Saturday, November 30, 2013

2013 நவம்பர்-ல் facebook











நவம்பர் 2013 ல் facebook 

  • டார்வின் தியரியை பொய்யெனச்சொல்லவில்லை என் செயல்.
  • எனக்கும் எனக்கும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.
    ஜெயிக்கப்போவது யாரென்று தெரியவில்லை.
  • 64 பாகம் கொண்ட சங்கிலி கருப்பரை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இன்னும் கிடைத்தாரில்லை.
  • கார்பனும் நைட்ரஜனும் சேர்ந்து செய்த கலவை நான்.
  • ஒரு கவிதைக்கான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போதே
     அதற்கான வார்த்தைகளை தேடத்துவங்கிவிடு.
  • குடிக்க குடிக்க சுகம்.... சுடுதண்ணிய சொன்னேன்.
  • இந்த இரவு முடிவதற்குள் நிலாவை பற்றி ஒரு கவிதையாவது எழுதிவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
    நிலா
    அழகு
    கவிதை
    இந்த மூன்று வார்த்தைகளைத்தவிர வேறெதையும் நான் எழுதியிருக்க மாட்டேன்.
  • ஹலோ..சுதாகர் எப்டி இருக்க...
    சுதாகர் இல்லையே... நீங்க யாரு...?
    சென்னை நம்பர் தானே இது...?
    இல்லங்க நீங்க நம்பர் மாத்தி அடிச்சிட்டிங்க...
    சரி மன்னிச்சுருங்க...# மன்னிக்க தெரிஞ்சவனோட மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுஷன்.
  • மந்திரிசபை மாற்றம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு வரை. நான் போட்ட உத்தரவுகள் தூக்கத்தில் உளறியது என்ற செய்தி நாளை வருமானால் அ.தி.மு.க. வினரின் நேற்றைய விவாதம் கண்டு யாரும் சிரிக்கக்கூடாது.
  • கைகூடா காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கடைபிடிக்கவேண்டிய அதிக பட்ச நாகரீகம்.
    கள்ளமில்லா ஒற்றைப்புன்னகையுடன் கடந்துவிடுவது.
  • நிலா .
    ஒப்புவமையிலாஅழகுப் பெண்.
    இரவுகளுக்கு சொந்தக்காரி.
    நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்.
    கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
    இவளின்றி அமையாது கவிதை .
     # சுட்ட கவிதை... எங்கிருந்துன்னு கேட்கக்கூடாது.
  • இன்றைய சில நிகழ்வுகள் என் மண்டைக்குள் alprazolam மருந்தை செலுத்தியிருக்கிறது. நிம்மதியாய் தூங்குவேன்.
  • சூனியமாகத்துடிக்கும் இன்றைய மணித்துளிகளுக்கு ஏதேனும் மந்திரம் ஓதிவிடவேண்டும்.
  • ம்ம்ம் இப்போ என்ன ஸ்டேடஸ் போடலாம்...
    குலாப் ஜாமூன் நல்லா இனிப்பா இருந்துச்சின்னு போடலாமா...
    குடிக்க குடிக்க சுகமா இருந்துச்சின்னு போடலாமா.... (சுடுதண்ணி)
    ஒரே தலைவலி... அப்டின்னு போடலாமா...
    எதுவுமே தோன மாட்டேங்குதுன்னு போடலாமா...
    தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்...
    எதையாவது போட்டே ஆகணும்.
  • 200 டெஸ்ட் விளையாண்டதுக்கு சச்சினுக்கு அஞ்சல் தலை...
    10 வருசத்துக்கும் மேல் உண்ணாவிரதம் இருந்துட்டு இருக்க இரோம் ஷர்மிளாவுக்கு... வெறும் பட்னி தான் தலையெழுத்தா...
  • நேற்றிருந்த எதுவும் இன்றில்லை. பிரபஞ்ச வெளியில் எல்லாம் கரைந்து போகிறது.
  • ஆளில்லாத உயர்ந்த மலையும், அடர்ந்து இருண்ட காடும், குறுகிப்போன குகையும், அகண்ட பாலைவனமும் வேண்டும் என் மனக்குமுறலை எதிரொலிக்க.
  • தூக்கம் வருமா தெரியாது.
    கனவு மட்டும் வரும்.
  • இந்த இரவின் குரல் கொன்னக்கோல் வாசித்தபடியே கரைத்து போகிறது.
  • கோட்டோவியமாக காமராஜரின் உருவம் வரைய எத்தனிக்கிறேன்...
    நேர்(மை) கோட்டிலிருந்து சற்றும் கூட வளைந்து கொடுக்க மறுக்கிறார்.
  • ( ) இந்த அடைப்பிற்குள் எத்தனை புள்ளிகள் மறைந்திருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது...
    ஆனால் ( ) இந்த அடைப்பிற்குள் உள்ள புள்ளிகளை மேல் அடைப்பிலுள்ள புள்ளிகளுடன் கழித்துப் பார்த்தால் புள்ளிகளே இல்லை என்று வருகிறது.
  • நல்லவன் மாதிரியே, ஈழ தமிழ்ல, அதே slang ல பேசுரான்யா டக்லஸ் தேவானந்தா..!!
  • ஓராயிரம் கவித்துளிகளுக்கான மழைத்துளியை பெய்து தந்திருக்கிறது இந்த பருவநிலை.
  • எந்த குதூகலத்திற்கும் இடமளிக்க மறுத்தே கடல் கலக்க ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஓடை.
  • இந்த இரவுப்பாலம் அதி பயங்கரமானது...
    கற்களும், முட்களும், கம்பிகளும், கனவுகளும் நிறைந்தே கிடக்கும்.
  • காசு, பணம், துட்டு... எல்லாம் செலவானபின் எஞ்சியிருக்கும் நேரத்தையும் செலவுசெய்து கொண்டிருக்கிறேன்.
  • useless fellow" இது எனக்குப் பொருத்தமாயிருக்கிறது.
  • வாழ்வு... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
    மரணம்... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
  • பேயோன் facebook லிங்க் இருக்கா... யார்ட்டயாவது.
  • கடந்துபோன இரவு இன்னும் கொஞ்சம் நீண்டு, கடந்து போகாமலிருந்திருக்கலாம்.
  • அடர்மரங்களை எல்லாம் அழித்துக் கிளம்பிய அந்த கல்லூரி வளாக மூலையில் ஒற்றை நெட்லிங்க மர உச்சியிலிருந்து... எழுத்தால் நிரப்ப இயலா ஓசையில் கூவுகிறது அந்த மணிப்புறா.
  • நேத்து பிரபல தொலைகாட்சில ஒரு நிகழ்ச்சி....
    பல பிரபலங்கள் ! கலந்துகிட்ட நிகழ்ச்சி...
    அவர்களிடம் நிகழ்ச்சி நெறியாளர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா...?
    "முக்கோணத்துக்கு எத்துனை கோணம்". இந்த கஷ்டமான கேள்விக்கு
    அந்த பிரபலங்கள் மிச்சரியா !! "மூணு கோணம்" நு பதில் சொல்லிட்டாங்க...
    உடனே சுத்தியிருந்த பார்வையாளர்கள் எல்லாம் ஒரே கை தட்டல்.
    அப்புறம் ஏன் நாம் அப்டியே இருக்க மாட்டோம்...
  • விஞ்ஞானி என்று அறியப்பட்ட சி.என்.ஆர். ராவ்.
    பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர். ராவ். அரசியல் வாதிகளை முட்டாள்கள் என்று சொல்கிறார்...
    அதற்க்கு நீங்கள், அவர் ஏதோ புரியாமல் பேசுகிறார் என்கிறீர்கள்.
    இது தானா உங்க டக்கு...
  • உனக்குள் இருக்கும் வரை அது ரகசியம் தான்.
  • வேற்றுக்கிரகவாசி ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று.
    எனக்கும் அவனுக்குமான உரையாடலின் முதல் வார்த்தை, "என்ன சாப்டிங்க..."
  • பெண்கள் மீதான குடும்ப வன்முறையின் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, அது இன்னும் குறையவில்லை என்பதை பல தொலைக்காட்சி நிகழ்சிகளின் மூலம் பார்க்க முடிகிறது.
  • சிக்கல் நிறைந்த உளவியலை உடைக்கும்போதெல்லாம் ஒரு மிருகத்தின் சம்பட்டியடி பலமாகவே விழுந்துவிடுகிறது.
  • ரிமோட் கையிளில்லாமல் சன் டிவி பார்ப்பவர்கள் கல்லுளி மங்கர்களாக கருதப்படுவர்.
  • facebook பயன்பாட்டாளரை MOBILE, WEB ன்னு எழுத்தால தனித்தனியா காட்டுது chat list ல.
  • மூன்று வருடங்களாக படுக்கையிலிருந்த அம்மாவை பார்த்துக் கொண்டதற்காக பெரியண்ணன் தன் தம்பிக்கு கொடுத்த தொகை, பத்......தா...யிரம் ரூபாய்.
  • நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லியதால்
     நீ நானாகிறாய்.
  • விசயத்தை செல்லத்தொடங்கினான்,
    பேசத்தவர மட்டார்,
    பொறியில் படிப்பு ,
    அவர் சேர்வாக அமர்ந்தார் ,
    அங்கே பேய் சேர்ந்தார்.
    அவர் ஒரு புதிய தொனியில் கோட்டார்.

     இப்டிலாம் படிக்கிறேன்.
  • அவன கொண்ணு....
    அவங்குடும்பத்த அழிச்சி...
    அந்த குடும்பத்துல இருக்க ஒருத்தர கூட நிம்மதியில்லாம நடுத்தெருவுல நிறுத்துற அன்னிக்கி தான் எனக்கு நிம்மதியாவே இருக்கும்...

     # தமிழ் சீரியல் கத்துக்குடுக்கும் பாடம்.
  • சுமைகூடி கடந்த நிமிடங்களுக்கு மத்தியில்
    எங்கிருந்தோ எடை குறைக்க வந்த அந்த
    எதிர்பார்த்தும், எதிர்பாரா ப்ரியம்...
    காட்டிக்கொள்ள விரும்பாத அந்த அக்கறை .
    சோர்வுறும்போதெல்லாம் தட்டியெழுப்பிய அந்த எழுத்துக்கள்.
     எங்கும் தொய்வை திணிக்காமல் நகர்த்திச்செல்கிறது.
  • பொடி தோசைக்கு புதினா சட்னியும், தேங்காய் சட்னியுமாக துணைசெய்தபோது, பிரபல செய்தி சேனலில் "ஆந்திராவில் மழைக்கு வாய்ப்பு" என்ற செய்தி...
    அப்படி என்ன வாய்ப்பளிக்க போகிறார்கள்... ஆந்திராவில்.
    தமிழகத்தில் செய்யாத கவிதையை விடவா வாய்ப்பளித்துவிட போகிறார்கள் அந்த மழைக்கு...?
     சத்தியமாக பேயோன் எனக்குள் இல்லை.
  • செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள்.
     அடக்கி வாசிங்க விஞ்ஞானிகளே..
  • நீங்கள் உதறிய நிலைத்தகவல்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவில் Like or Comment வரவில்லை என்றால்... எங்கோ நான்கு மணிநேர மின்வெட்டு அமலில் இருப்பதாக கொள்ளவும்.
  • விஸ்வநாதன் ஆனந்த் ஜி... சீசன் சரியில்ல. ஒரு crocin போட்டுட்டு விளையாடுங்க.
  • என்னங்க.... வரும்போது சால்ட் உப்பு ஒரு பாக்கெட்டும், கல்லு உப்பு ஒரு பாக்கெட்டும் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க... # எங்கேயோ கேட்ட குரல்.
  • இன்னும் ஒரு மாதகாலத்திற்கு தினசரி, தினசரி கிழிக்கும் வேலையை இல்லாமல் செய்துவிட்டாள் ஒரு பூனை பூம் பூம்.
  • பத்து ரூபாய் எடுத்துப்போய் நாடார் கடையில் 50 தேங்காய் எண்ணெய், 2 ரூபாய்க்கு பொட்டுக்கடலை , 1 ரூபாய்க்கு தேங்காய் சில், ஒரு பொன்வண்டு சோப்பு வாங்கிட்டு பாக்கி காசும் வாங்கி வந்த கனவு ஒன்றை நேற்று இரவு கண்டேன். கனவு தான் காண முடியும்.
  • ஓர் ஊமைத்தாயின் தாலாட்டுக்காக விழித்துக் கிடக்கிறது என் உறக்கம்.
  • ஒரு கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதென்பதும், கௌரவிக்க வேண்டும் என்பதும் அவன் வாழும் காலங்களில் கொடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, அவன் இறந்த பின் சிலை வைப்பதும், பின்பு அதை அகற்றுவதும் மிகக்கேவலமான சிந்தனை.
  • "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்திற்கு பின்னரான மிஷ்கினின் வார்த்தைகளில் கர்வம் கூடியிருக்கிறது.
  • வலி தாங்கமுடியாத பசு, தெளிவான வார்த்தையில் "அம்மா..." என்கிறது.
  • இந்த நீதி மன்றங்கள் இப்படி பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றன. செல்வாக்கு உள்ள மனிதர்கள் எதையும் சந்திக்க தயாராகவே இருப்பார்கள், இருக்கிறார்கள். இப்போதைக்கு ஒரு டீ சொல்லு மச்சி.
  • யோவ்.... ஒரு நாளைக்கு 24 மணி நேரம்யா.... ரொம்ப கஷ்டம். நீ வேணா ட்ரை பண்றியா...
  • facebook password மறந்து போச்சுன்னு அவனோட நண்பன் பத்துபேருக்கு போன் பண்ணி கேட்டு login பண்ற நண்பனெல்லாம் என் கூட இருக்கதாலதான் நானெல்லாம் சிரிக்கிறேன்.
  • ஒரே சளியா இருக்குன்னு சொன்னேன்...
     நண்பன் சொல்றான் wills ல vicks தடவி அடி சரியாகிடும்னு...நீங்க சொல்லுங்க... என்ன பண்ணலாம்.
  • அம்ருத வர்ஷினி ராகத்துல பாடினா மழை வருமாமே...
     பாடவா...
  • அவ்வப்போது வந்து ஒரு like விதை இட்டுப்போ...
     அப்போதான் எனக்குள் வார்த்தைகள் முளைவிடும். # முனியம்மாவுக்கு மட்டும்.
  • கரண்ட் போகப்போகுது.....
     நா log out பண்ணிட்டேன்.
  • வலுவிழந்த வாகனம்
    வறண்ட சன்னலோரங்கள்
    சுவாரஸ்யம் இல்லாத பயணம்
    இடையிடையே ஏறியவர்கள்
    இடையிடையே இறங்கியவர்கள்
    போகும் தூரம் எக்கணம் குறையும்
     என்ற எதிர்பார்ப்பில்.
  • கொட்டும் மழைத்துளிகளால்
    சிதரிக்கொண்டே இருக்கும் நிலாவை
     உள்ளங்கையில் சேர்க்கத் துடிக்கிறேன்.
  • அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...# இந்த ஆசிரியருக்கெல்லாம் பொம்பள புள்ள இருந்தா எப்டி அதுங்க மூஞ்ச பாப்பாங்க.
  • ஓ... நீங்க எழுதுவிங்களா....
    எப்போவெல்லாம் எழுதுவிங்க...
     சும்மாருக்க டைரியும், தீராத மையும் வீணா போகுமேன்னு அப்போ அப்போ எழுதுவேன்.
  • USB port ல எதுவுமே செருகல USB Detected. Scan the driver for viruses now ன்னு கேக்குது. பேயா இருக்குமோன்னு பயமா இருக்கு.
  • மிகக்குறைவான நேரமே இருப்பதால் இலக்கை நிர்ணயிப்பதில் குழம்பி, இருந்த நேரத்தையும் வீணடித்து, எங்கேயோ செல்கிறது இந்த பாதை.
  • கற்பனையாக எழுதுவதை கூட பொய் எழுதாதே எனும் மனநிலையை எப்படி சீர்செய்யமுடியும்.
  • டாஸ்மாக் கும், ஃபேஸ்புக் கும் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

Friday, November 29, 2013

ஓர் நடை பயணத்தில்

நடந்தாலென்ன ?என்று
நட்புமுகம் பார்த்து வினவிய மறுகணம்
முகம் முழுக்க பச்சை சாயம்
பூசிக்காட்டினான்.

எப்போதும் நாணம் கொண்டே
வளைந்து நெளிந்தோடிக்கிடந்த
சாலைப்பயணம் .

வலப்புறம் உள்ளடங்கி
ஓங்கி வளர்ந்து நின்ற பள்ளியில்
படித்த பருவங்களை
ஏக்கத்துடன் அசைபோட்டு முடிக்கையில்
போதுமான இடைவெளியற்றிருந்த
அரசு மதுக்கடையில்
ஆடை கலைந்தவர்கள் கூட்டம்
அநாகரீக வார்த்தைகளை
அள்ளி வீசிக்கொண்டிருந்தது .
வெட்கப்பட்ட காதுகளை
மூடிக்கொள்ள உத்தரவிடாத மூளை
முந்திச்செல்ல கால்களை பணித்தது .

அலைந்து திரிந்த கண்களுக்கு
அடுத்ததாய் அகப்பட்டது
அய்யாவு "டீ" கடையில்
வெட்டவெளியில் பிரமீடுகளாய்
தூசுதின்ற பலகாரம் .
விபரீதம் புரியாமல் பசிப்பிணி போக்கமட்டும்
எடுத்துக்கொண்டிருந்தனர்
துப்புரவு பணியாள தோழர்கூட்டம்.

சற்றே நாணி த்திரும்பிய சாலை முக்கில்
கணபதி மரப்பட்டறையில்
கோங்கு மரம் கூர்போட்டுக்கொண்டிருந்தான்
நாசிக்கவசம் அணியாத சுந்தரம் .

கவலை கப்பிக்கொண்டு
கடிவாளம் கட்டிக்கொண்டு நடந்த கண்களை
கடிவாளம் கிழித்த செயற்கை மின்னல் தாக்கியது !
ஆம் , “பெர்பெஃக்ட்“வெல்டிங் வொர்க் ஷாப் இல்
பாதுகாப்புக் கண்ணாடி அணியாமல்
சிறிதொரு பத்தவைப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தான்
தொழிலாளி சண்முகம்.
ஒய்யார நாற்காலியில்
கூலிங் கிளாஸ் அணிந்தவாறு முதலாளி .

மூன்று பேர் பயணித்த
ஒற்றை இருசக்கர வாகனத்தை மறித்த
போக்குவரத்துக் காவலர் ஒருவர்.
அரசு விதிக்கும் அபராதத்தொகையை கட்டினாலுனக்கு
கட்டுபடியாகாதென்ற பேச்சுவார்த்தையில் சமரசம் கொண்டு
சகாயம் செய்துகொண்டிருந்தார்கள் .

இரண்டு வேலை உணவருந்தும்
தட்டுவண்டி இட்லி கடைக்காரரை
போக்குவரத்திற்கு இடையூரென்று
திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்
காவலரொருவர்.

தாளமுடியாத தலைவலி தளர்த்திட எண்ணி
மெடிக்கல் ஷாப் படியேறினேன்.
தலைவலி மாத்திரை கேட்டு
தண்ணீர் எடுக்க குனிந்து திரும்பினேன் !
கண்ணாடியில் கவிந்திருந்தது

ஸ்ப்ரிட் நனைத்த காட்டன் துணியில்
ஃபிசிசியன் சாம்பிள் நாட் டூ பீ சோல்டு -ஐ
அழித்துக்கொண்டிருந்த முதலாளியின் முகம் .

அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில்
கச்சிதமாய் அடைக்கப்பட்ட போதை லாகிரிகள்
பெட்டிக்கடையில் மட்டும்
பயந்து பயந்து பிரசவமாகிக்கொண்டிருந்தது!!
கூடவே கொட்டைஎழுத்தில்
புகைத்தல் உடல் நலத்திற்கு கேடென்று பதியப் பட்டிருந்த
வெண் சுருட்டும் .

போர்க்குற்ற செய்தியை
பெட்டிசெய்தியில் கூட
தேடிக்கிடைக்காத ஏமாற்றத்தில்
கார்ப்பரேட் கம்பெனி தயாரித்திருந்த
திரைப்பட விளம்பரத்தையும் .
கொட்டை எழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த
ஐ .பி .எல் கிரிக்கெட் செய்தியையும் ,
12 -ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்த
மந்திரிகள் பட்டியலையும்.
கொடுத்த காசிற்காய் வாசித்துக் கொண்டிருந்தார்
சமூக ஆர்வலர் ஒருவர் !!

அய்யாவு "டீ" கடை பலகாரமும்
தட்டு வண்டி இட்லி கடையும்
இங்கே கொஞ்சம் முரண்பட்டே
சொல்லப்பட்டிருக்கும் .

உற்று நோக்கினால்
வாழ்தலே முரண்தான் இங்கே
முரண்பட்டுநிற்கும் சமூகத்தில்
வாழ்தலின் கட்டாயமும் முரண்தான்.

Thursday, November 28, 2013

நன்றி சொல்லிப் பறந்த காகிதம்

ஏதும் எழுதப்படாமல் உபயோகமற்றிருப்பதாக
சலசலத்துக் கிடந்தது அந்தக் காகிதம்.
எதையோ எழுதவேண்டும் என்றெண்ணிய எனக்கு
அந்தக் காகிதம் கண்ணில் பட்டது.

கையிலெடுத்ததும் மொட மொடவென
சிரித்து சிலாகித்துக் கொண்டது அக்காகிதம்.

கவிதை என்றெழுதி ஒரு தலைப்பிட்டதும்
காற்றை இழுத்து தன் மேல்முனை இரண்டையும்
சட்டைக் காலரைப் போல் கம்பீரமாக தூக்கிவிட்டுக் கொண்டது.

எழுத்தாணியின் கூர்முனை தீண்டலுக்கு அது
கொஞ்சமும் அஞ்சியிருக்கவில்லை - மாறாக
தன் மேல் எழுதப்படும் வார்த்தைகள் யார்மீதும்
குத்தீட்டியாய் பாய்ந்து விடாமலிருக்க வேண்டுமென அஞ்சியது.

முதல் பக்கத்தின் முடிவில் குத்தீட்டியாய் எழுதப்பட்ட ஒரு
வார்த்தையை திருத்தும்வரை மறுபக்கம் மாற மறுத்தது அக்காகிதம்.

தமிழின் வார்த்தைகளை எழுதும் போதெல்லாம்
சிலாகித்த காகிதம்.
மாற்றுமொழி கலந்த வார்த்தைகள் எழுதிய போதெல்லாம்
எழுத்தாணியின் கூர்முனைக்கு வார்த்தைகளை அனுப்ப மறுத்தது

எழுதியதை கணினியில் தட்டச்சிட்டு
இனி இக்காகிதம் உபயோகமற்றதென வீசி எறிந்தபோது

இப் பேரண்டத்தில் பேசப்படாத மொழியில்
நன்றியைத் தன் வாலால் சொல்லிவிட்டு ஓடும் நாய் போல
பூமியில் புரண்டோடியது அக்காகிதம்.

Tuesday, November 26, 2013

எது அது


தேனடையை சுற்றியிருக்கும் ஈக்கள் போல அந்த அரளி மர நிழலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை சுற்றி மஞ்சள் நிறத்தில் பூக்கள் உதிர்ந்து கிடந்தது. எப்போதும் போலவே சுப்பு தனது அலுவலகம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச்சென்றான்.

அப்போது அந்த மரப்பொந்தின் கூட்டுக்குள்ளிருந்து தாய்க்குருவி தன் குஞ்சுகளை விட்டு வெளியில் வந்து, பறந்து பறந்து கிளைகளில் அமர்வதும், பின்பு கூட்டுக்கு செல்வதுமாகவே இருந்தது.  இதை பார்த்துக் கொண்டிருந்த சுப்பு, இரைதேட விட்டுப்பிரியும் போதே நிரந்தர பிரிதலுக்கான  ஒத்திகையை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டான். விட்டுப் பிரிதலை விட அதற்கான ஒத்திகை பார்ப்பதென்பது அதிக வலியாகவே அந்த தாய்க்குருவிக்கும் தெரிந்திருந்ததில் சுப்புவுக்கு ரொம்பவே ஆச்சர்யம்.

சுப்புவும் சில நாட்களாக தன் குடும்பத்தை நிரந்தரமாக விட்டுப் பிரிவதற்கான ஒத்திகையைபார்த்துக் கொண்டிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கான மன உளைச்சல்
அவனை அவ்வாறு தூண்டிக்கொண்டிருந்தது.




கலையாத படிமம்

மிச்சமிருக்கும் கரும் படிமங்களையும் உதறி விடிந்த
இரவுப் போர்வைக்குள் கலையாத படிமமாய்...

ஒரு ஒண்டிக் கிடந்தவனின் கனவு
ஒண்ட இடம் தேடியவனின் வெற்றி.
புசித்துக் கிடந்தவனின் கனவு
பசித்துக் கிடந்தவனின் தோல்வி.
தூக்கம் அலைய விட்டவனின் கனவு
தூங்கிப் போனவனின் வெற்றி.
கூடிக் கிடந்தவனின் கனவு
துணை தேடியவனின் தோல்வி.
துணை கிடைத்தவளின் கனவு
வலி தாங்க முடியாதவளின் வெற்றி.
விக்கிக் கிடந்தவனின் தாகம்
சிறுநீர் கழிக்க முடியாதவனின் விரக்தி.
வம்பு நிறைந்த வார்த்தைகள்
உணர்ச்சியில்லா மனிதர்கள்
ஒருவருமில்லா சாலை
முக்காடுகளால் நிரம்பிக் கிடந்த நடைபாதை
கயவர்களின் கத்தி முனை
நீண்டு நடந்திருந்த ஒற்றைப் பாதைச் சுவடு.

Monday, November 25, 2013

நான் பெற்றெடுக்காத என் மகளுக்காக

அந்தரக் கூத்தாடும் ஆலவிழு தொன்றை
தன்னுடன் கலந்து ஸ்பரிசித்துக் கொள்ள 
கொஞ்சம் கொஞ்சமாய்
மீட்டிக்கொண்டிருக்கிறது காற்று.

அன்பும் அக்கறையுமாக ஊற்றி வளர்த்த
தாய் மரத்தின் கிளை விழுது வேறுபக்கம் அசைந்து
சுவாசம் கொள்ளும்போது

தாய் மரம் தன் இருப்பின் மீதான
நிலைப்பாட்டிலிருந்து
தன்னை மீட்டுக்கொண்டு .

மேலும் மேலும் அன்பும் அக்கறையுமாகவே
ஊற்றி ஊற்றி கிளை விழுதினை பத்திரமாக
மண் பிடித்துக் கொள்ளச்செய்கிறது.

Saturday, November 23, 2013

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே...

விஸ்வநாதன் ஆனந்த்... இந்திய சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ராஜீவ் காந்தி கேல்ரத்னா, மற்றும் அர்ஜுனா விருது. மற்றும் உலகின் ஆஸ்கார் போன்ற பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

சதுரங்க விளையாட்டில் ரஷ்யர்களின் ஆதிக்கத்தை உடைத்து, சதுரங்க உலகின் ராஜாவாக ஐந்துமுறை முடிசூடிக்கொண்டவர், ஆறாவது முறையாக அந்த பட்டத்தை தனது சொந்த மண்ணிலேயே, நார்வே நாட்டை சார்ந்த மேக்னஸ் கார்ல்சனிடம் 6.5 புள்ளிகளுடன் தவறவிட்டுள்ளார்.

உலகளவில் சதுரங்க விளையாட்டில் நகர்த்தமுடியாத ராஜாவாக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.

கடந்த காலங்களில் விஸ்வநாதன் ஆனந்திடமே உதவியாளராக இருந்த கார்ல்சன், அவரது விளையாட்டு நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து இன்று அந்த சிங்கத்தின் குகைக்குள்ளேயே அந்த சிங்கத்தை சாய்த்திருப்பது விஸ்வநாதன் ஆனந்துக்குமே கூட அதிர்ச்சியாக இருக்கலாம்.

விளையாட்டுகளில் வெற்றியும் தோல்வியும் இரு முனைகள் தான். இருப்பினும் எந்த ஒரு வீரனும் தான் தோல்வியுறுவதை விரும்புவதே இல்லை. தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்த விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்த தோல்வி சற்றே மன உளைச்சலை கொடுத்திருக்கும்.

அதுவும் தனது சொந்த மண்ணில் தனது ரசிகர்களையும், மக்களையும் தனது தோல்வி  சோர்வடைய செய்துவிட்டதாக கூட அவர் உணரலாம். வயதுமூப்பின் காரணமாக தன்னால் சிந்திக்க முடியவில்லை என்று கூட உணரலாம். இதெல்லாம் சரி என்பது போலவே ஆனந்தின் ஆட்ட நகர்த்தலும் இருந்திருக்கிறது.

இப்போட்டியில் 7 சுற்றுகள் டிராவில் முடிந்திருக்கிறது. 3 சுற்றுகளில் ஆனந்த் தோல்வியை தழுவியிருக்கிறார். இத்தொடர் முழுவதும் கார்ல்சன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருப்பதாக நிபுணர்கள் சொன்ன கருத்தை ஆனந்தும் ஆமோதித்திருக்கிறார்.

மேலும் இதற்க்கு முன்னரான உலக சாம்பியன் போட்டிகளில் ஆனந்த்துடன் மோதிய வீரர்கள், "இந்த போட்டிகள் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. அவ்வளது எளிதாக என்னால் காய்கள் நகர்த்தலை கையாள முடியவில்லை. ஆனந்த் உடனான இந்த போட்டி ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது .” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவுமே மேக்னஸ் கார்ல்சன் சொல்லவில்லை.

ஆனந்திடம் விளையாடியது சற்று சிரமமாகவே இருந்தது என்று பெயரளவில் மட்டுமே கார்ல்சன் சொல்லியிருந்தாலும். ஆனந்த் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். சதுரங்க விளயாட்டில் இது நிகழ்வது தான். என்றாலும், ஐந்து உலக சாம்பியன் பட்டங்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருக்கும் ஆனந்த் என்ன தவறு செய்தார் என்பதை பின்னாளில் வரும் போட்டிகளில் திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஐந்து உலக சாம்பியன் பட்டம் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க விளையாட்டு அனுபவங்களை கூட வயதாக அடையாத மேக்னஸ் கார்ல்சன் , விளையாட்டின் போது எந்த வித பதர்ஷ்டமுமே இல்லாமல் மிக சாதாரணமாகவே காணப்பட்டார்.  அவரது இந்த வெற்றி அவரது வாழ்வில் மிகமுக்கியமான வெற்றியாகவே இருக்கும். இன்னும் 20 வருடங்களுக்கு  யாரும் அசைத்துவிட முடியாத சதுரங்க ஆட்டக்காரராக திகழ்வார் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறது.

திறமையும் உழைப்பும் எங்கிருந்து வெற்றியடைகிறதோ அதை நாம் தூரநின்று ஊக்கப்படுத்தவும்,
உற்சாகப் படுத்தவும் வேண்டும். இது நாம் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. அந்த வகையில்
மேக்னஸ் கார்ல்சனுக்கு நமது வாழ்த்துக்கள்.

பல பட்டங்களை வென்று அனுபவங்களாக குவித்து வைத்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்த்
அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவரை உற்சாகப்படுத்துவோம்.

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே... சிறிது ஓய்விற்குப் பின் மீண்டும் வாருங்கள். மீண்டு வருவீர்கள்.