Saturday, November 16, 2013

இணையத்தில் கிடைத்த முனியம்மா


 இணையத்தில் கிடைத்த முனியம்மா 


நகரத்தின் மையப்பகுதியென்றே கொள்ளலாம் கவியமுதன் பிறந்து , வளர்ந்தது…. அநேகமாக அவன் வாழ்வை முடிக்கும் இடம் இதுவாகத்தான் இருக்கும் . 

எதிரெதிரே வீடுகளுள்ள நீண்ட வீதியில்தான் அவனது குடியிருப்பு . 
எப்போதும் பரபரப்பை உடுத்திக்கூத்தாடும் வீதியது . 
ஏறக்குறைய ஏழு வீதிகளின் கிளைப்பாதை இந்த வீதிதான் .

திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் மூன்று வயது முதலான மெட்ரிகுலேசன் குழந்தைகள் தெரு முக்கத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் திண்ணையில் தான் வேனுக்காக காத்திருப்பார்கள் . 

வாரத்தின் ஏழு நாட்களிலும் , மூங்கிலை கூறு போட்டுச்சீவிய குச்சிகளால் பின்னப்பட்ட பெரிய கூடைகளை சைக்கிளில் பின்புறம் பெரிய கேரியரில் கட்டிக்கொண்டு பக்கத்து கிராமங்களிலிருந்து காய்கறிகளை ஆந்தை குரலில் கூவி விற்றுக்கொண்டு அங்குமிங்குமாக திரிவார்கள்.

வீதியின் மற்றொரு முனையில் கணேச நாடார் மளிகை கடை. இங்கே சகல சாமான்களும் கிடைக்கும் . எதிர்பாராத விருந்தாளிகளுக்கு உள்நாட்டு குளிர்பானம் முதல் பன்னாட்டு குளிர்பானங்கள் வரை வாங்க கூட கணேச நாடார் மளிகை கடையை கடந்து யாரும் போகமாட்டார்கள். வாடிக்கயாளரிடமிருந்து வாங்கும் காசிற்கு பொருள்களுடன் இலவசமாக சிரிப்பையும் , அன்பான வார்த்தைகளையும் சேர்த்துக்கொடுக்க இவர் ஒரு போதும் தவறவே மாட்டார். 

கவியமுதனின் தந்தை அரிமாவளவன் . இவர் ஒரு தமிழாசிரியர் . யாருடன் பேசினாலும் செம்மொழி சாரல் சிந்தாமல் வாய்மூட மாட்டார். தான் முதுகலை தமிழ் படிக்கும்போது தன்னுடன் கூடப்படித்த வாசிகபாரதியை காதல் மனம் புரிந்தவர் . தமிழ் மீதுள்ள பற்றால் கவியமுதனின் தம்பிக்கும் அமலன் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் .

அரிமாவளவன் தம்பதியர் தங்களது குழந்தைகளை தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களாக திட்டமிட்டு தமிழ் பாலூட்டி வளர்த்தார்களே தவிர... இவர்களது உத்தியோகம் சார்ந்த படிப்பு கணினி சார்ந்ததாகவே இருந்தது . இதற்கு காரணம் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் . குறுகிய காலத்தில் மிகையாக பொருள் தேடும் உத்தி. இன்றைய சூழல் அப்படி ! இவர்கள் மட்டும் இழிச்ச வாயர்களாக இருந்தால் சமூகம் மாறிவிடுமா என்ன ? தமிழ் படிப்பதை இழிச்சவாய்த்தனம் என்கிறது இன்றைய சமூகம் .

கடிவாளம் கட்டிய பந்தயக்குதிரையின் மீதமர்ந்து வேகமாய் பயணித்துக் கடத்திய வழக்கமான வாரக்கடைசி தினமன்று....

பிரபல சாஃப்ட்வேர் கம்பெனி.... அலுவலக வேலைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தான் கவியமுதன் . ஏற்கனவே சென்னை to தஞ்சவூருக்காக பதிவு செய்து வைத்திருந்த பயணச்சீட்டை தனது கருப்பு நிற money purse க்குள் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டான் .

ஒரு மாதம் கழித்து தன் குடும்பத்தாரை பார்க்கசெல்லும் ஆர்வமும் , பரபரப்பும் அவனது முகத்தில் புரையோடிக் கிடந்தது. 

எப்போதும் வாரம் ஒரு முறை செல்பவன் இடையறாத கடின வேலை காரணமாக செல்ல முடியாமல் இருந்திருந்தது .

அலுவலகம் முடிந்து தன் ரூமிற்கு சென்று அவசரம் அவசரமாக கிளம்பி பேருந்து நிலையம் வந்து தனக்காகவே நின்று கொண்டிருந்ததாக எண்ணிய பேருந்தில், தான் பதிவு செய்திருந்த சன்னலோர இருக்கையில் ஆயாசமாக அமர்ந்து கொண்டான் . நகரத்தில் மோதித்திரியும் காற்று... சன்னலோரத்தில் அமர்ந்திருந்தவனை அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருந்தது. நட்டு நாற்ப்பது நாட்களேயான நெற்பயிர், பரந்த வெளிக்காற்றை பருகிக்குடித்துக்கொண்டே ஓயாத ஒய்யார நடனம் புரிவதை போல் ஆடிக்கொண்டிருந்தது அவனது தலைமுடிகள்.

துரட்டியால் தட்டிவிட்ட தேனடையை சுற்றி பதற்றத்துடன் மொய்க்கும் தேனீக்களைப் போல விறுவிறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது நகரம். விறுவிறுப்பிலிருந்து மெல்ல வழுக்கி ஊரத்துவங்கிய பேருந்து சாலையோர காட்சிகளையெல்லாம் பின்புறமாக செறுகிக்கொண்டிருந்தது. வேகமாக புறந்தள்ளிபோய்க்கொண்டிருந்த சன்னலோர காட்சிகள் மெல்ல மெல்ல இவனை அடிமை படுத்திக்கொண்டிருந்தது .

“சார்.... உங்க டிக்கெட் குடுங்க.” என்ற நடத்துனரின் கேள்வி இவனது காதுகளுக்கு எட்டவில்லை . இவனது மூளை ஏதோ ஒரு குறுகிய குகைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. 

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்பவர்களில் யாரோ ஒருவருடைய வயதுடன் ஒத்துப்போவதுமான வயதுடனும் , தோற்றத்துடனும் இருந்த ஒருவர் இவனது பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தார் . அவரது அகத்தோற்றத்தை போலவே புறத்தோற்றமும் அழகாய் இருந்தது . “தம்பி.... என்று தோளில் தட்டி டிக்கெட் கேட்கிறார் கண்டக்டர். குடுங்க” என்றார் .

நட்டநடுநிசியில் அதிபயங்கர கனவு கண்டு விழித்தவனைப்போல் திடுக்கிட்டு பின் சுதாரித்துக்கொண்டு. பேன்ட் பாக்கெட்டிலிருந்து தனது purse சிலிருந்த reservation டிக்கெட்டை எடுத்துக்கொடுத்து மாற்று டிக்கெட் பெற்றுக்கொண்டான் .

தோள்தட்டி எழுப்பிய பக்கத்து இருக்கை காரரை பார்த்து குழந்தையாய் சிரித்து தேங்க்ஸ் சார் என்றான் .

“இருக்கட்டும் தம்பி.... நீங்க எந்த ஊர் போரேல் தம்பி” 

தஞ்சாவூர் சார் என்றான். திரும்ப இவன் அவரை பார்த்து நீங்கள் எந்த ஊர் செல்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அவராகவே சொன்னார். நான் கும்பகோணத்தில் இறங்கிடுவேன் தம்பி என்று .மறுபடியும் சிரித்துக்கொண்டான் .

நகரத்தை கடந்து மெல்ல இருளுக்குள் புதைந்துகொண்டிருந்தது பேருந்து. சன்னலோரக்காட்சிகளையெல்லாம் இருள் மூடி மறைத்துக்கொண்டன. மின்மினிப்பூச்சிகள் மின்னி ஒளிப்பதை போல் எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும் இருட்டை ஊடுருவி மின்னிக்கொண்டிருந்தது வெளிச்சம் .

அயராத பணியினால் ஏற்ப்பட்ட சோர்வும் , உறக்கமும் இவனை அடிமை படுத்த , தென்றலின் தாலாட்டில், இரவின் மடியில் இவன் சொக்கி தற்காலிகமாய் செத்துப்போயிருந்தான் . இடையில் ஒரு சில இரவு நேரக்கடைகளில் பேருந்து நின்றது கூட தெரியாமல் தற்காலிக மரணம் உறங்காமல் உயிர்ப்புடன் இருந்திருந்தது . பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் இவனை தட்டி எழுப்பி தம்பி மணி 3 .30. இன்னும் பத்து நிமிடத்தில் கும்பகோணம் பேருந்து நிலையம் சென்று விடும் பேருந்து. நான் இறங்கி விடுவேன். நீங்களும் விழிக்கொள்ளுங்கள் என்றார் . பாதி பிறையாய் கண்களை திறந்து , வாயோரம் ஒழுகிக்கொண்டிருந்த உமிழ்நீரை வெட்கப்பட்டு துடித்தவாறே சரி சார் ரொம்ப தேங்க்ஸ் என்றான் .

அடுத்த ஒரு மணிநேரத்தில் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் வீட்டு வாசலில் இறங்கிவிட்டு ஆட்டோவிற்கு பணம் கொடுத்து கொண்டு
இருக்கையில் . அவனது அம்மா ஆட்டோ சத்தம் கேட்டதும் லைட்டை போட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு கதவை திறந்து வாஞ்சையுடன் அழைத்து சென்றாள். 


மிச்சமிருந்த சோர்வையும் , உறக்கத்தையும் இருளுக்குள்ளேயே கரைத்துவிடும் பொருட்டு தனது அறைக்கு உறங்கசென்று விட்டான் . 

விடியலின் ஒலி, ஒளி அத்துனை சமிக்கைகளையும் அலட்சியப்படுத்திவிட்டு சிறு ,சிறு கனவுகளை சுமந்தபடி உறக்கத்தை நீட்டிக்கொண்டிருந்தான். அம்மாவின் அழைப்புக்குரலில் சுருண்டு , சுருட்டிக்கொண்டது உறக்கம் . டேய்... போயி குளிச்சுட்டு வாடா.... உனக்கு பிடிச்ச கறிக்குழம்பு வச்சுருக்கேன். தோசை ஊத்தி தாரேன்.

பிரஷ் பண்ணிட்டேம்மா... மொதல்ல ஒரு டீய போட்டுக்குடு. கொஞ்ச லேட்டா சாப்புர்றேன் .

அம்மா போட்டு வந்து கொடுத்த டீயை குடித்தபடியே ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாக காணப்பட்டான் .

முந்தைய இரவுப்பயணத்தின் போது தன்னுடைய பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்த வயதான தம்பதிகள் எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது இவனது செவித்துளைகளின் ஓரச்சுவருக்குள் படிந்திருந்தது .

அவர்கள் தங்களுடைய 32 வயது மகளுக்கு தொடர்ந்து திருமணம் தள்ளிபோய்க்கொண்டிருப்பதை பேசிக்கொண்டு வந்ததாக அவனுக்கு தெரிந்திருந்தது . மேலும் பரிகாரத்திற்காக வைதீஸ்வரன் கோவிலுக்கு வருபவர்களை போல் பேசிக்கொண்டிருந்தார்கள் . அவர்களது உரையாடல், அம்மிக்கல்லில் வைத்து குளவியின் ஏதோ ஒருமுனை தூக்கி லேசாக நசுக்கிய இஞ்சி விழுதை போல் நைந்து போயிருந்தது . 

டீ கப்பினை முத்தமிட்டுக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். முதிர்கன்னிகள் குறித்து கவிதை ஒன்று எழுதினாலென்ன என்று தோன்றியது.

டீ கப்பினை சமயலறையில் வைத்துவிட்டு தன் அம்மாவிடம், “ம்ம்மா நானா வந்து டிபன் கேட்க்குரப்ப குடு.... ஒரு கவித எழுத போறேன். நடுப்பரவந்து சாப்டு கீப்டுன்னு தொந்தரவு பண்ணாத” என்றான் கவியமுதன்.

வாசிகபாரதி: ஏண்டா ஒரு வழியா சாப்டு போய் எழுதேண்டா... எனக்கொரு வேல முடியும்ல .

கவியமுதன் : இல்லம்மா.... நல்ல மூட்ல இருக்கப்பவே எழுதிர்றேன் என்னோட இஷ்டத்துக்கு விட்ரும்மா.

வாசிகபாரதி: சரி சரி போய் எழுதுடா தொந்தரவு பன்னால ஒன்ன .

நன்றிம்மா.... என்றபடி தன் தாயின் வலது தோளில் தன்னுடைய வலது கையை போட்டு ,இடது கையால் அவளது தாடையை உருகிக்கொஞ்சிவிட்டு தன்னுடைய ரூமிற்கு சென்று கதவை தாழிட்டான். மேசையை ஒட்டிக்கிடந்த வயரால் பின்னப்பட்டிருந்த s டைப் சேரை இடது கையால் பின்புறம் இழுத்து அமர்ந்து கொண்டு மேசை மீதுள்ள டைரியை எடுத்து தன் சட்டைபாக்கெட்டிலுள்ள கருப்பு நிற பேனா மூடியை திறந்து “முதிர் கன்னிகள்” என்று தலைப்பிட்டான் .

தமிழை சுவாசித்த தம்பதிகளின் உதிரங்கள் உருவாக்கிய உயிர் என்பதால் வார்த்தைகள் வழுக்கி விழுவதில் தடையேதுமில்லாமல் விழுந்தது கவியமுதனுக்கு . 

விழுந்தவரிகளை பொருக்கி முடிந்து வார்த்தைகளாய் கோர்த்து பின் வாய்விட்டு வாசித்துப்பார்த்தான். வரிகளில் வலிகள் கூடியிருந்ததால் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு வார்த்தைகள் வரமறுத்து வாசிப்பை நிறுத்த கட்டாயப்பட்டுப்போகிறான் .

பெருக்கெடுத்திருந்த விழிக்குளம் இரண்டிலிருந்தும் இருதுளி நீர்கள் மட்டும் பூமி தேவியின் மடியில் சிந்திப்போனது.

சிறிதுநேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கவிதையின் கணம் சுமந்து கொண்டே , 
கவியமுதன் டிபன் குடும்மா.

வாசிகபாரதி: என்னடா அதுக்குள்ளே எழுதீட்டியா ? ஏண்டா மொகம் ஒரு மாதிரி இருக்கு?
என்று கேட்டுக்கொண்டே தோசையை வார்த்து தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள். 

சாப்பிட்டு முடித்ததும் கவிதையை அவளிடம் கொடுத்து வாசிக்கசொன்னான் . வாசித்து முடித்ததும் புள்நுனியிலிருந்து சிதறப்போகும் நீர்த்துளிபோல் அவளும் இருதுளிகள் கண்ணீரை கசியவிட்டு துடைத்தவாறே , நல்லா எழுதீருக்கடா... என்றாள். 

நல்ல அழுத்தமான கவிதையா இருக்குடா அப்படியே ஒன்னோட ப்ளாக் ளையும் , ஃபேஸ்புக் ளையும் போட்டு விடுடா.... எல்லோரும் படிக்கட்டும் என்றாள் .

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொல்லும் நிலை இன்று மாறி. இணையம் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டு வரியில் கவிதையோ, தத்துவமோ நாம் எதை சொன்னாலும் இந்த உலகில் இணைய இணைப்பு உள்ள எந்த மூலையிலும் ,யாரும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இன்றைக்கு இணையத்தில் பலவகையான வசதிகள் உள்ளன . ஃபர்ஸ்ட் நேம் , செகண்ட் நேம் பாலினம் , பிறந்த தேதி , ஒரு மின்னஞ்சல் முகவரி... இது இருந்தால் போதும் பெருகிக்கிடக்கும் சமூக வலைத்தளங்கள் ஒன்றில் கணக்கு தொடங்கி விடலாம். அப்படி தொடங்கிவிட்டால், அமெரிக்க அதிபர் முதல், இந்த கதை எழுதிய நாள் வரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படாத ராஜபஷே வரையிலும். கோல்ஃப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் முதல் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரை யாரை வேண்டுமானாலும் நண்பர்களாக ஆக்கிக்கொள்ளலாம். மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம் . 

பிளாக் இல் இது போன்று நண்பர்களை சேர்க்க முடியாது இதற்கென்று ஒரு விலாசம் நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்யவேண்டும். அந்த விலாசத்தை அட்ரஸ் பாரில் அடித்தால் நீங்கள் உங்கள் ப்ளாக் இல் எழுதி இருப்பதை எல்லோரும் பார்க்கலாம் . 
அதாம்மா பண்ணப்போறேன் என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய லேப்டாப்பை 
திறந்து எப்போதும் இரண்டு மூன்று முறைக்கு மேல் அழுத்தி சுவிட்ச்சான்
செய்வது போலவே சுவிட்ச்சான் செய்தான் . 

ஃபேஸ் புக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் கவியமுதனுக்கு ஏற்கனவே கணக்கும் , நிறைய நண்பர்களும் உண்டு .

தன்னுடைய கவிதையை ஃபேஸ்புக் குறிப்பில் பேஸ்ட் செய்தான். தன்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு முப்பது நபர்களுக்கு இணைப்பில் போட்டான் . இணைப்பில் போட்டதை பப்ளிஷ் செய்தான். 

செய்து முடித்துக்கொண்டிருந்த இடைவெளியில் இவனது செல் ஃபோன் , "கையில் மிதக்கும் கனவா நீ " என்ற பாடலை பாடியது. எடுத்துப்பார்த்தான் “ரொசாரியோ ஒ +” என்ற பெயர் ப்ளிங்கிக் கொண்டிருந்தது.

நண்பனின் அழைப்பு அது. அவன் பெயருக்கு பக்கத்தில் உள்ள இந்த “ஒ+” என்ற குறியீடு அவனது ரெத்த வகையை குறிப்பதாகும். கவியமுதனின் செல் ஃபோனில் அவனது தொடர்பாளர்களது பெயருக்கும் பக்கத்தில் அவரவர்களின் ரெத்தவகையை குறித்து வைத்துக்கொள்வது அவனது வழக்கம். தக்க சமயத்தில் அவர்களுக்கும், அல்லது வேறு யாருக்கேனும் உதவியாக இருக்கும் என்று இவ்வாறு குறித்து வைத்துக்கொள்வான். அழைப்பு மணி “கை கால் முளைத்த காற்றா நீ” பாடுவதற்குள் , 

கவியமுதன்: சொல்டா  எங்க இருக்க ? 

ரொசாரியோ: வீட்லடா..., நீ எங்கருக்க ? 

கவியமுதன்: நானும் வீட்ல தாண்டா.

ரொசாரியோ: சினிமா போவமா ?

கவியமுதன்: என்ன படம் ?

ரொசாரியோ: வா போய் பாக்கலாம். எது கிடைக்கிதோ போலாம். ரொம்ப போரா இருக்குடா .

கவியமுதன்: சேரி கெளம்பி வர்றியா ?

ரொசாரியோ: இன்னும் ஆஃப்ன்னவர்ல உங்க வீட்ல இருப்பேன்.

கவியமுதன்: சரி வா . 

அரைமணி நேரத்தில் வந்துநின்ற கருப்பு நிற டூவீலரில் பின்னால் ஏறிக்கொண்டான் கவியமுதன்.

ஆற்றுப்பாலம் தாண்டி சென்றது டூவீலர். நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள குறுகிற சந்துப்பாதைக்குள் நுழைந்தது. அதனுள்ளே தான் மிகப்பெரிய இடத்தில் ராஜராஜன் தியேட்டர். மணிரத்னம் இயக்கிய “கன்னத்தில் முத்தமிட்டால்” பட போஸ்டரில் மாதவன் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தாள் பார்த்திபன் சீதா தம்பதியர் பெற்றெடுத்திருந்த குட்டி தேவதை “கீர்த்தனா” . ரூபாய் நூற்றி அறுபதிற்க்கு “சலுகை” விலையில் இரண்டு ப்ளாக் டிக்கெட் கிடைத்தது . 

படத்தின் இடைவெளியில் கூட்டத்தின் பெரும்பாலோனோர் விரல் இடுக்கிலும் வித விதமான கம்பெனிகளின் சிகரெட் தற்காலிகமாக தன்னையும் , பிடித்திருப்பவனை சமயம் பார்த்து எரிக்கவும் கங்கிக்கொண்டிருந்தது. இவர்களும் தன் பங்கிற்கு ஆளுக்கொரு சிகரெட் சாம்பலை தட்டிக்கொண்டிருந்தார்கள் .கவியமுதன் தட்டும் சிகரெட் சாம்பல் திண்டு திண்டுகளாக கீழே விழுந்து சிதறுவதைப்போல் அவனது மனதும் விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. படத்தில் ஈழத்தமிழர்கள் படும் அவஸ்தையை தத்ரூபமாக படமாக்கியிருந்தார் மணிரத்னம்.

நல்லதொரு விடுமுறை பொழுதை அர்த்தப்படுத்தியதாக எண்ணினார்கள் இருவரும் .

அப்படத்தில் வரும் பல காட்சிகள் மனதை கணக்கசெய்தாலும் "விடைகொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே" என்ற இந்த பாடல் வரிகள் தினமும் தன்னை கொத்திக் கொத்தித்திண்ணாமல் போகப்போவதில்லை என்றும், இதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனது கனவில் வந்து போகாமல் ஒரு இரவு கூட விடியப்போவதே இல்லை என்றும் நினைத்துக்கொண்டான் .

இரண்டு நாள் விடுமுறைக்காக தான் பணிபுரிந்த ஊரிலிருந்து உறவினர்கள் வசிக்கும் தன் சொந்த ஊருக்கு தான் பயணித்ததையும் , இந்த பாடல் காட்சிகளில் தம் சொந்த மண்ணை விட்டு பிரிந்து புலம்பெயர்ந்து போகும் மக்களின் பயணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டான்.

மாலைப்பொழுதுகளை எல்லாம் நண்பருடன் கடத்தியாகிவிட்டது. இரவு டிபன் கூட ஒரு நல்ல ஹோட்டல் இல் முடித்து வீடு திரும்பியாகிவிட்டது .

வீட்டு வாசலில் வந்து நின்ற டூ வீலரில் இருந்து இறங்கி.... வருங்கால தலைமுறையினருக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஓர் ஆய்வில் கடந்த ஒரு மாதங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்த தன் தந்தையிடம், ஹாய் அப்பா என்றான். “ஹாய்” என்ற பதம் இவனுக்கு சாஃப்ட்வேர் துறை கொடுத்திருந்த சாபமாக எண்ணிக்கொண்டான்.

அரிமாவளவன்: ம்ம், வாடா எங்க போயிட்டு வர்ற ?

கவியமுதன்: சினிமாவுக்குப்பா..

ம்ம் சரி சரி என்று தலையாட்டிக்கொண்டு தன்னுடைய வேலையில் மூழ்கிகொண்டார் . இவரது கல்விப்பணி விளம்பரமற்றதாக , சுயநலமற்றதாக இருந்திருந்தது .

இவன் இந்த முறை வீட்டில் தங்கியிருந்த இரண்டு நாட்களிலும் தன் அப்பா தன்னுடன் சரியாக பேசவில்லை என்று எண்ணிக்கொண்டான் . 

தம்பி அமலன் தான் படித்திருந்த படிப்பிற்கு வேலை தேடும் பொருட்டு ,சென்னையில் உள்ள கம்பெனிகளின் விபரங்களை சேகரித்து கொண்டிருக்கையில் ,

ஒல்லியான தேகம் கொண்டவர் ஒருவர் சார் என்று அழைத்தவாறே தயங்கி வாசலில் நின்றிருந்தார் .வாங்க மாரியப்பன் என்று அழைத்து வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார் கவியமுதனின் அப்பா .அவர்களின் பேச்சில் இருந்து தனக்கு கல்யாண பேச்சு தொடங்கியிருப்பதாக தெரிந்திருந்தது கவியமுதனுக்கு .

வந்திருந்தவர் ஒரு திருமண தரகர் என்பதை புரிந்து கொண்டான் .

சரி நீ சாப்ட வாடா என்றாள் அம்மா .

சாப்டேம்மா ஹோடெல்ல.

ஏண்டா ஊர்ல இருக்கப்பவாவது வீட்ல சாப்டாம இப்டி பண்ற? என்றாள்.

கோவிச்சுக்காதம்மா தூக்கம் வருது போயி தூங்குறேன்.

என்று விடை பெற்றுக்கொள்கிறான் .

சுவற்றுக்கோழியின் இடையறாத தாலாட்டில் உறங்கிப்போயிருந்தான் கவியமுதன். உறக்கத்தின் ஊடே அவன் கண்டிருந்த ஏதேதோ கனவுகளை எல்லாம் விடிந்ததும் தொலைத்து விட்டிருந்தான் . அன்றிரவு சென்னை செல்வதற்கு 10 .30 பேருந்திற்கு முன்பதிவு டிக்கெட் பெற்றிருந்தான் . அதற்காக ஆயத்தமாகிக்கொண்டே அன்றைய பகல் பொழுதுகளை உடைத்தெறிந்து கொண்டிருந்தான் .

குடும்பத்தாருடன் கழித்த பொழுதுகளை நினைவோடையில் மிதக்கவிட்டபடி சென்னையில் கரை ஏறிக்கொண்டான் . மறுபடியும் அவன் பந்தயக்குதிரையில் பயணித்தாகவேண்டும் .

அலுவலக கணினிதிரையின் மூலம் இரவிற்கான உறக்கத்தினை சம்பாதித்து வந்தவனுக்கு தன் அறையில் உள்ள கணினியை திறப்பதில் அலாதிப்பிரியமின்மயாயிருந்தாலும் நித்தம் அவனது நித்திரையை கொத்தித்தின்று கொண்டிருந்த அந்த பாடல் வரிகளும், காட்சிகளும் .அன்று ஏனோ அகோரப்பசியால் ஒரேயடியாய் கொத்தி விழுங்கிக்கொண்டிருந்தது . சரி... இணையத்தை சற்று நேரம் திறந்து பொழுதை கழிப்போம் என்றெண்ணினான். தான் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் எழுதிய “முதிர்கன்னிகள்” குறித்த கவிதைக்கு யார் யார் என்ன பதில் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக முகவரிப்பெட்டிக்குள்ளும் , கடவுச்சொல் பெட்டிக்குள்ளும் பத்து விரல்களின் நடன ரேகையை பதித்து திறந்து கொண்டான் .

முகமறியாத, தகவல் அறிந்த நண்பர்களின் நட்பு கேட்பு , உள்ளீட்டு செய்தியொன்று , அறிவுறுத்தல் செய்தியென்று எல்லாம் சிகப்பு நிறத்தில் நம்பர்கள் பதித்த அட்டையை தூக்கிக்கொண்டு நின்றது . யாரோ நட்பு வேண்டி விண்ணப்பித்திருக்கின்றார்கள் முதலில் அவர்களை நட்பில் இணைத்துக்கொள்ளலாம் என்று அவரது முகவரியையும் , புகைப்படத்தையும் பார்த்தான் கவியமுதன். தான் ஒரு பெண் என்ற தகவலும் தன்னுடைய சொந்த நாடு ஸ்ரீலங்கா, ஊர் ஜப்ஃனா என்று மட்டும் இருந்தது. மற்ற தகவல்கள் இல்லாததால் பிறகு எப்போதாவது நட்பில் இணைத்துக்கொள்வோம் என்று உள்ளீட்டு குறுஞ்செய்தியின் பக்கம் பார்வையை விட்டெறிந்து கிளிக்கினான்.... நட்பு அழைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த அதே ஜப்ஃனா கேர்ள், ஹாய் ... என் பெயர் ஆண்டாள்.  உங்கள் முதிர் கண்ணிகள் கவிதை வாசித்தேன் அருமை என்று ஆங்கில எழுத்துக்களை பயன் படுத்தி தமிழில் படித்து உச்சரிக்கும் படியாக எழுதியிருந்தாள். 

என்னதான் பொழுதனைக்கும் கணினியில் பணிபுரிபவனாக இருந்தாலும் வேற்று நாட்டவர் ஒருவர் தமிழில் எழுதி பேசியதை கவியமுதன் முதல்முதலாக இப்பொழுதுதான் பார்க்கிறான் . பதில் மரியாதைக்காய் மட்டும் நன்றி என்றொரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த ஈழ தமிழச்சியை தன்னுடைய நட்பில் இணைத்துக்கொண்டான் . முதிர்கன்னிகள் குறித்த பதிவினை திறந்து பார்த்துக்கொண்டிருந்தான்... அந்த பதிவிற்கு பின்னூட்டம் பெரும் ஆறுதலை தந்தது அழுத்தமான , நல்ல பதிவு என்று பாராட்டிவிட்டு , தங்களுக்கு பிடித்த , தங்களை உறையச்செய்த வரிகளாக கீழ்க்கண்ட வரிகளைத்தான் குறிப்பிட்டிருந்தார்கள் . 

//மனமேடை ஏறுவதற்கான

ஒத்திகை பார்த்தே

ஓய்ந்து போனேன் // 

கவியமுதனுக்கும் வலித்த வரிகள் இதுவாகத்தான் இருந்திருந்தது . 

சற்று நேரத்தில் மற்றுமொரு குறுஞ்செய்தி வந்திருப்பதாக ஒற்றை எண் சிகப்பாக எரிந்தது , பிரித்துப்பார்த்ததும் அதே ஜப்ஃனா கேர்ள் , அனைவருக்கும் பிடித்திருந்த , வலித்திருந்த, மேல் குறிப்பிட்ட அதே வரிகள் தனக்கும் பிடித்திருக்கிறது என்று அனுப்பியிருந்தாள். 
மறுபடியும் பதிலுக்காய் ஒ...... , அப்படியா ? நன்றி. என்று அனுப்பினான் கவியமுதன் .

அடுத்ததாக எப்படியும் ஒரு செய்தி வரும் என்று எதிர் பார்த்து பார்வையை செய்திப்பெட்டியின் மேலேயே வைத்து காத்திருந்தான். அவனது காத்திருப்பு வீண் போகவில்லை. அடுத்த செய்தியையும் அவளே அனுப்பியிருந்தாள்.

தான் கொழும்புவில் இருக்கும் தன்னுடைய அக்கா வீட்டிற்கு வந்திருப்பதாகவும், நாளை ஜப்ஃனா போய்விடுவேன் அங்கு போய் பேசுகிறேன்.

டேக் கேர் என்று முடித்திருந்தாள்.

பதிலுக்கு – bye , டேக் கேர் என்ற
செய்தியை அனுப்பிவிட்டு தனது கணினியை மூடி வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டான்., ஒரு வார காலத்தை எப்படிக் கடத்தப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. இந்த மலைப்பு அந்த இலங்கை தமிழச்சி ஏற்படுத்தியிருந்ததானது. 

தினமும் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்து பார்ப்பதை இப்போது கொஞ்சம் ஆர்வமாக செய்யத்துவங்கி இருந்தான்.

வாரத்திற்கு ஏழு நாட்கள் என்று நிர்ணயித்தவன் எவன் ? என்று தினமும் , அவ்வப்போது திட்டிக்கொண்டான். ஏழு நாட்களைக்கடந்தும் அவள் இணையத்திற்கு வராததால் வாரத்தின் நாட்கள் ஏழு என்பதை இப்பொழுது அதிகப்படுத்திவிட்டாகளோ ? என்றளவில் லேசாக புலம்புபவனாகியிருந்தான். இந்த எதிர்பார்ப்புக்கும் , புலம்பலுக்கும் எது காரணியாக இருக்கும் என்று அவனால் அறிந்திருக்க முடியவில்லை . அநேகமாக அது காதல் என்ற உணர்வின் சீண்டலாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான். இந்த உணர்வு தன்னை முதன்முதலாக அவளால் சீண்டிவிடப்படுவதாக உணர்ந்தான்.

ஒருவாரம் கழித்து வருவதாக சொல்லியிருன்தவள் பதினோரு நாட்கள் கழித்து இணையம் திறந்து ஒரு செய்தி அனுப்பியிருந்தாள்.

“ஹாய் சாரி போன இடத்தில் கொஞ்சம் வேலை , அதனால் தான் வர இயலவில்லை” தேடிக்கொண்டிருந்தீர்களோ..... ரொம்ப ?” இப்படியாக இருந்தது அந்த செய்தி. அவள் பேசும் அழகில் வாஞ்சை இருந்ததாக எண்ணிக்கொண்டான்.

அலுவலகத்தின் கணினியில் வேலை பார்த்துக்கொண்டே அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கத்தினை திறந்து பார்த்து அவளிடமிருந்து செய்தி ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். இவனுக்கான அலுவலகப்பணி நேரம் முடியப்போவதாக கடிகாரமுள் குத்திக் காட்டிக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது.

கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று ஃபேஸ்புக் பக்கத்தினை பார்த்திருந்த போதுதான் மேற்க்குறிப்பிட்டிருந்த அந்த செய்தியை அவன் பார்த்தான் . அவளிடமிருந்து செய்தி வந்திருந்து மூன்று நிமிடங்கள் ஆகிவிட்டதாக இருந்தது . அலுவலக நேரம் இவ்வளவு சீக்கிரம் நகர்ந்து போயிருக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டான் . அவளது செய்தியை பார்ப்பதற்கும் முன் அவன் அப்படி நினைத்திருக்கவில்லை. 

ஓ...... அப்படியா ...சரி சரி நான் இப்போது அலுவலகத்தில் இருக்கிறேன். அலுவலக வேலை நேரமும் எனக்கு முடிந்துவிட்டது . தொடர்ந்து இப்பொழுது என்னால் பேச இயலாது. எனது அறைக்கு சென்றதும் ஆன்லைன் வருகிறேன். என்ற செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காய் காத்திருந்தான் . சிறிதொரு வினாடிகளுக்குள் அவளும் “oki . டேக் கேர் . ஆன்லைன் வந்ததும் மெசேஜ் பண்ணுங்கோ”. என்று செய்தி அனுப்பிவிட்டு சென்றுவிட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி தன்னுடைய பைக் சாவியை எடுத்து பைக்கை திறந்து பார்க்கிறான். அது திறக்கமுடியாமல் போகிறது . எரிச்சலடைகிறான் . தன் அலுவலக சக ஊழியரான ராஜாராமன், “என்னப்பா ... உன்னோட பைக் சாவியை வைத்து என்னோட பைக்க திறக்கற ? என்னாச்சி உனக்கு ?” என்றதும்... அவரிடம் ஒரு சாரி சொல்லிவிட்டு கிளம்பிப் போகிறான்.

நாட்களின் நீட்சி இவர்களின் பேச்சடங்கியதாய் கடந்து போயின. இருவரின் எண்ணமும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்திருக்க வேண்டும் . கடல் கடந்த இவர்களது பேச்சுவார்த்தைகள் காதல் என்னும் உணர்வுப்பூவை மலரச்செய்திருந்தது. 

இவர்கள் பேசிக்கொண்டிருந்த பிரிதொருநாளில் ஆண்டாள், “எங்கள் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை . நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்” இப்படி ஒரு செய்தியை அனுப்பியிருந்தாள். 

அவள் அனுப்பியிருந்த இந்த செய்திக்கு... அவளுக்கு கவியமுதனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இணையத்தின் மூலம் காதலித்து , மனதை பறிகொடுத்து எமார்ந்துவிட்டோமோ எண்றெண்ணியவள், தினமும், அடிக்கடி செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். அவனது அலைபேசிக்கு தொடர்புகொண்டும் அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதான குரலையே அதிரச்செய்தது.

இவள் அனுப்பிக் கொண்டிருக்கும் செய்திக்கு பதில் வந்ததா ? அழைத்துக் கலைத்துப்போன அலைபேசி மணி அடித்ததா ?

கவியமுதன் என்னவானான் ? அதன் பின்  ஆண்டாள் என்னவானாள் ? இவர்களது காதல் என்னவானது ? கவியமுதன் , ஆண்டாளை ஏமாற்ற நினைத்தானா ? ஆண்டாள் தேடிக்கொண்டே இருந்தாளா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா ? 

இதில் எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் .

இதிலுள்ள ஏதும் நிகழாமலும் இருந்திருக்கலாம் .

எங்கும் நிகழாத ஏதேனும் தியாகம் கூட இக்காதலில் நிகழ்ந்திருக்கலாம் . 

(மனித உணர்வுகளை வருடும் வகையில் , மென்மையான, இந்த காதல் கதையின் முடிவினை திரையில் காணும் பொருட்டு, இக்கதைக்கான முழுத்திரைக்கதை வடிவம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையினை திரையிட விரும்பும் தயாரிப்பாளர்கள் என்னை அணுகலாம்.

வசனம், பாடல்கள் உட்பட தயார்நிலையில் உள்ளது.)



1 comment:

  1. அண்ணா, சூப்பர்..... அசத்துங்க

    ReplyDelete