மியாவ் .... மியாவ்....
மிகச்சரியாக "நியாபகமில்லை" என்று எழுதலாமென நினைக்கையில் என்தோழி, சகோதரி "ஞாபகம்" என்பது தான் சரியானதாக இருக்கும் என்று கூறியது நியாபகம் வரவே. sorry .... sorry ..... ஞாபகம் வரவே.... ஞாபகம் என்றே எழுதுகிறேன் . இது அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட எத்தனையாவது பிழைத்திருத்தம் என்று ஞாபகம் இல்லை.
நினைவு என்று கூட எழுதிருக்கலாமே ? என்று உங்கள் மனக்குரல் கூவுவது என் செவிவழி துவாரம் துளைத்து செல்வதையும் உணரமுடிகிறது !!
சரி உள்ளே செல்வோம்...
மிகச்சரியாக ஞாபகமில்லை. காலை ஒரு 7 மணி இருக்கலாம் சோர்வும் உறக்கமும் தன்னை ஓய்வெடுத்து கொண்டிருக்கவில்லை ..
முந்தைய இரவில் , எல்லை வரையறுக்காமல் உபயோகமற்று உலவித்திரிந்த கற்பனைக்குதிரையை துரத்திச்சென்ற களைப்பினால் ஏற்பட்ட சோர்வு அது .
கீற்று வேயப்பட்ட பந்தலிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் நீர்ப்பந்தினைப்போல் ஆங்காங்கே மழைத்துளிகள் கனமாக சொட்டிக்கொண்டிருந்தது . விடிந்துவிட்டதற்கான அறிகுறிகள் ஒலிக்கத்தொடங்கின. மூன்றாவது தெருவிலுள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து “கோதையின் திருப்பாவை” என்ற கிருஷ்ண கானம் மிதமான ஒலியுடன் பாடிக்கொண்டிருந்தது. பால்காரரின் பாத்திரம் சைக்கிளில் முட்டிக்கொண்டு எழும் சத்தம் , கோலமாவு விற்று செல்பவரது கர கர குரல் சத்தம் , வீதிக்குழாயடியில் முக்கு வீட்டு சுசீலாவும் , கீற்று வீட்டு சரோஜாவும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததும் , அடிக்குடத்தில் வேகமாக நீர்விழுந்து எழும் சத்தமும் , குடம் நிறைகையில் நிறைவான சத்தமும் கேட்டு கண்கள் விழிக்க செய்திருந்தது .
சோர்வையும் ,உறக்கத்தையும் சுமந்த படியே தான் இன்றைய பொழுதின் இறுதியை கடக்கப்போகிறோம் என்று தோன்றியிருந்தது தன் பெற்றோர்களான பூர்ணசந்திரா குணாளனுடன் வசித்து வரும் மணவாளனுக்கு.
எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு காலை தேனீரின் முதல் சுவையை ரு(ர)சிக்க ஆயாசமாக நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியின் தொலை இயக்கியை எடுத்து ஏதோ ஒரு எண் கொண்ட பொத்தானை அழுத்தி தொலைக்காட்சியை இயங்கச் செய்தான் மணவாளன்.
மணவாளன் தன் அம்மா கொண்டு வந்து கொடுத்த தேநீரை ரு(ர)சித்துக்கொண்டிருக்கையில் . பிறந்து 10 நாட்களுக்குள் தான் இருக்கும் அதற்க்கு. கருப்பு நிற உடல் கொண்டதாயிருந்தது. பிரமீடு போன்றொரு செந்நிற அடையாளம் அதன் நெற்றியில். கண்களை அண்மித்த பகுதி , கழுத்து மற்றும் வாலின் நுனிப்பகுதி. இங்கு மட்டும் தான் வெண்ணிறம் ஒட்டிக்கொண்டிருந்தது . கண்டிப்பாக அது ஒரு கூட்டத்துடன் தான் பிறந்திருக்கும் .
எந்த வீட்டின் அடுப்படி பாத்திரத்தில் வைத்திருந்த பாலையும் திருடிக்குடிக்க அது இன்னமும் தைரியம் இல்லாமலும் , பயிற்ச்சி பெறாமலும் இருந்திருந்தது . மழையில் நனைந்திருந்ததால் அதன் முடிகள் திரட்டிக்கொண்டு தோலுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. தாயிடமிருந்து பிரிந்திருந்ததால் பசியின் பிணி தாக்கப்பட்ட சோமாலியக் குழந்தையின் உடல் போலவும், வறுமையில் தன்னுயிர் மாய்த்துக்கொண்ட விதர்பா விவசாயிகளின் உடல் போலவும் இருந்தது அதன் உடல்.
சிங்க வேட்டையின் போது கூட்டத்திலிருந்து சிதறிய ஒற்றை மான்குட்டி போல எப்படியோ தன் உறவுகளை தொலைத்து விட்டு மியாவ் ..... மியாவ்....... மியாவ்....... என்று விடாமல் கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்துவிட்டது .
சிறுவயதிலிருந்தே வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தது மணவாளனுக்கும் அவரது வீட்டாருக்கும். இதற்காக அவர்கள் தனியாக மெனக்கெட விரும்பவில்லை . குறிப்பாக பூனையை பெரும்பாலான வீடுகளில் அனுமதிப்பதே இல்லை . பூனை முடி வீட்டில் கொட்டக்கூடாது. அப்படி கொட்டினால் பாவம் வந்து சேரும் என்று தடுத்து விடுவார்கள் . மனித நேயம் இல்லாமல் இருந்தார்கள் என்று கூட சொல்லிக்கொள்ளலாம் .
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது சிறு வயதுகளில் நமது நண்பர்களோ, தோழிகளோ ஒரு செயல் செய்தால் நாமும் அதையே செய்ய முற்பட்டிருப்போம் . மணவாளன் தனது நண்பர்களின் வீடுகளில் , புறா, நாய் , பூனை , கோழி இவைகள் வளர்வதை அவர்களுடன் சென்று பார்த்திருக்கிறான் . அப்படி பார்த்த நாளன்று மட்டும் தானும் வளர்க்க ஆசைப்பட்டு தன் வீட்டில் வந்து இவைகளில் ஏதேனும் ஒன்று வளர்க்க அனுமதி கோருவான்.
“டேய்ய்…. இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுடா. முதல்ல நீ ஒழுங்கா படிக்கிற வழிய பாரு” என்று அவனது அப்பா, அம்மா, அக்கா இவர்களது குரல் ஒத்தகுரலாக ஒலிக்கும்.
மீறி அடம்பிடித்து கேட்பானேயானால் ஆண்டுத்தேர்வுகளில் அவன் எடுத்த மதிப்பெண்கள் அவர்களது கூடுதல் பேச்சுக்கு காரணமாய் இருந்தது . அத்துடன் அவனும் மறந்துவிடுவான் . மறுபடியும் அந்த நண்பர்களது வீட்டிற்கு சென்றால்தான் பிராணிகள் வளர்ப்பு குறித்த ஆர்வம் அவனுக்கு வந்திருந்தது. அப்படி வரும்போது மதிப்பெண் குறித்த வசைமொழிகள் முகம் காட்டும்... அப்படியே விட்டுவிடுவான் .
சரி பூனையின் பின் செல்வோம்.
எப்படியோ தன் உறவுகளை தொலைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த அந்த பூனை எங்கு செல்வதென்று தெரியாமல் மூளை முடுக்குகளில் மாறி மாறி ஒளிந்து கொண்டு கத்திக்கொண்டிருந்தது . மணவாளனின் அம்மாவும், மணவாளனும் சேர்ந்து தூக்கி வெளியில் கொண்டு விட்டு விடலாம் என்றால், இடுக்குகளில் நின்று சற்றே சீறியது பூனை . என் உறவுகளை தொலைத்து விட்டு கொலைவெறியுடன் வந்திருக்கிறேன் . வெளியே மழை. உடலிலே குளிர். குடலிலே பாலைவனம். எங்கு செல்வதென்று தெரியவில்லை... என்னை சீன்டாதே என்பது போல் இருந்தது அந்த சீற்றம். மேற்கொண்டு தன்னுடைய வீரத்தை அந்த பூனையிடம் காண்பித்து அதற்கான மகுடம் சூட்டிக்கொள்ள விரும்பாத மணவாளனிற்கு, குற்ற உணர்வுகள் கருந்தேளின் கொடுக்குகளைப் போல் கொட்டியது. அவ்வப்போது இடத்தை மாற்றிக்கொண்டும் இருந்தது அப்பூனை .
சரி விடும்மா.... கொஞ்ச நேரத்துல தானா ஓடிபோயிடும் என்றான் மணவாளன் . சிறிது நேரத்தில் ஓடியும் விட்டது. 10 நிமிட இடைவெளியில் மறுபடியும் வீட்டுக்குள் ஓடி வந்து விட்டது. இம்முறையும் விரட்டிப்பார்த்து முடியவில்லை.. ஒரு ஓரமாக இருந்த அட்டை பெட்டியில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில் உறங்கிவிட்டிருந்த பூனையை இவர்கள் இருவரும் எழுப்ப மனமில்லாமல் விட்டு விட்டனர் .
மணவாளன் தன் அம்மாவிடம், பேசாம இங்கேயே வளர்ந்துட்டு போகட்டுமேம்மா என்றான் .
அட ....நீ வேரடா... அது கண்ட எடத்திலயும் அசிங்கம் பண்ணி வைக்கும்… ஊடே நாறும். நீயா வந்து சுத்தம் பண்ணுவ ?
என்று கூறிக்கொண்டே கையில் மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுடன் வாசலில் நின்று கொண்டிருந்த காய்கறி வண்டிக்காரரிடம் பேரம் பேச சென்று விட்டாள்.
இந்த முறை காமராசின் ஆண்டுத்தேர்வுகளின் மதிப்பெண் குறித்த துருப்பு சீட்டு அவர்களிடம் இருந்திருக்கவில்லை .
பூனை உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளே மறந்து விட்டார்கள் . மணவாளனின் அலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம் மட்டும் பூனை திடுக்கிட்டு எழுந்து பக்கவாட்டுகளை நோட்டமிட்டுவிட்டு பின் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. தொடர்ச்சியான தன்னுடைய கனவை மணவாளனின் அலைபேசி அழைப்புமணி இடையறுப்பதாக ஏசிக்கொண்டது பூனை. கனவுகள் சேர்ந்து பயணித்த நீண்ட உறக்கத்தில் தன்னுடைய சோர்வினை முற்றிலுமாக முறித்துக்கொண்டிருந்தது.
அரைமணி நேர இடைவெளியில் 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ,10 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனும் தயங்கி தயங்கி மணவாளனின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அண்ணே .... அண்ணே .. என்று இரண்டு முறை அழைத்தனர். வெளியில் வந்த மணவாளன் , என்னடா என்றதும் தயக்கம் மாறாமல், அண்ணே ஒரு பூனை குட்டி இங்கே வந்துச்சான்னே என்றான் .
மறந்து போயிருந்த காமராசுக்கு திடீரென ஞாபகம் வராததால் விழிகளை மேல்நோக்கியும், உருட்டியும் விழித்துவிட்டு .
இந்தோ படுத்துருக்குடா. இந்த பூனையா பாரு ? உன்னோடதா... ? என்றான்.
இருவரில் ஒருவன் ஆமாண்ணே என்னோடது என்றான் , மற்றொருவன் ஆமாண்ணே இவனோடதுன்னே... என்றான் .
ஆமாண்ணே இதுக்கும் முன்னாடி ஒரு பூனை வளத்தேன் செத்து போச்சுன்னே…. இதும் கானாபோயிடுச்சுன்னு இருந்தே.... கிடைச்சுடுசுன்னே தேங்க்ஸ்நே . என்று பூனையை தூக்கி தன் தோளில் ஏற்றிக்கொண்டு கொஞ்சினான் .
மணவாளனின் சீண்டலுக்கு படியாமல் மீறி சீண்டிய பூனை, விக்னேஷின் கொஞ்சலுக்கு விசுவாசமாய் அவனிடம் அதுவும் கொஞ்சிக்கொண்டிருந்தது.
டேய் பேர் என்னடா என்ற மணவாளனிடம், ஸ்வீட்டிண்ணே... என்றான் விக்னேஷ்.
டேய்.... இது என்னடா நாய்க்குட்டி பேரு மாதிரி இருக்கு ? நான் கேட்டது உன்னோட பேருடா ?
விக்னேஷ் என்று இருவரும் கூறினார்கள் .
ரெண்டுபேர் பேருமா விக்னேஷ் ?
ஆமாண்ணே.....என்று கூறிக்கொண்டே பூனையிடம் கொஞ்சிக்கொண்டிருந்த விக்னேஷிடம், விளையாட்டாக சீண்டினான் மணவாளன் .
ரொம்ப தொந்தரவு பண்ணிடுச்சுடா பூனைக்குட்டி... குச்சாலே ஓங்கி ஓங்கி அடிச்சேன் தெரியுமா ? அது ஒடம்புல அடிபட்ட காயம் இருக்கா பாரு....
என்று மணவாளன் பொய் சொல்வதை தெரிந்து கொண்டு நம்பாதவனாய் சிரித்துக்கொண்டே, பாவம்னே அடிக்காதீங்கன்னே என்று விடைபெற்றார்கள் விக்னேஷ்கள்.
செல்லப்பூனை அழகு..!
ReplyDeleteபூனைகள் எப்பவும் அழகுதான்... அதனுடனான நேரங்களும் அருமைதான்
ReplyDeleteஇந்த முறை காமராசின் ஆண்டுத்தேர்வுகளின் மதிப்பெண் குறித்த துருப்பு சீட்டு அவர்களிடம் இருந்திருக்கவில்லை .
ReplyDelete///
மறந்து போயிருந்த காமராசுக்கு திடீரென ஞாபகம் வராததால் விழிகளை மேல்நோக்கியும், உருட்டியும் விழித்துவிட்டு . /// இந்த காமராசு யாரு?
சத்தியமா நான் தான் பெண்ணே...
ReplyDelete