Thursday, July 28, 2016

'இப்படிக்கு... கண்ணம்மா' நாவல் குறித்து எழுத்தாளர் இளஞ்சேரல் அவர்களின் விமர்சனம்

லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..”

லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..
சுயசரிதையும் திரைக்கதையுமாக ஒரு நாவல்
         
தமிழில் நாவல் வடிவங்கள் நவீன வாசிப்பு முறைக்கு ஏற்பவும் விஞ்ஞான வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் மாறிக் கொண்டு வருகிறது. தமிழில் வாசிப்பு முறைகள் உச்சத்திற்கு இருந்தகாலம் எழுபதுகளும் எண்பதுகளும். இன்றும் வாசிக்கிறவர்களுக்காக எழுதப்படுவதாக அன்றி படைப்பாளியின் தனித்துவத்தின் வெளிப்பாடுகளை அறிவிப்பதற்கும் நாவல் பயண்படுகிறது.  பிக்சன் நான் பிக்சன் லீனியர் நான் லீனியர் விஞ்ஞான அடிப்படையிலான படைப்புகள் என்பதாகவும் வந்து கொண்டேயிருக்கிறது. தொடர்கதை அல்லது தொடர்நாவல் என்னும் பகுப்பிலும் நாவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பல தேசங்களின் நிலங்களைப் பேசுவதாக கலாச்சார விழுமியங்களைப் பதிவு செய்வதற்காகவும் நாவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுத வாய்த்த நேரம் வரையிலும் நாவல் வகைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்களை அறிந்திருக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகளேனும் உண்டு. பொதுவாக குழுயமைவாதங்களால் நாவலின் தன்மைகள் பழிக்கப்பட்டும் தரம் திணிக்கப்படுவதாகவும் உள்ளது. ஒரு குழுவிற்கு நாவல் சிறப்பாக இருக்கிறது என்னும் பதிவு வந்துவிட்டால் அதற்கு அடுத்த எதிர்க்குழுவின் ஜால்ராக்கள் உடனடியாக “அது ஒன்றுமில்லை..குப்பை..ஐயோ...உன்னை யெல்லாம் எவண்டா எழுதச் சொன்னான்..“என்பார்கள்..தமிழச்சூழலில் முன்னணியில் இருக்கிற எழுத்தாளர் என்பவரின் சமீபத்திய படைப்புகளை வாசித்திருப்பவர்கள் கூட இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று நூலின் விலை மற்றும் அப்படைப்பாளி  சார்ந்த குழு..
       பிரச்சனைகள் இருந்தவண்ணமே இருப்பினும் எழுதுகிறவர்கள் நாவல் எழுதுகிறவர்கள் படைப்பிலக்கியத்திற்கு பாடுபடுவர்கள் இயங்கிக் கொண்டிருக்கவே செய்கிறார்கள். சமகாலத்தின் ஒரு சில குழுவாதிகளிட மிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக இலக்கியத்திற்கு யாரும் வரவில்லை. எப்படியிருந்தாலும் எந்த திசையின் குழுவிற்கும் ஒரு சாராருக்கும் பிடித்தமான படைப்பை எந்தப் படைப்பாளியும் தரப் போவதில்லை. நான் என் அனுபவத்தை எழுதுகிறேன்..அதற்கும் நான்கு வாசகர்கள் இருப்பார்கள் எதிர்காலத்தில் வரலாம்.வாசிக்கலாம் என்னும் உந்துதலில் சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறான். இப்பொழுதும் கூட “வரப்பெற்றோம்என்னும் பகுதியில் பல நூற்றுக் கணக்கான நூல்கள் வெளிவந்தமிருக்கின்றது. உலகம் மிகவும் பெரியது. சிற்சில குழுக்கள் அடிப்படை வசதிகளில் தங்கள் வாழ்வில் செழுமையான வாழ்வு முறைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எழுத்தும் ஏழ்மையும் சிறுபாண்மையினரின் பெண்களின் எழுத்தும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டேயிருக்கிறது.
          தமிழில் தற்காலத்தில் எழுதுபவர்கள் இரண்டு விசயங்களின் பால் முனைப்புடன் எழுதுகிறார்கள். தன்காலத்தை தன் பண்பாட்டுக் கூறுகளை,நவீன வாழ்க்கையின் போக்குகளின் வழியாக தன் மக்களின் எதிர்காலத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற படைப்புகளை எழுதுகிறார்கள். இந்த விஞ்ஞான அறிவில் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முடியாது அப்படியே அதற்காக இந்த மனித குலத்தின் வளர்ச்சியும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற நிலை, எல்லாருக்கும் எல்லாமுமாக பொதுப்பங்கீட்டு முறைகள். இயற்கை வளங்கள் பாதுக்கப்படவேண்டும். நீர்நிலைகள் அதன் வழியாக காணுயிர்களின் பாதுகாப்பு, தன் இனவிருத்தி உள்பட பல் வேறு மரபுக் கூறுகளை உள்ளடக்கிய படைப்புகள். அடுத்த விசயம் தன் தனிப்பட்ட படைப்பு வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சி புகழ் பணம் வாழ்க்கை முறையில் வசதிகள் உள்ளடக்கிய சுழற்சி முறைகள் குறித்த எழுத்துக்கள் என்பதாக. நேரடியாகவே சொல்வதென்றால் திரைப்படத்துறைக்குள் நுழைவதும் அதன் மூலமாகத் தன் கருத்துக்களை தன் நவீன சிந்தனைகளை, படைப்பாக்க முயற்சிகளை மேம்படுத்துவது என்கிற முனைப்புகள் என்பதாக..
        தமிழில் கலை இலக்கிய முயற்சிகள் அனைத்துமே சினிமா எனும் மாயாஜால வாழ்க்கைக்கு என்று பேச முடியாது. ஆனால் சினிமாத் துறையின் மீதுள்ள பற்று என்பதே முக்கால்வாசிப் பேரைக் கலைஞர்களாக்கிக் கொண்டிருக்கிறது எனலாம்..காரணம் புகழும் பணமும் மிக எளிதில் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுவதற்கான வாய்ப்புகள். தங்களுக்குப் பணம் கூட வேண்டாம் டைட்டில் கார்ட்டில் என் பெயர் வந்தால் போதும் என்று தன் உழைப்பையெல்லாம் தன் தனித்துவச் சிந்தனைகளையெல்லாம் குடிக்கும் பசிக்கும் அறைவாடகைக்கும் விற்கிற மகத்தான திறமைசாலிகளை எனக்குத் தெரியும். சென்னையிலிருந்து திரும்பி வந்தவர்களிடம் உள்ள நாவல்கள் எத்தனை தெரியுமா..தோல்வியின் எல்லாத் தழும்புகளையும் வைத்திருக்கிற ஒருவன் தன் கிராமத்தில் எப்படி பேனா பிடித்து எழுதுவான். எனினும் இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிற படைப்பாளிகள் தொடர்ச்சியாக எழுதியபடியே தங்கள் சினிமா முயற்சிகளைத் தொடர்ந்து வருவதையும் அறிவேன். இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி நிலையில் வெத்து வேட்டுகளும் டுபாக்கூர்களும் சினிமாவில் கால் வைக்கவே முடியாது என்பதும் திறமையற்றவர்களால் எந்த நிலையிலும் வெற்றி பெறமுடியாது என்பதே இன்றைய சினிமா சூழல். இது ஒருவகையில் வரவேற்கத்தகுந்த செய்தியே. சிறந்த படைப்புகளைத்திருடுதல், கதைகளைத்திருடுதல். தலைப்புகளைத் திருடுதல். தங்கள் அறைநண்பர்களின் மிகச்சிறந்த கதைக்கருக்களைத் திருடிக் கொள்ளுதல்,திரைப்படச் சூழல்களிலும் ஒரு இளம் கதாநாயகனை வைத்து அவரைச்சுற்றி இருபது பேர் ஜால்ரா அடித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்திற்காக மற்றவர்களின் சிறந்த படைப்புகளைத் தங்களுடையது என்று சொல்லி மிக சாதுர்யமாக ஏமாற்றுதல். ராயல்டியை ஏமாற்றுதல் என்னும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.
          திரைப்படத்துறையை மனதில் வைத்து எழுதப்படும் படைப்புகள் அதிகம்தான். கலை இலக்கியச் செயல்பாட்டின் அடுத்த படி சினிமாதான் என்னும் கருத்து ஆழமாக வேறூண்றி விட்டிருக்கிறது நம் படைப்பாளர்களிடம். இதற்குக் காரணம் சமகாலத்தில் புதிய நவீன சிந்தனையாளர்களின் வரவும் அவர்களுடைய இலக்கிய நண்பர்களுடனான உறவுகளுமே இந்த ஆசைக்குக் காரணம் என்றால் மிகையில்லை.
          ஒருவகையில் லஷ்மிசிவக்குமாரும் அந்த நிலையிலேயே தன் எழுத்து வாழ்க்கையைத் துவக்கியிருக்கிறார். சினிமாவிற்கான முயற்சிகள் என்பது தீண்டத்தகாதவை அல்ல. எந்த எழுத்தாளனுடைய படைப்பும் எழுத்தும் மிகப்பரவலான அறிதல்களுக்குள் தன் சிந்தனை,படைப்பு சென்று சேரவேண்டும் என்று நினைப்பதில் நூறு சதவிகிதமும் தவறில்லை. நான் அப்படியான முயற்சிகளை முழுமனதுடன் வரவேற்கிறேன். இந்தக்கட்டுரை எழுதும் போதும் கூட பலருடைய படைப்புகள் சினிமாவாக மாறிக் கொண்டிருக்கிறதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக “விசாரணை” இரா முருகவேளின் மிளிர்கல்.“ மற்றும் மு.சந்திரகுமாரின் “கட்டுதளையினூடே காற்று” இன்னும் பல படைப்புகள் முதல் கட்ட தயாரிப்பு முறைகளிலிருக்கிறது.
“இப்படிக்கு கண்ணம்மா..“ நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று நாவலாகவும் திரைக்கதை வடிவமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தன் வாழ்வில் ஏற்பட்ட விபத்தொன்றையும் தன் முகநூல் நட்புத் தோழியுடன் ஏற்படும் காதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட நகர்வுகளுடன் நகரும் நாவல். பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலையையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த நாவல் தமிழ்நாடு-இலங்கை- தமிழினப்பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களைப் பேசுகிறது. தமிழில் முன்பு அறிந்த கே.பாலச்சந்தரின் “புன்னகை மன்னன்“ படம்தான் மிக அதிகமாக சென்சாருக்குள் சிக்கியபடம். மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால், மரியான், நந்தா, போர்க்களத்தில் ஒரு பூ உள்பட பல படங்கள் இலங்கை-தமிழ்நாடு அகதிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறது.
     திரைக்கதை வடிவங்களில் பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பை அப்படியே திரைமொழியில் படம் எடுத்து விடமுடியாது. அந்த இடத்தில் பலதுறை தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்புடன் காட்சிகள் விரியவேண்டியிருப்பதால் படைப்பாளனின் கதை அந்தந்தப் பகுதியில் சிதிலமடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. கதைக் களனும் நிலையும் பாத்திரங்கள் உலவும் இடங்களும் மிக முக்கியமாகது. ஒரு ஒற்றை வரிக்கரு மட்டுமே மிகச்சிறந்த படைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவை சமகாலத்தின் திரைமொழி,ரசனைச் சூழல், வியாபாரம் மற்றும் நடிகர் நடிகைகளின் கால்ஷீட்களுக்குப் பிறகு அக்கதை பல வடிவங்களில் திருத்தப்பட்டு எடுக்க ஆரம்பித்த போது ஒரு கதையும்திரைக்கதையும் எடுத்த பிறகு இனியொரு கதையுமாக மாறிவிடும் நிலையேதான் சினிமா உலகின் நூற்றாண்டு கதைகளின் லட்சணம்.
லஷ்மிசிவக்குமாரும் உள்ளிட்ட நண்பர்கள் நேரடியாகவே திரைக்கதை வடிவத்துடனும் அதே நாவலை நாவல் வடிவத்துடன் எழுதுகிற பாணி சிறப்பானது.உங்களுக்கு எதுவேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம் என்பது. சினிமாவில் கதை சொல்கிற முறைகள் மாறியிருக்கிறது. காரணம் திரையரங்குகள் இப்பொழுது முப்பது சதவிகிதம்தான் உள்ளது. நான்கு காட்சிகளுக்கும் வேறுவேறுபடங்கள் திரையிடப்படுகிறது. 3ஜி 4ஜி போன்ற நெட் வசதிகள் மற்றும் டவுன்லோட் சிஸ்டங்கள் வந்த பிறகு ரிபிட்ட் ஆடியன்ஸ் என்பது முற்றிலும் வழக் கொழிந்து போய்விட்டது. மற்றபடி இருபத்திநான்கு மணிநேர சினிமாவென தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வேறு. இவைகளுக்கும் மத்தியில் சினிமாத்துறையும் அதைச் சார்ந்த பல லட்சம் தொழில்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று படம் தயாரிக்க ஆகிற செலவுகள்,வாடகை, சம்பளங்கள்,திரையரங்கு விநியோக உரிமைகள்,சென்சார் போர்ட் பிரச்சனைகள் என தீராத பெருந்துன்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமா கிறார்கள்.மிகப்பெரிய அளவில் தொழிற்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் நல்ல உறுதியான அனுபவமிக்க தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கிற சிறந்த கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குரிய தாகவே உள்ளது.
          இந்தச் சூழலில்தான் தேர்வு செய்யும் கதையும் பின்னணிக் களமும் முக்கியமாகிறது.சமூகத்தின் சென்சிடிவான பிரிச்சனைகளை எடுத்து தமிழின் முக்கியமான படமாக மாற்றலாம் என்று ஒரு கலைஞன் முனைந்தால் முதலில் சந்திக்கிற பிரச்சனை அரசியல்வாதிகளின் தலையீடும் சென்சார் போர்ட்தான். அதனாலேயே மிக சாதாரணமான படங்களை எடுக்கிறபொழுது அதில் எந்த அளவு கலாரசனையின் அடிப்படையில் எடுக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அந்தப்படம்தான் பல கலைஞர்களுக்கான வாழ்க்கை எதிர்காலம்.
லஷ்மிசிவக்குமாரின் எழுத்து நடை இயல்பாகவும் தகவல்களின் கோர்வையாகவும் உள்ளது. எதிர்பாராத விபத்தொன்றில் தனது இயல்பான செயல்பாடுகளில் தற்காலிக தடை ஏற்பட்டு விட்ட பிறகு எழுத்தும் வாசிப்பும் என நகர்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளனின் உலகம் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது. நாவலின் அத்தியாயங்களில் காட்சிகளில் இணையவெளியில் காதல்,சாட்டில் உரையாடல்,திருமண ஏற்பாடுகள், குடும்பச்சூழல்கள்,இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலவரங்கள்,தன் காதலியின் குடும்பச் சூழல்கள்,இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் என நாம் தினமும் அறிந்துகொண்டிருக்கிற நாளிதழ் செய்திகளின் பின்னணியை மிகச்சிறப்பாக நம் கண்முன் நிறுத்துகிறார். திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கான ஏற்பாட்டிலிருக்கிற படித்தவர்கள் மற்றும் சென்னையில் பல்வேறு பணியிடங்களில் பணிபுரிகிற எண்ணற்ற வர்களின் வாழக்கை அம்சங்கள் நமக்குப் புலப்படுகிறது. நாவலின் களங்கள் கிராமம், ஊர்,நகரம் பெருநகரம்,இலங்கையின் பல ஊர்களின் சித்திரங்கள் கூகுளில் தேடிக்கிடைப்பது போன்ற களங்கள் கிடைக்கிறது. கதாபாத்திரங்களின் முகங்களும் பாவனைகளும் அவர்கள் பேசுகிற இலங்கைத் தமிழும் நமக்குப் பல பிரதிகளின் வழியாக கிடைத்தவையே. ஏறக்குறை இலங்கைத்தமிழ் என்பது தமிழ்நாட்டின் மாவட்டத் தமிழ் மொழிகளில் ஒன்றாகவே அறியப்பட்டுவிட்டது. நாவலின் முழுமையான கதையையும் அதன் முழுமையான சிறப்புகளையும் சொல்லி மேற்கொண்டு நாவலுக்குள் யாரும் நுழையாத வண்ணம் செய்வது அறிமுக உரை எழுதுபவனின் வேலையல்ல என்பது யாவரும் அறிவார்கள்.
           லஷ்மிசிவக்குமார் தஞ்சைத் தரணிப் பகுதி படைப்பாளராக இருப்பதால் அவருக்கு சோழநாட்டின் தமிழுக்கு நாம் கட்டியம் கூறவேண்டியதில்லை.சைவமும்வைணவமும் பக்தி இலக்கியங்களும் நவீன இலக்கியப் பிதாமகர்களான கரிச்சான்குஞ்சு,பி.எஸ் ராமையா. தஞ்சைபிரகாஷ்,க.நா.சு,மௌனி,தி.ஜா, மற்றும் பல மணிக் கொடி எழுத்தாளர்கள் எழுத்துலகத்தைக் கட்டி ஆண்ட எழுத்துப் பரம்பரையின் மண். அந்த நிலத்தின் எழுத்துக்குச் சற்றும் குறைவில்லாத எழுத்துநடை. நாவலின் நெல்வயல்களும் பாசன நிலங்களும் கண்ணுக்குள் நுழைந்து கொள்கிறது. உரையாடல்களில் சிக்கனத்துடன் பேசுகிறது. நமது அலோபதி மருத்துவ முறைகளின் ஏற்படுத்துகிற “சைட் எபக்ட்கள்” பற்றிய விபரங்கள் நாவலின் உண்டு. நம் உடலுக்கு என்ன மாதிரியான மருந்துகளை நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குள் நாம் போய்ச் சேர்ந்துவிடுகிற அளவு இன்று நம்மிடம் மருத்துவமுறைகள் வந்துவிட்டது. எல்லா மருத்து முறைகள் பற்றியும் விளம்பரங்கள் அதுபற்றிய தொலைக் காட்சி விவாதங்கள் எதிர்விளைகள் நமக்குப் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. என்ன ஒரே குறை நம்மிடம் பணமோ அதற்குரிய உடலோ நம்மிடம் இல்லை. மருந்துக்கடைகள்,மருத்துவமனைகள்,மருத்துவப் பணியாளர்கள் போலி டாக்டர்கள்,சித்த ஆயுர்வேத,அக்குபஞ்சர், தொடு முறைசிகிச்சை, யோகமுறை,இயற்கை வைத்தியங்கள் என்று அதற்கெனவே உருவாக்கப்பட்ட மனிதச் சமூக அங்கத்தினர்கள் வைத்தியம் செய்துகொள்கிறார்கள். இதற்கிடையில் யோகாப் பயிற்சி வேறு நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவையணைத்தும் செய்து கொள்வதற்கான நேரம் உள்ளதாவென்று தெரியவில்லை. எழுதப்படிக்கத் தெரியாத பரம ஏழைகள் பரம்பரை ஏழைகளின் பாடு தேவலை. மூன்றாது உலகப் போர்கள் தேவையே இல்லை.நம் மருத்துவமனைகளே போதும் மக்கள் தொகையை சிறப்பாக குறைத்துத்தருவார்கள் என்பது நிச்சயம். இந்த நாவலில் லஷ்மிசிவக்குமார் வலியிறுத்துகிற குறியீடாக அவரது இன்றைய இருப்பே மருத்துவத்தின் மீதான சாட்சி எனலாம். நமக்குக் கிடைக்கும் பதில் இப்படி யாராவது ஒருவருக்கு நடக்கலாம்ங்க..அதவெச்சிட்டு நாம மொத்தமா எல்லாத்தையும் குத்தம் சொல்லக் கூடாது என்பதுதான்.
         நாவல் பற்றிய விமர்சனமாகப் பேச நிறைய இருந்தாலும் கூட மிக தைரியத்துடன் இந்த நாவலை அவரே பதிப்பித்து உள்ளார். முதல் நாவல்வேறு. அதிகமாக தமிழ்நாவல்களை விமர்சிப்பதைப் போல அக்கு அக்காகப் பிரித்துப் பேசுவது சாத்தியமல்ல. நம் இதிகாசங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ராமாயணம் மகாபாரதம் பற்றிய விமர்சனங்கள் இன்றும் பட்டிமன்றங்களில் ஒலிக்கக் கேட்கிறோம்.  படைப்பு வாசிக்க மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அது நம் வாழ்வின் மீது நாமே வைத்துக் கொள்கிற விமர்சனமே. இன்னும் சொல்லப்போனால் இந்த நாவலே கூட இந்த வாழ்வின் மீது படைப்பாளி தான் வைத்த விமர்சனமே எனலாம். இன்று புதிதாக எழுதப்படுகிற எந்தவிதமான படைப்பு அம்சங்களுமே விமர்சன மரபு கொண்டவை. மகத்தான படைப்பாளர் என்று அறியப்பட்ட படைப்பாளியின் படைப்புகளைக் கூட நார்நாராக் கிழிக்கிற விமர்சகர்கள் நம்மிடம் உண்டு. ஆனால் அவர்களால் ஒரு பாராவோ பத்தியோ எழுத தெரியாது. அவர்கள்தான் விமர்சகர்கள். நூலை இலவசமாக கொடுத்துவிட்டால் அதுவே அந்தப்படைப்பாளிக்கு தான் வைத்துக் கொள்கிற ஆப்பு..நீங்கள் ஆட்டோமேடிக்காக இலக்கிய உலகத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
            லஷ்மிசிவக்குமாரும் இந்த நாவலில் சில புதுமையான கதைசொல்கிற முயற்சியை மேற்கொண்ட அதே நேரத்தில் சரளமான வாசிப்பு  முறையைக் கையாண்டிருக்கிறார். வெகுசன வாசிப்பின் சௌகரியத்திற்காக எப்பொழுதும் ஒரு நாவல் சென்று விடக்கூடாது. அதற்கென நாவல் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் அப்பணியை அவர்களுக்கு விட்டுவிடுவோம். நாவலில் வரும் பாத்திரங்களின் உரையாடல்களை இன்னும் பயண்பாட்டு மொழியிலேயே வைத்திருக்கலாம். நாவலுக்குள் நாவலும் சிறுகதைகளும் திரைக்கதை அமைப்புகளும் வைத்திருப்பது நல்ல முயற்சி. வாழ்வின் சுயத்தின் ஒரு பகுதியை படைப்பிலக்கியமாக மாற்றியிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழ்க் குடும்பத்தின் சமகாலப் பொருளாதாரப் பிரச்சனைகளை உரையாடல்களின் மூலமாகவே புரியவைக்க முனைந்திருக்கிறார். நாவலின் அரசியல் களத் தன்மை இல்லாத நிலை பெருங்குறையாகப் படுகிறது. இவ்வுலகில் அரசியல் பின்புலமில்லாமல் ஒன்றுமில்லை. அல்லது அரசியல் படுத்தல்கள் சம்பந்தமான தர்க்கமும் விமர்சனங்களும் தேவை. அத்துனை பிரச்சனைகளுக்குமான அரசியல் மறைபுலம் அவசியமாகிறது. அடுத்து வருகிற படைப்புகளில் இக்கருத்துகளை பரிசீலனைச் செய்தபடி மேன் மேலும் எழுத வேண்டுகிறேன்..எழுத வாய்த்த பொழுதுகள் அற்புதமானது. கொண்டாட்டத்தின் அம்சங்கள். அவர் விரும்பிய படியே இந்த நாவல் திரைப்படமாக வெளிவந்து சிறப்பு கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு கண்ணம்மா- நாவல்- முதல் பதிப்பு- டிசம்பர்-2015
விலை-200 ரூ பக்-300 வெளியீடு-முடிவிலி- கரந்தை- தஞ்சாவூர்-613002
அலைபேசி-999 4384 941-



மிக்க நன்றி சார். உங்களின் பார்வை என்னை ஊக்குவித்து, தெளிவடையச் செய்து அடுத்த கட்டத்திற்கான புரிதலைத் தருகிறது. 
என்றென்றைக்குமான நன்றியும், அன்பும் சார்.

லக்ஷ்மி சிவக்குமார் 


http://elancheral-elancheral.blogspot.in/2016/07/blog-post_28.html

1 comment: