக்கிறது.

இப்படி ஊடகங்கள் பெரிது படுத்திக் காட்டிய சம்பவங்கள் மிகமிகக் குறைவே.
இது போன்று நகரங்களிலும், பெரு நகரங்களிலும் நிகழும் சம்பவங்கள் மட்டுமே வெளியில் தெரிந்து

பெரிது படுத்தப்படுகிறது. இந்திய கிராமங்களில் நிகழும் சாதிய ரீதியிலான பாலியல் வன்முறைகள் வெளியில் தெரியாமலே மறைக்கப் பட்டுவிடுகிறது.

பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும் மனிதனால் வேட்டையாடப்பட்டு அந்த இனமே அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே இவைகளை கடவுளின் அவதாரமாக சித்தரித்து கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் கடவுளாக கொண்டாடப் படவேண்டிய பெண்களை, அதே மனித மிருகங்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வேட்டையாடி அழிக்கிறது. இதை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக மட்டும் பார்க்ககூடாது. கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது, இன்று நேற்று நடப்பதல்ல.. காலம் காலமாக நடப்பது தான். வெளியே தெரியாமல் இருந்தது அவ்வளது தான். காட்சி ஊடகங்களின் அதீத வளர்ச்சி இந்தப் பிரச்சனையை பூதாகரமாக வளர்த்தெடுத்து இன்று அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்திருக்கிறது. குறிப்பாக பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும்.

2011 ம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதிலும் 24,206 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கிறது. National Crime Records Bureau. (NCRB). புகார்கள் பதியப்படாமல் இருப்பது கணக்கில் அடங்காததாக இருக்கலாம் என்கிறது.

2012 லும் சரி, 2013 லும் சரி, ஐம்பது சதவிதம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருப்பதாக State Crime Records Bureau (SCRB) தெரிவிக்கிறது. தமிழகத்தில் இந்த குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம், வெகுவாகப் பரவிவிட்ட மதுப் பழக்கம் மிக முக்கிய பங்குவகிப்பதாக தெரிவிக்கிறது.

புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களே இப்படி அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இன்னும் புகார்கள் கொடுக்கப்படாமல் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு பயந்தும், உயிர்களுக்கும், எதிர்காலங்களுக்கும் பயந்தும் இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக பயந்தும் புகார்களாக பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆசிரியர்களுக்கு கடந்த அக்டோபர் முதல் பயிற்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 17 முதல் பயிற்சி தொடங்கியிருக்கிறது. இந்த பயிற்சியை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அளித்து வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க.. கடந்த பல தினங்களுக்கு முன்னர். அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாக்லேட் வாங்கித் தருவதாக பேரன் பேத்தி வயதிலிருக்கும் குழந்தைகளை, தாத்தா...

பெற்ற பெண்ணையே போகப் பொருளாக்கிய அப்பா...

பள்ளிக் குழந்தையை கடத்திச் சென்று கற்பழித்து பின் கொன்று வீசிய கொடூரன்.

இப்படியாக வீட்டிலும் வெளியிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இதையெல்லாம் நம்ப முடியவில்லை என்று நினைத்தால் பல தொலைக்காட்சியில் இந்த சம்பவங்கள் குறித்து ஒருமணிநேர நிகழ்ச்சியே நடத்தப்பட்டு பஞ்சாயத்து செய்து
வைக்கிறார்கள். தெரியாதவர்கள் பார்க்கலாம்.

டெல்லி சம்பவத்திற்கு பின்னர் நாடெங்கிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் புரியும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர் அப்படி செய்துவிட்டால் குற்றம் குறைந்து விடுமா என்ன...? State Crime Records Bureau (SCRB) தமிழகத்தில் ஐம்பது சதவிகிதமாக அதிகரித்திருக்கும் பாலியல் குற்றத்திற்கு காரணம் மதுப்பழக்கம் என்றிருக்கிறபோது அதே சதவிகிதம் இந்தியா முழுவதிலும் இருக்கவே செய்யும். அரசே நடத்தும் மதுக்கடைகளை மூடினால் ஐம்பது சதவிகித குற்றம் குறையுமல்லவா... ஏனைய மாநிலங்களிலும் இதே கோரிக்கையை பெண்களும், பெண்கள் அமைப்புகளும் முன்னெடுக்கலாம் அல்லவா...  மதுவை எதிர்த்து பெண்கள் போராடுவது மிக மிகக் குறைவே.

நம் தேசத்தில் ஒவ்வொரு 20 முதல் 22 நிமிடத்திற்குள் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்கிறது NCRB.

இதனால் உலகெங்கிலும் இருந்து இந்தியா நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் குறைந்துள்ளது. நாட்டுக்கு கிடைக்கவேண்டிய அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயை விட்டுத் தள்ளுங்கள்.

நமது தேசம் பெண்கள்வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தொலை நோக்குடன் சிந்திக்கவேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் தூக்கு தண்டனை கொடுத்தோ, ஆண்மை நீக்கம் செய்தோ இந்த குற்றங்களை குறைக்க முடியாது. தண்டனை கொடுக்கப் பட்டவன் குறிப்பிட்ட தவறை செய்ய மாட்டான் அவ்வளவு தானே...?

பெண்கள் கிளர்ச்சியை தூண்டும் வகையிலான ஆடைகளை அணிந்து வெளியில் வருவதினால் எளிதில் ஆண்கள் தவறு செய்ய தூண்டப் படுகிறார்கள் என்ற இந்த கருத்தில் நான் உடன் படவில்லை என்றாலும். பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். அடுத்தவர்களின் ஆடை விசயத்தில் நாம் தலையிடுவது அனாவசியமான ஒன்று தான் என்றாலும். ஒரு குற்றம் நடந்துவிடுவதற்கு நாமும் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் நமக்கு எந்த பங்கும் இருக்ககூடாது என்ற வகையில் பெண்களும் ஒரு சில விசயங்களில் உணர்ந்து செயல் படவேண்டும். பெண்கள் அமைப்புகள் பெண்களுக்கு இதை கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க நம் குழந்தைகளுக்கு நாமே நல்ல தொடுதல், (good touch,) எது (bad touch) கெட்ட தொடுதல் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சிறுவர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் இன்று இணையம் என்பது மிக எளிதில் கிடைக்கும் விசயமாக இருக்கிறது.  இணையம் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக ஒன்றி விட்டது. கையடக்க அலைபேசியின் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில தவறான விசயங்களை பார்க்க உந்தப் படுகிறார்கள். இதன் மூலம் பாலியல் உணர்ச்சிக்கு எளிதில் தூண்டப்படுகிறார்கள். இது தொடர்ந்தால் ஆபத்து. இதை கட்டுப் படுத்துவதில் பெற்றோரின் பங்கு அதிகமிருக்கிறது. சிறுவர்களுக்கு இணையப் பயன்பாட்டை முறையாக அளவாக பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்.

மது மற்றும் போதைப் பொருட்களினால் பாலியல் குற்றம் அதிகரிக்கிறதென்றால் அதற்க்கு தடை விதிக்க வேண்டும். அதற்க்கு அடிமையானவர்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்களை அதிலிருந்து விடுபட வைக்கவேண்டும்.

இதையெல்லாம் தவிர பெண்ணை ஒரு சகமனுஷியாக பார்க்கவும். சுய கட்டுப்பாடும், தனிமனித ஒழுக்கமுமே இத்தகைய பாலியல் வன்முறைகள் நிகழாதிருக்க வழிவகை செய்யும்.

ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அவளை தொடுவதென்பது பாலியல் குற்றமாகும். அது அவனது மனைவியாகினும் கூட.

No comments:

Post a Comment