“தூக்கிலிடுபவரின் குறிப்புகள்”
முதலில் இந்நாவல் தமிழ்ப்
படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பார்த்தாள் மிக
விநோதமான ஒன்றாக இருக்கிறது.
திருவிதாங்கூர் மன்னருக்காக தமிழராகிய ஜனார்த்தனன் பிள்ளை
(‘பிள்ளை’ என்கிற பதம் அவர் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதைக்
குறிக்கிறதா என்கிற தரவுகள் ஏதும் இல்லை.
அது அவசியமும் இல்லை. என்றாலும் இப்படி ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை)
என்பவர் குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையைச் செய்ய முன்வருகிறார்.
இவர்கள் ‘ஆரட்சர்’ குடும்பம். அதாவது தூக்கிலிடுபவர்கள் குடும்பம். என்பதால்
இவரது தந்தையும் இதே வேலையைத்தான் செய்து வந்தார். பணி ஓய்வு பெறும்
நிலையிலிருக்கும்போது தன்னுடைய மூத்த மகனாகிய ராமன் என்பவரிடம், ‘நம் குடும்பம்
சார்பாக இந்த வேலையை நீ செய்கிறாயா?’ என்று கேட்கிறார். அவர் இவ்வேலை தனக்குப்
பிடிக்கவில்லை என்றும், தான் தோட்டங்களிலும் கோவில்களிலும் ஏதாவது வேலைசெய்து
பிழைத்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு, வேண்டுமானால் தன் தம்பியாகிய ஜனார்த்தனனிடம்
கேளுங்கள் என்றும் சொல்கிறார். அவரும் தன்னுடைய இரண்டாவது மகனாகிய ஜனார்த்தனன்
பிள்ளையிடம் கேட்க, முதலில் தயக்கம் காட்டுகிறார். பிற்காலத்தில் நிகழவிருக்கும்
வறுமை, பஞ்சம் இவைகளைக் காரணம் காட்டி இவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதை நீ
ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றும். உன் அண்ணனாகிய ராமன் திருமணம் ஆகாதவன். அவன்
வயல்களிலும், கோவில்களிலும் வேலைசெய்து பிழைத்துக்கொள்வான். அப்படித்தான் அவன்
சொன்னான். என்று அறிவுறுத்திய பின்னரும், பிழைப்புச் சிரமங்களை உணர்ந்த பின்னரும்
ஜனார்த்தனன் பிள்ளை இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்.
மன்னராட்சி ஒழித்துக்கட்டபட்ட பின்னரும்கூட சுதந்திர
இந்தியாவிலும் பணிபுரிகிறார். 1940-லிருந்து 30ஆண்டுகள். இந்த காலங்களில் ஜனார்த்தனன்
பிள்ளை 117 குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையைச்
செய்திருக்கிறார்.
இதன் பின்னர் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் ‘சசிவாரியர்’
என்பவர் ஜனார்த்தனன் பிள்ளையைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அவருடைய வேலை
அனுபவங்களை புத்தகமாக போடும் பொருட்டு உதவிகள் கோருகிறார். முதலில் தயங்கமும்
மறுக்கவும் செய்யும் ஜனார்த்தனன் பிள்ளை பின்னர் பணம் குறித்தெல்லாம் பேசிவிட்டு,
ஒரு புள்ளியில் சம்மதிக்கிறார்.
மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ஜனார்த்தனன்
பிள்ளைக்கு, எழுதுவது சிரமமான ஒன்றாக இருக்கிறது. எப்படி எழுதுவது? எங்கிருந்து
தொடங்குவது? என்கிற கேள்விக்கெல்லாம்
ஆலோசனை வழங்குகிறார். பழைய நினைவுகளை மீட்டெடுத்து உங்களுக்கு நினைவினில்
உள்ளவற்றை எழுதுங்கள் என்கிறார். ஜனார்த்தனன் பிள்ளையும் அவ்வாறே செய்து
குறிப்பெடுக்க ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் கனவுகளின் மூலமாகவே குறிப்பெடுப்பதாக
நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி பழைய நினைவுகளை மீட்டெடுக்கையிலும், கனவுகளின் போது
வந்து போகும் பழைய நினைவுகளும் ஜனார்த்தனன் பிள்ளையின் மனசாட்சியை ரொம்பவே
உலுக்கியெடுக்க, பல சந்தர்ப்பங்களில்
குடும்பத்தில் உள்ளவர்களையும், எழுத்தாளரையும் சினம் கொண்டு பேசுகிறார்.
குடும்பத்தில் நிம்மதி இழக்கிறது. ஒரு கட்டத்தில் இனி நான் எழுதப் போவதில்லை
என்றுவிட்டு எழுத்தாளர் கொடுத்துச் சொன்ற நோட்டுப் பேனாக்களை எல்லாம் எடுத்துப்
போகுமாறு சொல்லிவிட்டு, தயவுசெய்து இனி இங்கு வராதீர்கள் என்றும் கடிந்து
கொள்கிறார்.
அந்த எழுத்தாளர் மறுப்பேதும் சொல்லாதவராய், ஜனார்த்தனன்
பிள்ளையின் டீக்கடை நண்பர் ஒருவரிடம் அவர் கொடுத்த நோட்டுப் பேனாவையும், கூடவே தன்
விலாசம் எழுதப்பட்ட ஒரு தபால் அட்டையையும் கொடுத்து, ஜனார்த்தனன் வந்து எனது
விலாசம் கேட்டால் இதைக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
பின்னர் தான் எழுதியது முழுமையடையாத ஏக்கம், மற்றும் குற்ற
உணர்வு ஜனார்த்தனன் பிள்ளையைத் துன்புறுத்துகிறது. அது ஏதோ ஒரு நிம்மதியற்றப்
போக்கைக் கொடுக்க, தனது டீக்கடை நண்பரிடம் எழுத்தாளரின் விலாசம் கேட்கிறார். அவர்
எழுத்தாளர் கொடுத்துச் சென்றவற்றைக் கொடுக்கவே மகிழ்ச்சியில் எடுத்துவந்து தன்
மனதில் உள்ளனவற்றையெல்லாம் முடியுமட்டும் எழுதி எழுத்தாளரின் விலாசத்திற்கு அவர்
கொடுத்துச் சென்ற கடிதத்தை அனுப்பிவைக்கிறார்.
மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மூல நூலின் ஆசிரியரான
சசிவாரியர், ஆரட்சர் ஜனார்த்தனன் பிள்ளையின், அவர் வேலை சம்பந்தப்பட்ட குறிப்புகளை,
தன் புனைவுகளுடன் ஆங்கிலத்தில் ‘Hangman’s
Journal’ என்கிற தலைப்பில் தனது பதிப்பகமான ‘பென்குயின்’ மூலம்
வெளியிடுகிறார்.
எழுத்தாள பெருமக்களான கௌதம சித்தார்த்தன், சிவக்குமார்,
பிரசன்னா, இரா.முருகவேள் ஆகியோர்களின் பேருதவியினால்தான் இப்புத்தகம் தமிழில் சாத்தியப்பட்டதாக
நூல் குறிப்பும் நூலாசிரியரும் சொல்கிறார்கள். நூல் தமிழ் படுத்தப்பட்டிருப்பதைப்
பற்றி சொல்லவேண்டியதே இல்லை. எளிமையான, வாசிக்க இலகுவான மொழி மற்றும் நயம்.!
நூல் குறித்து முக்கியமாக ஒன்றைச் சொல்லவேண்டும். என் போன்ற
புதிதாக எழுத வருபவர்கள் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். ஏனென்றால்... மூன்றாம்
வகுப்புவரையே படித்திருக்கும் ஆரட்சர் ஜனார்த்தனன் எனும் பாத்திரத்தை
எழுதத்தூண்டும் எழுத்தாளரின் பாத்திரம் முக்கியம் வாய்ந்தது.
தமிழுக்கு இந்நூல் மிக அவசியமான ஆவணம்.
தமிழில் இரா.முருகவேள்.
எதிர் வெளியீடு.
எதிர் வெளியீடு.
லக்ஷ்மிசிவக்குமார்.
26/02/2016
தொடர்புக்கு:
Mobile: 9994384941
நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்கின்றேன்