உணர்வுகளில் தவித்து உணர்வுகளிலடங்கும் உயிர்…… இப்படிக்கு கண்ணம்மா… (நாவல்)
லஷ்மி சிவக்குமாரின் முதல் படைப்பே நாவலாக உருவாகியிருக்கிறது என்றாலும் சற்று வியப்படையவைக்கிறது. ஒரு தேர்ந்த படைப்பாளனின் பொறுமை, பொறுப்புணர்ச்சி, நேர்மை இந்நாவலில் மிகச் சரியாக அளந்து தரப்பட்டிருக்கிறது. உண்மையாகச் சொல்வதானால் நாவலில் படிக்கிற சுவாரஸ்யம் குறைந்து காணப்பட்டாலும் அதன் பொருண்மையின் கணம் நம்மை இறுகப் பிடித்துக்கொள்கிறது. மனிதனாகப் பிறபெடுத்துவிட்ட உயிரின் தன்மை மற்ற உறவு உயிர்களுடன் கலந்து உருண்டு புரண்டு சண்டையிட்டு சமாதானமாகி அழுது சிரித்து என அடங்குவதும் இயங்குவதும்தான். இந்நாவலின் இழையும் இதுதான். சின்ன பொருண்மை. மெல்லிய ஒரு காதல் இணையத்தில் தொடங்கி இதயத்தில் முடிகிறது. ஒற்றைவரியில் சட்டென்று பொருண்மைகுறித்து சொல்லிவிட்டாலும் இந்த இரு முனைகளுக்கிடையிலும் கடக்கின்ற பாதைகள், நடக்கின்ற நிகழ்வுகள், பரிமாறப்படுகின்ற உணர்வுகள், தவிக்கின்ற தருணங்கள், கடக்கின்ற கசப்பான சம்பவங்கள் எனப் பரபரப்புக்கூட்டிக்கொள்கிறது இந்நாவல்.
ஒரு படைப்பாளனுக்கு கதை சொல்லுகிற திறனும் வாசிப்போரை வயப்படுத்துகிற ஆற்றலும் சமூகவெளியின் தருணங்களை நுட்பமாகப் பார்க்கின்ற பார்வையும் அதற்கு எதிர்வினையாற்றுகின்ற வினைகளும் நம்மை இயல்பான வாழ்வின் அனுபவிப்பிலிருந்து நிறைய யோசிக்க வைக்கிறது. எவற்றையும் எதார்த்த எல்லைகளைக் கடந்துவிடாமல் சொல்லிப்போகிற லஷ்மி சிவக்குமாரின் படைப்பாளுமை இயல்பு மட்டுமல்ல தரநேர்த்தியாகவும் இருக்கிறது. சம்பவங்களின் கோர்ப்பு நாவலின் இடையூறு மையங்களை எதுவும் தோற்றுவித்துவிடாமல் அதனதன் இருப்பில் இருப்பாகி நாவலை வலுப்படுத்துகிறது.
படைப்பாளனின் சொந்த அனுபவத்தின் கிளை விரிப்பாக இந்நாவல் பரிணமித்தாலும் லஷ்மி சிவக்குமாருக்கு நேர்ந்திருப்பது நம்முடைய எதிரிக்குக் கூட நேர்ந்துவிடக்கூடாது. சின்ன கல் இடறல்போல நிகழ்ந்துவிட்ட ஒரு சம்பவம் இன்றைக்கு லஷ்மி சிவக்குமாரைப் புரட்டிப்போட்டுவிட்டது அகல பாதாளத்திற்குள். வலிதான். வலிகள்தான். என்றாலும் எத்தனைப் புதையுண்டாலும் கடப்பாரைக்கு நெகிழாத கற்பாறையைக்கூட சிறு வித்தின் சிறு துளிர் உடைத்துக் கிளம்பிவிடுவதைப்போல அகல பாதாளத்திலிருந்து இந்நாவலின் வழியாக படைப்புலகின் கதவுகளை ஓங்கித் தட்டத் தொடங்கியிருக்கிறார் லஷ்மி சிவக்குமார். எல்லா நிலைகளிலும் நாவலுக்கான மைய இழையிலிருந்து தவறவில்லை என்றாலும் 296 பக்கங்கள் என்பது பெரும் நீட்சிதான். 100 பக்கங்களுக்கு மேலாகக் குறைத்திருக்கலாம். அந்த வலிமையும் திறனும் லஷ்மி சிவக்குமாருக்கும் நாவலுக்கும் இருக்கிறது. எனவே வாக்கிய அமைப்பில் தேவையற்ற நீட்சிகளும் நீர்த்துப்போகிற தன்மைகளும் வாசிப்போரை சற்று தடுமாற வைக்கிறது. முதல் மூன்று பாகங்களிலும் இந்த நீட்சி அலுப்பூட்ட வைக்கிறது. படிக்கிற சுவையைத் தடுக்கிறது. இயல்பாக நிகழ்ந்துவிடுகிற தருணங்களுக்கான கால அவகாசத்தில் பாத்திரங்கள் பேசி முடித்தபின்னரும் உரையாடல்கள் தேங்கி நிற்கின்றன. அதற்கான கால அவகாசத்தைத் தேடியபடி. பல இடங்களில் சிவக்குமார் முன்னிலையில் நின்று சிந்திப்பதானவை சற்று நெருடுகின்றன. பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவற்றை அவற்றின் வழியில் இயங்கவிடுவது நாவலின் போக்கில் சிறப்பாயிருக்கும். இதுதான் சிவக்குமாரின் முதல்நாவல் என்கிற தடத்தைக் காட்டுகின்றன.
இப்படி சிற்சில இடறல்கள் இருந்தாலும் நாவலின் வாசிப்பின் ஆர்வத்தில் தாண்டிப்போக முடிகிறது. உவமைகளும் ஒப்பீடுகளும் லஷ்மி சிவக்குமாரிடம் அபாரமாக விளைந்து செழிக்கின்றன. இதற்குக் காரணம் சமூகத்தின் புறக்கணிப்புகளும் அவமானங்களும் ஏற்படுத்தும் காயங்களும் எந்த மனிதனையும் உத்வேகப்படுத்துகின்றன. வெப்பமேற்றுகின்றன. எனவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த வெப்பத்தை எதிர்கொள்கிற அதைவிட பெரிதான ஓர் அனலை மூட்டுகிற ஆற்றலை லஷ்மி சிவக்குமாரிடத்து காணமுடிகிறது. இத்தனையும் தாண்டி சோர்ந்துவிடத்தான் மனம் துடிக்கும் அல்லது உயிரை விட்டு விடுதலை பெற்றுவிடலாம் என்றுதான் மனம் முடிவெடுக்கும். அதிலிருந்து முற்றிலுமாக விலகி ஒவ்வொடி அடிக்கும் ஒவ்வொரு காயத்திற்கும் தன் வலிமையான எழுத்துக்களை முன்வைத்துப் போராடுகிற லஷ்மி சிவக்குமாரைத் தமிழ்ப் படைப்புலகம் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். தயங்காமல் பாராட்டவேண்டும். முன்னெடுக்கவேண்டும் (மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்). தன்னால் நகரமுடியாத சூழலிலும் எல்லா மனங்களிலும் நகர்ந்துசெல்கிற எழுத்துக்களால் ஓர் ஊர்வலத்தை லஷ்மி சிவக்குமார் தொடங்கியிருக்கிறார் இப்படிக்கு கண்ணம்மா நாவலின் துணைகொண்டு.
உணர்களின் பல்வேறு உந்துதல்களையும் உறுத்தல்களையும் வெளிப்படையாக அதேசமயம் உணர்ச்சிக் குறையாமலும் காட்சிப்படுத்துகிறார். மேலும் தன் நாவலின் அத்தனை கதாபாத்திரங்களின் உணர்ச்சியையும் மதிக்கிற நேர்மையான படைப்புத்தன்மையும் லஷ்மி சிவக்குமாரிடத்து நிறைந்து வழிகிறது. உணர்வுகள் இல்லாத வாழ்க்கை வாழ்வது இயலாதென்பதை உணர்த்துகிறார். ஆகவேதான் தான் சந்தித்த புறக்கணிப்புகளையும் நெருடல்களையும் பெற்ற காயங்களையும் உணர்வின் தளத்தில் மிதக்கவிட்டு அதனைப் பரிசுத்தப்படுத்திச் செம்மையாக்கி தன் வாழ்க்கைப் பயணத்தின் உறுதியான பற்றுக்கோடாக எடுத்துக்கொண்டு பயணிப்பது மிக துணிச்சலானது. அந்த துணிச்சலின் அடையாளம்தான் இந்த நாவல்.
இந்த நாவலின் வெற்றியென்றால் அது காட்சிப்படுத்தலும் எதார்த்தமும் வலிமையாகக் கைகோர்த்து இயங்குவதுதான். இன்னும் தமிழின் புதிய பக்கங்களை அடையாளப்படுத்தும் பல்வேறு படைப்புக்களை லஷ்மி சிவக்குமார் உருவாக்கிப் பதிப்பார் எனும் நம்பிக்கை இந்த முதல் நாவலின் பிறந்து தவழும் எல்லாச் சொற்களும் தந்துகொண்டேயிருக்கின்றன. வாழ்த்துக்கள் லஷ்மி சிவக்குமார். உங்களின் அம்மாவின் அன்பைப் போலவே உங்களின் படைப்புக்களும் பெருகிக் கிளைக்கும். மீண்டும் வாழ்த்துக்களுடன்.
அன்புநிறைவில்
ஹரணி
21.5.16 (கோடைக்காலத்தில் பூத்துக்கிடக்கும் மழைக்காலக் குளிர் போர்வையின் கீழிருந்து- பிற்பகல் 12.30 மணி)

நன்றி ஐயா
லக்ஷ்மி சிவக்குமார்
நூல் வாங்க
9994384941