Tuesday, July 6, 2010

திருப்பாவை - ஆண்டாள்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!



இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள்.



ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.



அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கையன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்’ என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.



எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள்.



இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து… என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். ‘அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து’ என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். ‘உன் பொற்றாமரை அடியே’ என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக ‘பொருள் கேளாய்!’ என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள்.



பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, ‘ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்’ என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.



நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.


வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்


திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்

பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே

இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!



வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுகரித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.



அணி புதுவை – இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.



‘நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.



இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகமெல்லாம் பட்டுக்கொள்ளாமல், ஆசைப்பட்டு திருப்பாவைக்கு வியாக்கியானம் எழுத ஆரம்பித்தேன். இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து கேட்டுக்கொள்கிறேன்.



இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புற வேண்டும் என்று வாழ்த்தி இந்த திருப்பாவை உரையை முடிக்கிறேன்.



                                                 இதை எழுதி விளக்கியவருக்கு நன்றி
                                                            

No comments:

Post a Comment