இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது: மகேந்திரன்
By தஞ்சாவூர்,
First Published : 21 December 2015 03:15 AM IST
இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி. மகேந்திரன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை இலக்கிய வட்டத்தின் முதலாமாண்டு நிறைவு விழா, எழுத்தாளர் லஷ்மி சிவக்குமார் எழுதிய இப்படிக்கு... கண்ணம்மா என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
இலக்கியம்தான் மனிதனை மேன்மைப்படுத்துகிறது. மனிதன் தன்னுடைய உணர்வுகள், பேராசை, அழிவு எண்ணங்கள், உலகைப் புரிந்துகொள்ள முடியாத மடைமை போன்றவற்றை அறிவதற்கு இலக்கியம் முக்கியக் கருவியாக இருக்கிறது.
இலக்கியம் படிப்பது ஏதோ பொழுதுபோக்குக்கானது என நினைப்பது தவறு. ஒரு கண்ணாடி முன் நம்மை நாமே பார்த்துக் கொள்வது போன்றது இலக்கியம்.
நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு இலக்கியம் பயன்படுகிறது. நாம் மனிதனாக இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புவது இலக்கியம்.
நாவல் வாசிப்பு மிகவும் முக்கியமானது. மருத்துவர்களுக்கென செய்முறைகள் உள்ளன. பொறியாளர்கள் எவ்வாறு கட்டடம் கட்டுவது என்பதற்கும் வரையறைகள் இருக்கின்றன. அதேபோல, நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. நாவலில் மனிதன் தன் உணர்வை அல்லது சமூக நிகழ்வுகளை எழுதுகிறான்.
வாசிப்பு மூலம் நாம் என்ன கற்கிறோம் என்பது முக்கியமானது. நம்முடன் உரையாடுதல், சண்டை போடுதல், மகிழ்ச்சி தருதல், புரியாத விஷயங்களிலிருந்து மீட்டெடுத்தல் போன்றவை நாவல் வாசிப்பு மூலம் கிடைக்கிறது.
நாவலாசிரியர் இந்த நாவலைச் சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதியுள்ளார். சமகாலத்து விஷயங்கள் பலவற்றை பதிவு செய்துள்ளார். இந்த நாவல் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் நம்மை இழுத்துச் செல்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஏற்படும் பிரச்னைகளை பேசுகிறது என்றார் மகேந்திரன்.
தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலர் இரா. காமராசு தலைமை வகித்தார். மருத்துவர் ராதிகா மைக்கேல், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், மதிமுக தேர்தல் பணிச் செயலர் வி. விடுதலைவேந்தன், எழுத்தாளர் பசு. கெளதமன், தஞ்சை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் செ. சண்முகசுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி. துரை. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/12/21/இலக்கியம்-மனிதனை-மேம்படுத்/article3188379.ece
No comments:
Post a Comment