Friday, October 25, 2013

இப்பொழுதெல்லாம்...


இப்பொழுதெல்லாம்...
என் விளை நிலத்திற்கான விலையை...
நான் மதிப்பிட்டுக் கூறுவதில்லை.
என் வறுமையறிந்து
என் சுமையை சாட்டிலைட் தொலைக்காட்சிகள்
பங்கிட்டுக் கொள்கின்றன.

 
இப்பொழுதெல்லாம்...
ஆறுகளுக்குள் மணல் திண்டுகளைவிட

நீரற்ற குளங்களே அதிகமிருக்கின்றன.


மணல் மீன்களை
பிடிக்கும் வலை...

மாஃபியாக்களிடம்
மட்டுமே இருக்கிறது.


இப்பொழுதெல்லாம்...
எந்த மனமகனார் வீட்டிலும்
வரதட்சணை கேட்பதே இல்லை
பின்னால் தர்ஷினியோ, விக்னேஷோ பிறந்தால்
தனியார் பள்ளியில் L.K.G க்கு இடம் மட்டும்
வாங்கித்தரச் சொல்லிக் கேட்கிறார்கள்.


இப்பொழுதெல்லாம்...
தண்ணியும் விலை
தண்ணீரும் விலை.



இப்பொழுதெல்லாம்...
ஒருவருடைய வீட்டுமனை

அவருக்கே தெரியாமல்
குறைந்தபட்சம்

மூன்று பேருக்காவது விற்கப்படுகிறது.


இப்பொழுதெல்லாம்...
கொலைக்கு புதுப்பெயர் வைத்துள்ளார்கள்

கௌரவக் கொலை என்று.


இப்பொழுதெல்லாம்...
தந்தையிடமிருந்தே பாதுகாப்புத்

தேவைப்படுகிறது. பருவம் தொட்ட மங்கைக்கு.


இப்பொழுதெல்லாம்...
தன்னை தரிசிக்கவேண்டி

கடவுளும் விளம்பரத்தூதரை
நியமித்திருக்கிறார் தொலைக்காட்சிகளில்.


இப்பொழுதெல்லாம்...
மது அடிமை மீட்புமையங்கள்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை
மிஞ்சிவிட்டிருக்கிறது.

தண்ணீர் தண்ணீர்

கண்ணான பூமகனே


கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர்

ஆறாகப் பெருகி வந்து

தொட்டில் நனைக்கும் வரை

...உன் தூக்கம் கலைக்கும் வரை

கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே



ஊத்து மழை தண்ணீரே

என் உள்ளங்கை சர்க்கரையே

நீ நான் பெத்த தங்கரதம்

இடுப்பில் உள்ள நந்தவனம்

"காயப்பட்ட மாமன் இன்று

கண்ணுறக்கம் கொள்ளவில்ல

சோகப்பட்ட மக்களுக்கு

சோறு தண்ணி செல்லவில்ல

ஏகப்பட்ட மேகம் உண்டு

மழை பொழிய உள்ளமில்ல."



கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே



கால் மொளைச்ச மல்லிகையே

நான் கண்டெடுத்த ரோசாவே

நீ தேன் வெச்ச அத்திப்பழம்

முத்தம் தரும் முத்துச்சரம்

"தண்ணி தந்த மேகம் இன்று

ரத்தத் துளி சிந்துதடா

காத்திருந்த பானைக்குள்ளே

கண்ணீர் துளி பொங்குதடா

வீட்டு விளக்கெரிவதற்கு

கண்ணே எண்ணை இல்லையடா."



கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே.

தாத்தா சொத்து .

  

என் தந்தை வழி தாத்தா சொத்துக்களில் ஒன்று தான் அந்த மரக்கட்டில் .  நாங்கள் வசித்தது நாகரீகப்போர்வை போத்தியிருந்த நகரம் என்பதால் சிறு வயதில் அவ்வப்போது எனது தந்தையுடன் தாத்தாவின் கிராமத்திற்கு சென்றிருக்கிறேன் .

வேலையில்லாத நேரங்களில் அவர் அந்த கட்டிலில் தான் உட்கார்ந்தும் , உறங்கியும் இருப்பார்
தனியாள் மட்டும் படுத்துறங்கும் வகையிலான ஒற்றை கட்டில் அது.   தரத்திலும், விலையிலும் உயர்ந்ததான மரங்களில் செய்யப்படாத கட்டிலாயினும் மிக உறுதியாக இருக்கும் .  தனித்தனியாக பிரித்து வைத்து கொள்ளலாம், படுக்கை பலகைகள் தனி தனியாக பிரித்து எடுக்கும் வகையில் இருக்கும் .  நாளடைவில் அக்கட்டிலின் வசதி என் தாத்தாவிற்கு பிடிக்காமல் போகவே உடலை மிருதுவாக தாங்கக்கூடிய நூல் கயிறினால்  பின்னப்பட்ட மற்றொரு கட்டில் எனக்கு ஏற்ப்பாடு செய்து கொடுத்துவிட்டு இதை ஓரம் கட்டியோ , அல்லது நீயோ எடுத்து செல்  என்று  சொல்லி விட்டார் . தாத்தாவின் வீட்டில் ஓரம் கட்டிக்கடக்கப்பட்ட கட்டில் சிறிது காலம் கழித்து எங்கள் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது .

நான் , என் அக்கா , என் தங்கை மூவரும் உறங்கும் வகையில் எங்களது தந்தை ஒரு ஸ்டீல் கட்டில் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார் அதில் தான் நாங்கள் மூவரும் உறங்குவோம் இட பற்றாக்குறை ஏற்ப்பட்டால் கூட தாத்தாவின் கட்டிலை யாரும் பயன் படுத்துவதில்லை . புதிதின் மேல் ஏற்ப்பட்ட ஈர்ப்பின் காரணமாக  கூட இருக்கலாம் .


நண்பர்களுடனேயே அதிகம் விளையாண்டு செலவிடும் பருவம் என்பதால் பெரும்பாலும் தாத்தாவின் கட்டில் விளையாட்டு பொருளாகவே மாறிப்போனது ஆமாம் என் வீட்டிற்கு நிறைய நண்பர்களை அழைத்து வந்து அக்கட்டிலில் குதித்தும் , ஓடியும்  விளையாண்டிருக்கிறோம் .  பின் நண்பர்களின் ஆலோசனைப்படி கட்டிலின் துண்டு பலகைகளை வீட்டிற்கு தெரியாமல் எடுத்து சென்று கிரிக்கெட் மட்டை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டில் சிதைய எனது விளையாட்டுப்பருவமும் காரணமாக இருந்திருந்தது .

பின்னர் திருடிய பலகைகளுக்காக டின் கட்டப்பட்டும் இருந்தேன் .

பிறகு நாளடைவில் அக்கட்டில் சரியாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்தும் , சில் சில்லாக அடுப்படிக்கும், ஒரு சில சட்டங்கள் அவ்வப்போது பயன்படும் பொருளாகவும் ஓரம்கட்டப்பட்டு விட்டன .

எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் சிலவற்றில் இது போன்று அவர்களின் முன்னோர்கள் பயன்படுத்திய பண்டங்கள் சிதிலமடைந்து கிடந்திருப்பதை பார்த்தும் இருக்கிறேன் .

சிறந்த மர வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கடிகாரப்பெட்டியும் ,
தரையில் உட்கார்ந்து வைத்து எழுதும் டெஸ்க் ,
எளிதில் சாய்ந்து உட்காரும் சேர் , மற்றும் பூஜையறை சாமான்களும் இன்று எங்கள் வீட்டில் பயன் பாடில்லாமல் ஓரமாகவே கிடக்கின்றன ஆனால் அவ்வப்போது பராமரிக்கப்படுகின்றது என்பது மட்டும் ஆறுதலான செய்தி .

சமீபத்தில் என்பது வயதான எனது தாய் வழி பாட்டி  திடீரென படுத்த படுக்கையாகி விட்டார் . அச்சமயம் அவரை படுக்க வைக்க வீட்டில் இரண்டு பெஞ்ச் இருந்தாலும் அது வேறொரு மாற்று ஏற்பாட்டிற்க்காக ஓரம் கட்டியே வைக்கப்பட்டிருந்தது.  தாத்தாவின் கட்டில் அப்போது எங்களது தேவையை உணர்த்தியது .

நகரத்து நவ நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்தது என்னவோ  நமது முன்னோர்களையும் நமக்காக அவர்கள் போற்றிப்பாதுகாத்து வந்த பொருட்களையும் உதாசீனப்படுத்த தானோ என்ற கேள்வி என்னுள் எழுந்தது .


நம் தாத்தா  பாட்டிகள் நமக்காக விட்டுப்போன பெரும் சொத்து , அன்பு , பாசம் நீங்கலாக அவர்கள் பயன் படுத்திய சிறு சிறு பொருள்களே .  அது தான் அடிக்கடி அவர்களை நமக்கு நியாபகப்படுத்தி இருக்கும் .

பெரும்பாலும் கிராமங்களில் அவ்வாறு போற்றிப்பாதுகாப்பது இன்றளவிலும் நடந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்.
நகரங்களில் மிகக்குறைவு .

மனநலம் பாதித்தவர்கள் பார்வையில்





ஏதோ ஒரு.
எதார்த்த நிகழ்வு
நியாயம் கடந்து
எல்லை மீறியதால்.....
எல்லை மீறியதை
எல்லை மீறி !!
என்னுள்
உழன்று கொள்ளச் செய்ததால்
என் சுயநினைவை
இழந்து போனேன் .......


சுயநினைவை இழந்தாலும் .
சுயம் மட்டும் இழக்கவில்லை !!
சுயநினைவின்
நியாயமே இங்கு
சுயமாய் ......


நியாயம் கடந்த
எல்லை மீறல்
எதுவென்று
தெரியவில்லை !!
சுயநினைவு
இழந்ததால் ..........


உறவின் வஞ்சகமோ !!
நட்பின் வஞ்சகமோ !!


உறவின் நிரந்தர பிரிவோ !!
நட்பின் நிரந்தர பிரிவோ !!


கரம் கோர்க்க
எத்தனித்த நேரத்தில்
கை நழுவிய காதலோ !!


என்னை நானே
நம்பாமல் போனதோ !!


கருவுக்குள்
காத்தவன்
காப்பகத்திற்கு
கடத்தியதாலோ !!


கருவுக்குள்
காத்தவளை
காப்பகத்திற்கு
கடத்தியதாலோ !!


உலகறியச் செய்தவனை
உதாசீனப்படுத்தியதாலோ !!


உலகறியச் செய்தவனே
உதாசீனப்படுத்தியதாலோ !!


காமக்கூட்டம்
கருவறுத்ததாலோ !!


ஆம் இவை எல்லாம் இங்கே
எதார்த்த நிகழ்வுகள் தான் .........
இன்னும் நிறையவும் இருக்கின்றது....


நியாயம் கடந்த
எல்லை மீறலுக்கு
எல்லையுமில்லையோ !!


எல்லை மீறி
உழன்று கொண்டால்
எதுவுமேயில்லை ......

இதற்க்கு மேல்
தொடர்ந்தால்
தலைப்பாய் நானே .....................

நான் பார்த்திராத என்னவள் இப்படித்தான் இருந்தாள் !!!


அந்தி சாய்ந்த நேரத்தின்

செந்நிற வானத்தை

திருடி பூசியிருந்தால்

தன் உடலில் 


விண்மீன்கள் கூட்டத்தின்

விடுபட்ட எண்ணிக்கைகளை

பகலிலும் பார்க்க முடிந்தது

அவள் சிரிக்கையில் 


மின்னலாய் மின்னும்

அவளிரண்டு இமைகளுக்குள்ளும்..

பெளர்ணமி நிலவின் மத்தியில்

அமாவாசை இருட்டு நிலவை

ஒளித்து வைத்திருந்தால் 


அடர்ந்த மழை பெய்யும் சத்தத்தில்

கலந்திருந்தது

அவள் பேசும் மொழி 


மெல்லிய காற்று தள்ளிவிடும்

இலைச்சருகு போன்றது

அவளது நடை 



அவள் நீண்ட கருங்கூந்தலை

ஒப்பிட இங்கே என்னால் இயலவில்லை 

ஆம் , இப்படித்தான் இருந்தாள் .

உயர்ந்த மனிதர்கள்.

 




பெற்றார்கள் பிறந்தோம்  வளர்த்தார்கள் வளரவில்லை !!
ஏனோ தெரியவில்லை ..

பெற்றோர்கள் சிரித்து பார்த்ததே இல்லை !!
மற்றோர்கள் சிரித்துத்தான் பார்த்திருக்கிறோம்...
காரணம் குள்ளம் ..

ஏளனம் செய்வோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ....
எங்களுக்கோர் துன்பமென்றாலும் யாவரும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!
காரணம் குள்ளம் ....

வரட்டு கௌரவ குடிகாரனின் போதைக்கு
ஊறுகாய் நாங்கள் ....

குட்டிச்சுவற்றில் குந்தி கூத்தடிப்பவனுக்கு
குல்பி ஐஸ் நாங்கள் ....

உழைப்பினால் உயரும் எண்ணம் எங்களுக்கு.
உயரம் மட்டுமே முட்டுக்கட்டை எண்ணங்களுக்கு....
முட்டுக்கட்டையை முட்டியும் விட்டிருக்கிறோம் !!!



இப்படி யாரும் பிறக்க வேண்டாம்
பிறந்திருக்கவே வேண்டாம்
ஐயஹோ .....வேறு யாரை நான் மணமுடிப்பேன் ?
குள்ளத்தின் உள்ளத்திற்கு குள்ளத்தின் உள்ளம் தானே பொருந்தும் இங்கே  ?

எப்பொழுது கேட்டாலும் எங்களுக்குள் பயம் தான் இப்பாடல் !!!
"எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப்போலவே இருப்பான் "

பார்த்தீர்களா இங்கேயும்  சிரிக்கத்தானே வைத்திருக்கிறோம் உங்களை.....
அழ வைக்காதீர்கள் எங்களை ........நன்றி ...........................

சொல்லமறந்த நன்றிகள்





ஏதோ ஒரு

இச்சையின்

உச்சம் உமிழ்ந்த

எச்சம் நான் !!

உமிழ்ந்த எச்சம்

உருவமாய்

உருமாறியதும் !

உச்சமடைந்தார்கள்

உச்சமடைந்தவர்கள் !!

உள்ளிருந்த நானும்

உச்சமடைந்தேன் !!

உருப்படியாய்

உலகைக்கான

உண்ணும் கொள்கையும் ! (தாய்)

உண்ணா விரதமும்

உறவினர்கள் ...

பத்து திங்கள்

பசியாறினால்

உள்ளிருந்த !

எனக்காகவும் ..

பத்தாம் திங்களில்

உணர்ந்தேன் !

படைத்தவர்களின்

பதைபதைப்பை !!

கருவெடித்தேன் !

காட்சியாய் அனைவருக்கும் !!

கை இரண்டு ..

கால் இரண்டு.

கண் இரண்டு ..

இப்படி எக்குறையும்

இல்லாமல் !!!

கண்டவர்கள் கண்களில்

ஆனந்த கண்ணீர் !!

நான் கருவாகி

உருவானதை !

உறுதிப்படுத்தி

உருப்படியாய்

உலகைக்கானவும் !!

உலவவும் விட்ட

என் இரண்டாம் (மகப்பேறு மருத்துவர் )தாயை !!

இன்றுவரை கண்டதில்லை !!!

நன்றி மட்டும் அவளுக்காய் ...................