பிறந்த 11 - 12 - 1882
பிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டம்,
எட்டயபுரம்
தொழில் கவிஞர்,பத்திரிக்கையாசிரியர்,
எழுத்தாளர்.
இறப்பு 11 - 9 - 1921
செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே .
*****
அன்னையை வேண்டுதல்:
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் ;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் லறிவு வேண்டும் ;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய் !
*****
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
மனதில் உறுதி வேண்டும் :::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும் ,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும் ;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும் ;
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும் ;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும் ;
மண் பயனுற வேண்டும் ,
வாகன மிங்கு தென்பட வேண்டும் ;
உண்மை நின்றிட வேண்டும் ;
ஓம் ஓம் ஓம் ஓம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நெஞ்சு பொறுக்கு திலேயே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே ,
வஞ்சனைப் பேய்கள் என்பர் - இந்த
மரத்தில் என்பர்; அந்தக்குளத்தில் என்பர்;
துஞ்சுது முகட்டில் என்பர் - மிகத்
துயர்ப் படுவார்; எண்ணிப் பயப்படுவார்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அச்சமில்லை அச்சமில்லை
:::::::::::::::::::::::::::::
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்டபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்டபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பச்சையூ னியைந்த வேற்படைகள் வந்தபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே .
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உலகை நோக்கி:::::::::::
::::::::::::::::
நிற்பதுவே, நடப்பதுவே பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின்நீரோ? -வெறுங் காட்சிப்பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?- அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமே? -இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையு மென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பபவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.
******
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
******
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
*******
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்.
*********
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6
நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
***********
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் \n
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
- மகாகவி பாரதியார்...
......................................................................................
ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு -நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பர் -குலத்
தாழ்ச்சி உயற்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா
அருமை அருமை.... இன்று அவரின் பிறந்த தினம்.. இன்றைக்கு உங்கள் வலைப்பதிவை பார்க்க நேர்ந்தது அதிர்ஷ்டமே.... :)
ReplyDeleteபாரதியாரின் கவிதைகளை படிக்கும் போதே புதுத் தெம்பு கிடைக்கிறது...